Published:Updated:

என் 10

கார்த்திகா முகுந்த் ஓவியம்: ஹாசிப்கான்

என் 10

கார்த்திகா முகுந்த் ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
##~##

மயிலாடுதுறையில் டிசம்பர் 11, 1969-ல் பிறந்தவர் ஆனந்த். அப்பா விஸ்வநாதன், தென்னக ரயில்வேயில் பொது மேலாளர். அம்மா சுசீலா. இவர்தான் ஆனந்த்துக்கு சதுரங்கத்தில் ஆர்வம் வரக் காரணம். அண்ணன், சிவக்குமார், அக்கா, அனுராதா.

 பள்ளிப் படிப்பு சென்னை எழும்பூர் டான்பாஸ்கோவில். பிறகு, லயோலா கல்லூரியில் பி.காம் சேர்ந்தார். இவரது ஹாபி, புத்தகங்கள், நீச்சல், இசை. தமிழில் பிடித்த நடிகர் ரஜினிகாந்த். பிடித்த உணவில் முக்கிய இடம் ரசம் சாதம். நெருங்கிய நண்பர்கள் செல்லமாக 'விஷி’ என்று அழைப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஆரம்ப கால செஸ் அனுபவம் பற்றி ஆனந்த்  குறிப்பிடுகையில், ''ஆறு வயதில் செஸ் விளையாடத் தொடங்கினேன். அப்போது ஒரு வருடம் ஃபிலிப்பைன்ஸில் வசித்தேன். செஸ் தொடர்பான ஒரு டி.வி. ஷோ, நான் பள்ளி செல்லும் நேரத்தில் ஒளிபரப்பாகும். என் அம்மா அதில் கேட்கப்படும் வினாக்களைக் குறித்து வைத்திருப்பார். நான் வீடு திரும்பியதும் இருவரும் சேர்ந்து அதற்கான விடைகளைக் கண்டுபிடித்து அனுப்புவோம். அப்படியே நிறையப் புத்தகங்கள் பரிசு வாங்கினேன். ஒரு கட்டத்தில் அவர்கள், 'நீங்கள் உங்களுக்குத் தேவையான  புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தயவுசெய்து உங்கள் விடைகளைப் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டாம்.’ என்று சொல்லிவிட்டார்கள்.'' என்று சிரிக்கிறார்.

என் 10

 வழக்கமாக நாள்தோறும் 10 மணி நேரம் பயிற்சி எடுப்பவர், போட்டிகள் நடைபெறும் நாட்களில் 13 மணி நேரம் வரை பயிற்சி எடுப்பார். 1983-ல் தமது 14 ஆவது வயதில், தேசிய சப் ஜூனியர் போட்டியில் பட்டம் வென்றார். 15 ஆவது வயதில் இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்ற இளம் இந்தியர் என்ற பெருமை கிடைத்தது. மிக நெருக்கத்தில் பலமுறை தவறவிட்ட உலக செஸ் சாம்பியன் பட்டம், 2000-ல் கிடைத்தது. இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனந்த்.

 ரசிகர்களால் 'டைகர் ஆஃப் மெட்ராஸ்’ எனக் கொண்டாடப்படுபவர். 2007, 2008, 2010-ஆம் ஆண்டுகளிலும் உலக சாம்பியன் நம் ஆனந்த். 2010 போட்டியில் பங்கேற்கச் செல்லும்போது வானிலை காரணமாக அவரது விமானம் ரத்து செய்யப்பட்டது. 40 மணி நேரம் சாலைப் பயணம் செய்து போட்டியில் கலந்துகொண்டு, பட்டத்தை வென்றார். அந்தத் தங்கப் பதக்கத்தை ஏலம்விட்டு, வந்த தொகையை ஆதரவற்றக் குழந்தைகளுக்கான சேவை நிறுவனத்துக்கு அளித்தார்.

 ஹைதராபாத் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்க இருந்தது. ஆனால், குடியுரிமை தொடர்பாக சிலர் விவாதங்கள் எழுப்பியதால், அது தடைப்பட்டது. அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அதற்காக வருத்தம் தெரிவித்ததோடு, அவருக்கு உகந்த நேரத்தில் அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். ஆனால், ஆனந்த் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

உலகின் தலைசிறந்த செஸ் விமர்சகர்கள், பத்திரிகையாளர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, ரஷ்யன் செஸ் மேகஸின் வழங்கும் செஸ் ஆஸ்கார் விருது 1997, 98, 2003, 04, 07, 08 ஆண்டுகளில் ஆனந்துக்கு வழங்கப்பட்டது. இந்திய அளவிலும் அர்ஜுனா, பத்மபூஷண், பத்மவிபூஷண் எனப் பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். 18 ஆவது வயதிலேயே பத்மஸ்ரீ பட்டம் பெற்றார்.

 'செஸ் தொடர்பான நிகழ்ச்சிகள் ஜனவரி முதல் ஜூன் வரை ஐரோப்பாவில் அதிகம். அதனால், ஸ்பெயினில் அதிக நாட்கள் தங்குவார். வருடத்தின் பிற்பகுதியில், தாய் நாடான இந்தியாவுக்கு வந்துவிடுவார்.

 செஸ் ஆட்டக்காரராக வர விரும்பும் குழந்தைகளுக்கு இவர் கூறும் அறிவுரை, ''செஸ் விளையாடுவது ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது போன்றது. புதிய மொழி குறித்த புத்தகங்கள் படிப்பதால் மட்டும், அம்மொழி நமக்குக் கைவராது. பேசிப் பழகினால்தான், அம்மொழியில் பரிச்சயம் ஏற்படும். அப்படித்தான் செஸ்ஸும். விளையாட விளையாடத்தான் மாஸ்டராக முடியும்.''

''விளையாட்டைக் கேரியராக எடுத்துக்கொண்டால், அது நம்மிடம் நிறைய எதிர்பார்க்கும். என் மகன், தன் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புவது, அவரது பணிவைத்தான்'' என்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்தின் மனைவி அருணா. அமைதியும் பணிவும் விஸ்வநாதன் ஆனந்தின் கூடவே பிறந்த குணம்!