Published:Updated:

கிராமத்து விளையாட்டு

பொன்.காசிராஜன் இரா.முத்துநாகு

கிராமத்து விளையாட்டு

பொன்.காசிராஜன் இரா.முத்துநாகு

Published:Updated:

வேகம், விவேகம், சிக்கலான நேரத்தில் சவாலைச் சமாளிக்கும் திறமை, அத்துடன் ரொம்ப ஜாலியாகப் பொழுதுபோக்குவதற்கான ஒரு விளையாட்டு... பம்பரம்.

பம்பரம் எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். விளையாட்டைத் தொடங்கும் முன், ஓர் அடி சுற்றளவுகொண்ட வட்டத்தைப் போட வேண்டும். அதன் நடுவில் மாங்கொட்டை அல்லது மரக்குச்சியை வைத்து, பம்பரத்தால் குறிவைத்துக் குத்துவார்கள்.

முதல் ஆட்டத்தில் வட்டத்துக்கு வெளியே பம்பரம் குத்தினாலும்,  அவுட் ஆனதாகக் கருதாமல் ஏற்றுக்கொள்வார்கள். இதனால், முதலில் பம்பரத்தைக் குத்தும்போது,  'வெளியே போனாலும் சேர்த்துக்கோ... உள்ளே என்றாலும் சேர்த்துக்கோ’ எனச் சொல்லிக் குத்துவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வட்டத்துக்குள் இருக்கும் பொருள் வெளியேறும் வரை அனைவரும் குத்திக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி குத்தும்போது, கோட்டுக்கு வெளியே பம்பரக் குத்து விழுந்தால், அவரது பம்பரக் கட்டையை வட்டத்துக்குள் வைக்க வேண்டும்; அதை அனைவரும் குத்தி வெளியேற்று வார்கள்.

கிராமத்து விளையாட்டு

ஒருவேளை கோட்டுக்கு உள்ளே இருக்கும் பொருளை யாராவது குத்தி வெளியேற்றிவிட்டால், அனைவரும் பம்பரத்தைத் தரையில் சுற்றவிட்டு, சாட்டையால் பம்பரத்தைச் சுண்டித் தூக்கி கையால் பிடிக்க வேண்டும். இதற்கு 'அபீட்’ என்பார்கள்.

கடைசி அபீட் யார் எடுக்கிறாரோ, அவர் பம்பரத்தைக் கோட்டுக்குள் வைப்பார். மற்றவர்கள் அதைக் குத்துவார்கள்.

கோட்டுக்குள் பம்பரத்தை வைத்துள்ளவர், குத்தும் பம்பரத்தைப் பிடிப்பதற்காக, முன் பக்கம் தயாராக நிற்பார். குத்தும் பம்பரத்தை இவர் பிடித்துவிட்டால், அந்தப் பம்பரத்தைக் கோட்டுக்குள் ஏழு ஆட்டம் வரை வைக்க வேண்டும். அதேபோல், சாட்டையால் பம்பரத்தைச் சுற்றும்போது பம்பரம் தவறி விழுந்தால், அதைக் கோட்டுக்குள் பம்பரம் வைத்துள்ளவர் இரண்டு கையால் அமுக்கி, 'செத்த கட்டை’ எனச் சொல்லி கோட்டுக்குள் வைப்பார்.

கோட்டுக்குள் இருக்கும் கட்டைகள் அனைத்தையும் குத்தி வெளியேற்றிவிட்டால், அடுத்த கணம் எல்லோரும் அபீட் எடுப்பார்கள். அப்போது, யார் அபீட் எடுக்க வில்லையோ... அவர் தனது பம்பரத்தைக் கோட்டுக்குள் வைக்க வேண்டும்.

கிராமத்து விளையாட்டு

பம்பர விளையாட்டு என்பது இவ்வளவுதான். ஆனால், பம்பரத்தை உருவாக்குவதும் அலங்கரிப்பதுமே சுவாரசியமானதனி விளையாட்டாக இருக்கும்.

கெட்டியாகவும் அதே சமயம் எடைக் குறைவாகவும் இருக்கும் பூவரசு, கொடுக்காப்புலி, கிளுவை, கொய்யா போன்ற மரங்களே பம்பரம் செய்ய ஏற்றவை.

தச்சர்களிடம் கேட்டால், இந்த மரங்களில் ஏதேனும் ஒன்றில் ஒரு சிறிய துண்டைச் செதுக்கி, ஆணி பொருத்தி, பம்பரமாக்கித் தருவார்கள். ஆணியைப் பாறாங்கல்லில் தேய்த்து கூராக்கிக்கொண்டால், உங்கள் பம்பரம் மற்ற பம்பரங்களை நடுங்கவைக்கும் சூரனாகிவிடும். அழகுக்கு சைக்கிள் ட்யூபில் உள்ள காற்றடைப்பானின் திருகினால் ஆணி உள்ள பகுதியைச் சுற்றி, 'பூண்’ என்று சொல்கிற அழகுப்படுத்துதலும் உண்டு.

பம்பரம் தயாரானதும், அடுத்து தேர்ந்தெடுக்க வேண்டியது ஒரு நல்ல சாட்டையை. புளிச்சக்கீரை நாரைக்கொண்டு திரிக்கப்படும் சாட்டை, வழுவழுப்பாகவும் கெட்டியாகவும் இருக்கும். இந்தச் சாட்டையை வேகமாகச் சுற்றினாலும் சூடேறாது. அது கிடைக்காத சூழலில் நூல் கயிற்றைத் தேர்ந்தெடுக்கலாம். 

கிராமத்து விளையாட்டு

சாட்டை ஒரு கை  நீளத்துக்கு இருந்தால்தான் எட்ட நின்று குத்த முடியும். குத்திய பின்பு அதிக நேரம் வேகமாகச் சுற்றும். சாட்டையை அளவு பார்த்து நறுக்கும்போது இதை மனதில் கொள்வது அவசியம். அதேபோல, சாட்டையின் மேல் பகுதியில், கைப் பிடிமானத்துக்கு முடிச்சுப் போடும்போது பெரு முடிச்சாகப் போட்டுக்கொண்டால்,  இறுக்கமாகவும் வழுவாமலும் இருக்கும்.

அவ்வளவுதான். இனி வீட்டில் இருந்து அம்மாவோ, அப்பாவோ அழைக்கும் வரை விளையாடிக் கொண்டே இருக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism