Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கல்பனா சோழன் ஹாசிப்கான்

##~##

நந்து, வருண், மீரா, துரை, அனிதா எல்லோரும் ஒரே காரில் வந்து இறங்கியதைப் பார்த்த மாயா டீச்சருக்கு ஆச்சர்யம்... ''என்ன, ஏதாவது பார்ட்டிக்குப் போய்ட்டு வர்றீங்களா?' என்று கேட்டார்.

'அப்படி எல்லாம் இல்லை டீச்சர். ஒரே அபார்ட்மென்ட்ல இருக்கோம். ஒரே இடத்துக்குத்தான் வர்றோம். அப்புறம் எதுக்கு தனித் தனி வண்டி? அதுவும் பெட்ரோல் விக்கிற விலையிலே...'' -பேசிக்கொண்டே கார் கதவுகளை மூடினார் துரையின் அண்ணா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'ரொம்ப நல்ல விஷயம்... கேட்கவே சந்தோஷமா இருக்கு தெரியுமா?''  மகிழ்ச்சியுடன் சொன்னார் மாயா டீச்சர்.

'எது நல்ல விஷயம்? இப்படி இடிச்சுக்கிட்டு உட்கார்ந்து வந்தாத் தெரியும்'' என்று முனகினான் வருண்.

'இதுல இருக்கிற நல்ல விஷயம் தெரியணும்னா... பெட்ரோல் பத்தி தெரிஞ்சுக்கணும்.' என்றார் டீச்சர்.

'இதுல என்ன தெரியணும்?   பெட்ரோல்னா பெட்ரோல்.' படக்கென்று பதில் சொன்ன துரையிடம், 'அது சரி. ஆனால், அது எங்கே இருந்து வருது சொல்லு?' என்றார் மாயா டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

'என்ன டீச்சர்? இன்னிக்கு ரொம்ப ஈஸியாக் கேட்கிறீங்க.. பெட்ரோல், பெட்ரோல் பங்கில் இருந்து வருது.' துரையின் பதிலைக் கேட்ட நந்து, 'இந்தக் கிண்டல் எல்லாம் வேண்டாம்' என்று எச்சரித்துவிட்டு, 'டீச்சர், நீங்க சொல்லுங்க?' என்று சீரியஸாகக் கேட்டான்.  

'பெட்ரோலியத்தில் இருந்து வருது.'  

'பெட்ரோல்தான் கேள்விப்பட்டு இருக்கோம். பெட்ரோலியம்னா... அது எங்கே கிடைக்குது?' - இது என்ன புதுக் கதை என்பது போல குழம்பினாள் மீரா.

'பெட்ரோலியம், கடலுக்கு அடியிலே இயற்கையாகவே கிடைக்கிற கச்சா எண்ணெய்' என்ற மாயா டீச்சர், அனைவரையும் மந்திரக் கம்பளத்தில் ஏற்றிக்கொண்டார். அது ஓர் எண்ணெய்க் கிணற்றுக்குப் பறந்தது.

'பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இந்த பூமியில் கடல்தான் நிறைந்து இருந்தது. அந்தக் கடலுக்கு உள்ளே இருந்த கோடிக்கணக்கான உயிரினங்கள், செடி, கொடிகள் எல்லாம் இறந்து, கடலுக்கு அடியில் போய் விழுந்தன. அப்படியே அடுக்கடுக்காப் படிஞ்சு, அதுக்கு மேலே  ஆயிரக்கணக்கான அடி களுக்கு மணல் விழுந்து அழுத்தி, பாறையா மாறியது.  இப்படியே பல நூறு ஆயிரம் வருஷங்களாக சூடும் அழுத்தமும் சேர்ந்து பெட்ரோலியம் உருவாச்சு.' என்றார் டீச்சர்.

'அடேங்கப்பா...' சுட்டிகளின் கண்கள் நம்ப முடியாமல் விரிந்தன.  

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

'ஒரு ஸ்பாஞ்சுக்கு உள்ளே சிக்கிய தண்ணி மாதிரி, இந்தப் பெட்ரோலியம், பாறைகளுக்கு நடுவில் சிக்கி இருந்தது'

'டீச்சர், கடலுக்கு அவ்வளவு கீழே இருக்கிற பெட்ரோலியம் எப்படி வெளியே வரும்?' குழப்பம் மேலும் கூடிப்போய் கேட்டாள் மீரா.

'பழைய காலத்தில்... ஆற்றிலும், குளத்திலும், பாறை இடுக்கிலும் மிதக்கிற  எண்ணெயைத்தான்  சேகரிச்சுப் பயன்படுத்தினாங்க. ஆனால், நாள் ஆக ஆக, கடலுக் குள்ளே பாறைகளைக் குடைஞ்சு ஓட்டை போட்டு, எண்ணெய்க் கிணறு வெட்டி வெளியே எடுக்க ஆரம்பிச்சாங்க.' என்றார் டீச்சர்.

'இவ்வளவு பெரிய கடலில் எங்கே பெட்ரோலியம் இருக்குன்னு எப்படிக் கண்டுபிடிப்பாங்க?' அனிதாவுக்கு தலை வெடித்துவிடும் போல் இருந்த கேள்வியைச் சற்று உரக்கவே கேட்டுவிட்டாள்.

'ஆராய்ச்சியாளர்கள், பாறை அடுக்குகள் இருக்கிற விதத்தை ஆராய்ச்சி செய்துபார்த்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கச்சா எண்ணெய் இருக்கும்னு சொல்வாங்க. அந்த இடத்தில் பெட்ரோலியக் கம்பெனிகள், எண்ணெய்க் கிணறு தோண்டுவாங்க.'

'கடலுக்குள்ளே கிணறா? மேலே இருந்து எட்டிப் பார்த்தாத் தெரியுமா?' அவசரமாகக் கேட்டாள் அனிதா.

'குறைஞ்சது பல கிலோ மீட்டர் ஆழம் தோண்டினாதான் கச்சா எண்ணெய் கிடைக்கும். அதுவும் எல்லா இடத்திலேயும் கிடைக்காது 100.கிணறு தோண்டினால், 40 கிணறுகளில்தான் எண்ணெய் கிடைக்கும். அப்படி கிடைக்கிற எண்ணெயைக் குழாய் மூலமா மேலே கொண்டுவருவாங்க.'

'அதை அப்படியே லாரியில் ஏற்றி  பெட்ரோல் பங்குக்குக் கொண்டு வந்துருவாங்க..' என்று முந்திரிக்கொட்டை மாதிரி சொன்னான் துரை.

'இல்லை. இப்படி கிடைக்கிற கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பு ஆலைக்குக் கொண்டுபோய் சுத்தம் செய்வாங்க. இந்தக் கச்சா எண்ணெயில் இருக்கிற பல எரிபொருட்களோட கொதிநிலைக்கு ஏற்ற மாதிரி, தனித் தனியாப் பிரிப்பாங்க.' என்றார் மாயா டீச்சர்.

'புரியலையே..' என்றாள் மீரா.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

'உதாரணமாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயிலே, 43% பெட்ரோல். 22% டீசல், 9% ஜெட் எரிபொருள், 3, 4% சமையல் எரிவாயு என்று பல விதமான எரிபொருட்களும் இருக்கு. இதை எல்லாம் அவற்றின் கொதிநிலைக்கு ஏற்ப, தனித் தனியாகப் பிரிக்கணும். அதுக்கு அப்புறம்தான் குழாய்கள் வழியா அந்தந்த இடத்துக்கு போய்ச்சேரும்.''

இதை எல்லாம் கேட்கக் கேட்க, வருணுக்கு ஆர்வம் கூடியது. 'இந்த விதவிதமான எரிபொருட்களை எதுக்கு எல்லாம் பயன் படுத்துறாங்க?'

'இப்படி சுத்தப்படுத்தி, கொதிநிலை அடிப்படையில் பிரித்த பெட்ரோலியப் பொருட்களை வாகனங்கள், ட்ராக்டர்கள், ஆலை இயந்திரங்கள், ஜெட் இயந்திரங்கள் மற்றும்  வீடுகளுக்கு சமையல் எரி வாயு, தார், மெழுகு, டயர் வரை பல விதமாப் பயன்படுத்துறாங்க' என்றார் டீச்சர்.

'பெட்ரோல்னா, கார், டூ வீலரோட சாப்பாடுன்னு நினைச்சுட்டு இருந்தேன்.' என்றாள் அனிதா.

'அது மட்டும் இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகிற நிறையப் பொருட்களில்... கிட்டத்தட்ட 6,000 பொருட்கள்  பெட்ரோலியப் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கியதுதான்.' என்றார் டீச்சர்.

'அப்படியா?'

'ம்... ஏதாவது ஒரு பொருளைச் சொல்லுங்க பார்ப்போம்?' -சுட்டிகளுக்கு சவால்விட்டார் மாயா டீச்சர்.

கேட்டு முடிக்கும் முன், 'மேக் அப் சாதனங்கள்' என்றாள் அனிதா.

'குட். எப்படி தெரியும்?'  

'எனக்கு லிப்ஸ்டிக் போட்டுவிடச் சொல்லி கேட்டப்போ... எங்க அம்மா சொன்னாங்க.'  என்றாள்.  

'பெயின்ட்.. பொங்கலுக்கு எங்க வீட்டில் பெயின்ட் அடிக்க வந்த அங்கிள் சொன்னாரு' என்றான் வருண்.

'பால் பாயின்ட் பேனா, பாலியஸ்டர் துணி, சோப்பு... இப்படி நிறையச் சாமான்கள் சொல்லிட்டே போகலாம். இப்படி பெட்ரோலியப் பொருட்கள் இல்லாமல் நம் வாழ்க்கை இல்லைங்கிற மாதிரி ஆகிப் போச்சு.'  என்றார் டீச்சர்.

'அதுக்கு என்ன இப்போ?' ஆரம்பத்தில் கேட்ட துரையின் கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பது புரிந்துவிட்டது.

'இதிலே என்ன விஷயம்னா, பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இயற்கையாக உருவான இந்த பெட்ரோலியம், அள்ள அள்ளக்  குறையாத அமுதசுரபி இல்லை. இந்தக் கருப்பு வைரம் குறைஞ்சுட்டே வருது. இருக்கிற எண்ணெய்க் கிணறுகள் வற்றிட்டு வருது. புதுசா எண்ணெய்க் கிணறுகளோ, சுத்திகரிப்பு ஆலைகளோ வரலை. இருக்கிற ஆலைகளும் பெட்ரோல் சுத்திகரிக்கும்போதும், எரிபொருட்களை வாகனங்கள் பயன்படுத்தும்போதும்  காற்றை நிறைய அசுத்தம் செய்யுது.' என்றார் டீச்சர்.

'இப்போ நல்லாப் புரிஞ்சுருச்சு டீச்சர். தனித்தனியா கார்ல வந்தா ஏற்கெனவே குறைஞ்சுட்டு வர்ற பெட்ரோல் இன்னும் சீக்கிரமாக் காலி ஆயிடும். அதோடு, பெட்ரோல் பயன்படுத்தும்போது காற்றும் அசுத்தம் ஆகுது. ஆனால், இன்னிக்கு மாதிரி எல்லாரும் ஒண்ணா வந்தா பெட்ரோலும் மிச்சம். இயற்கையும் கெடாது. இனி எப்போது எல்லாம் முடியுமோ... அப்போது நாங்க ஒண்ணாவே வர்றோம்.' துரை சொன்னதைக் கேட்டு  எல்லாரும் கை தட்டினார்கள்.  

'அப்போ, பெட்ரோலே இல்லாமப் போகும்போது என்ன செய்வோம்?' என்று ஒருவரோடு ஒருவர் பேசியவாறு, மந்திரக் கம்பளத்தில் இருந்து தரையில் இறங்கினார்கள்.

'இப்போது... காற்றாலை மின் சக்திகளைப் பயன்படுத்த ஆரம்பிச்சு இருக்காங்க. ஆனால், நம்ம மனுஷங்க தேவைக்கு பெட்ரோல் மாதிரி அதெல்லாம் கை கொடுக்கலை. ஆராய்ச்சி தொடர்ந்து நடந்துட்டு இருக்கு. நீங்ககூட யாராவது ஒருத்தர் பெட்ரோலுக்கு மாற்றுக் கண்டுபிடிக்கலாம்' என்று நம்பிக்கையும் கனவுமாக கை அசைத்து வழி அனுப்பி வைத்தார் மாயா டீச்சர்.