Published:Updated:

கிராமத்து விளையாட்டு

கிட்டிப் புல்படங்கள் :இரா.முத்துநாகு

கிராமத்து விளையாட்டு

கிட்டிப் புல்படங்கள் :இரா.முத்துநாகு

Published:Updated:
##~##

நம் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றாலும், திரும்பின பக்கம் எல்லாம் கிரிக்கெட்தான் அறிவிக்கப்படாத தேசிய விளையாட்டு. இந்தக் கிரிக்கெட்டுக்கு எல்லாம் தாத்தா ஒண்ணு இருக்கு... அதுதான் கிட்டிப் புல்.

நம் தற்காப்புக் கலைகளில் முக்கியமானது சிலம்பாட்டம். இதை விளையாட்டாகவும் சொல்லிக்கொடுப்பதால், இதற்குக் கம்பு விளையாட்டு என்றும் கீந்து விளையாட்டு என்றும் பெயர் உண்டு. இதில் இருந்து பிரிந்து வந்ததுதான் கிட்டிப் புல். இதுக்கு கீந்துக் கிட்டி, கிட்டிப் பிள்ளை எனப் பல பெயர்கள். கீந்துக் குச்சி என்பது ஒரு முழம் அளவு இருக்கணும். அதில் மூன்றில் ஒரு பங்கு இருப்பது பிள்ளைக் குச்சி. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னாடியே இது எல்லாம் சரியா இருக்கான்னு அளந்து பார்த்துப்பாங்க. பிறகு, மண் சாலையில் கீந்துக் குச்சியை வைக்க தலைக்குழிப் பள்ளமும், பிள்ளைக் குச்சியை அடிக்கிறதுக்கு தலைக்குழிக்கு அருகே குறுக்கில் பிள்ளைக் குழியையும் தோண்டணும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை, இரண்டு அணிகளாக விளையாடு வாங்க. கெட்டிக்காரச் சுட்டிகள் இரண்டு பேர் அணித் தலைவர்களாக இருப்பாங்க. அவர்கள் தங்கள் அணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யணும். இதுக்காக விளையாட விருப்பம் உள்ள பிள்ளைகள், இரண்டு இரண்டு பேர்களாக தனியாகப் போய்... தங்களுக்குள் பெயர்களை வெச்சுட்டு வருவாங்க. ''மாம்பழம் வேணுமா? பலாப்பழம் வேணுமா?'' ''புலி வேணுமா... சிங்கம் வேணுமா?'' என்று விதன் விதமாகக் கேட்பாங்க. அணித் தலைவர்கள் சொல்லும் பதிலுக்கு ஏற்ப பசங்க பிரிஞ்சுக்குவாங்க. ஓர் அணிக்கு குறைந்தது ஆறு பேர். சுட்டிகள் அதிகம் இருந்தால் எட்டு, பத்து என்றும் எண்ணிக்கை கூடலாம். பிறகு, முதலில் யார் கிட்டி கீந்துவது (அடிப்பது) என்று முடிவு செய்யணும். காசு இருந்தால் ராஜாவா... மட்டியா என்று கேட்டு, தூக்கிப் போடுவாங்க. காசு இல்லாத சில சுட்டிகள், உடைந்த ஓட்டில் எச்சிலைத் துப்பி, 'வானமா? எச்சிலா?’ என்று கேட்டு, மேலே தூக்கிப்போட்டு முடிவு செய்வாங்க. இனி, ஆட்டம் ஆரம்பம்.

கிராமத்து விளையாட்டு

டாஸில் ஜெயித்த அணி, கிட்டியைக் கீந்தத் தயாராவார்கள்... கிரிக்கெட் பாஷையில் சொல்லணும்னா பேட்டிங்! எதிர் அணியினர் பறந்துவரும் பிள்ளைக் குச்சியைப் பிடிக்க நாலா பக்கமும் நிற்பாங்க. அதாவது... ஃபீல்டிங். கீந்தப்போகும் அணியின் தலைவரைப் பெரிய உருட்டி என்பார்கள். மற்றவர்கள் சின்ன உருட்டிகள். பெரிய உருட்டி ஒரு பக்கமாக நின்று, எதிர் அணியினர் எங்கே எல்லாம் நிற்கிறார்கள். எப்படி அடித்தால் அவர்களால் பிடிக்க முடியாது என்று கவனித்து, தனது அணியில் கீந்தும் சின்ன உருட்டிக்குக் கண் அசைவிலேயே சொல்வார்.    

சின்ன உருட்டி, கிட்டிப் பிள்ளையைக் கீந்திவிட்டு தலைக்குழியில் கிட்டிக் குச்சியை வைப்பான். பறந்துவரும் கிட்டிப் பிள்ளையை எதிர் அணியினர் பிடித்துவிட்டால், துவக்கத்திலே ஆட்டம் போய்விடும். பிடிக்காமல் விட்டு விட்டால்... உடனே கிட்டிப் பிள்ளையை எடுத்து, கிட்டிக் குச்சி மீது குறிபார்த்து எறிவார்கள். கீந்துக் குச்சி மீது பிள்ளைக் கிட்டி பட்டுவிட்டால் 'அவுட்’. சில சமயம் கீந்துபவர்கள் கிட்டிக் குச்சியைத்  தலைக்குழியில் வைக்காமல் கையிலேயே 'பேட்’ மாதிரி பிடித்து நிற்பார்கள். எதிர் அணியினர், கிட்டிப் பிள்ளையை கிட்டிக் குச்சியைப் பார்த்து எறிவார்கள். அதைக் கீந்தியவர் தடுத்து அடிக்க வேண்டும். அடிக்காமல் விட்டுவிட்டால்... ஆட்டம் போய்விடும். 'பேட்’டால் அடித்து விட்டால், அவுட் ஆக்குகிற கடைசி வாய்ப்பும் மிஸ் ஆகி, எதிர் அணிக்குப் பிரச்னை ஆரம்பிக்கும்.

பேட்டிங் டீமின் தலைவரிடம் கிட்டிப் பிள்ளை தரப்படும். அதன் பின்பு, கிட்டிப் பிள்ளையைப் பிடிக்க நின்றுகொண்டு இருக்கும் எதிர் அணியினர், ஜோடிகளாக வந்து நிற்பார்கள். அவர்கள் முதுகில் பேட்டிங் அணியினர் 'ஜங்’ என குதிரை சவாரி ஏறி உட்கார்ந்துகொள்வார்கள். பிறகு, அணித் தலைவர் கிட்டியைக் கீந்த, எதிர் அணித் தலைவர் ஒற்றை ஆளாக நின்று பிடிக்க முயற்சிப்பார். ஒத்தைக்கு ஒத்தையாகத் தொடரும் இந்த ஆட்டம், கிட்டிப் பிள்ளையைப் பிடிக்கிற வரையோ அல்லது கிட்டிக் குச்சி மீது கிட்டிப் பிள்ளையைக் குறிபார்த்து எறியும் வரையோ நீடிக்கும். அது வரை... எதிர் அணியினர் குதிரைகளாகச் சுமந்துகொண்டே இருப்பார்கள். மூன்று முறை தொடர்ச்சியாக ஆட்டம் இழக்காமல் கிட்டிப் பிள்ளையை அடித்துவிட்டால்... அடித்த கிட்டி, பறந்து விழும் தூரம் அளவுக்கு குதிரை சவாரி போவார்கள். இதில் குதிரைகள் ஒன்றை ஒன்று முந்த, அடியும் கிடைக்கும். இப்படிச் சவாரி போவதற்கு, 'ராஜா வீட்டுக்குப் பட்டணம் போறது’ என்று பெயர். இப்படியாக ஆட்டம் தொடர்ந்து நடக்கும்.

கொஞ்சம் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டிய விளையாட்டு. சில சமயம் பிள்ளைக் குச்சியின் கூர் முனை முகத்தைத் தாக்கி காயம் ஏற்படுத்தலாம். தில்லான கிராமத்துச் சுட்டிகளின் ஃபேவரிட் விளையாட்டு கிட்டிப் புல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism