Published:Updated:

ஷக்கலக்க சாக்கோ பை!

கே.யுவராஜன்படங்கள் : வி.செந்தில்குமார்ஒருங்கிணைப்பு : கே.ஜெயராமன்

ஷக்கலக்க சாக்கோ பை!

கே.யுவராஜன்படங்கள் : வி.செந்தில்குமார்ஒருங்கிணைப்பு : கே.ஜெயராமன்

Published:Updated:
##~##

பால் பிடிக்காத பிள்ளைகள்கூட இருக்கலாம்... ஆனால், சாக்லேட் சாப்பிடாத சுட்டிகள் இருக்காங்களா? என்னதான் டாக்டர், அம்மா, அப்பா ஸ்ட்ரிக்ட்டா சொன்னாலும் அவங்களுக்கு 'பெப்பே’ காட்டிட்டு, நைஸா சாக்லேட் சாப்பிடுவோம்தானே!

 இப்படி நம்ம மனசை அநியாயத்துக்கு கொள்ளை அடிக்கிற அந்த சாக்லேட் தயாராவதை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்? சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் இருக்கும் லோட்டே (LOTTE) சாக்லேட் ஃபேக்டரிக்கு படை எடுத்துக் கிளம்பினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வாருங்கள்! வாருங்கள்! எங்களின் பெரு மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களே'' என்று வரவேற்ற ஃபேக்டரி மேனேஜர் விஜயகுமார், ''சரியாகச் சொல்லணும்னா, நீங்கள்தான் எங்களின் முதலாளிகள்'' என்றார்.

தட்டு நிறைய சாக்லேட்களை நீட்ட, கை நிறைய அள்ளிக்கொண்டார்கள் சுட்டிகள்.  

''ஒரு சின்ன அறிமுகம். 'சௌத் கொரியா’ கேள்விப்பட்டு இருக்கீங்களா?'' என்று கேட்டார்.

''ஓ! தெரியுமே...'' என்றனர் சுட்டிகள்.

ஷக்கலக்க சாக்கோ பை!

''அங்கு பிரபலமான கம்பெனி லோட்டே. 2004-ஆம் ஆண்டு இந்தியாவில் தன் கிளையை ஆரம்பிச்சது. இங்கே 'பாரீஸ்’ என்ற சாக்லேட் கம்பெனி இருந்தது. அதை விலைக்கு வாங்கி, இந்த கம்பெனியை 2010-ல் ஆரம்பித்தோம். தற்போது 'சாக்கோ பை’ என்கிற புது வகை சாக்லேட்களை தயாரிக்கிறோம். இந்தியாவில் சாக்கோ பை தயாரிக்கும் ஒரே நிறுவனம் இதுதான்'' என்றார் விஜயகுமார்.

''அதென்ன சாக்கோ பை?'' என்று கேட்டாள் மதுமிதா. ''ஐயே... நீ சாப்பிட்டது இல்லையா? ஸ்ஸ்ஸ்... சூப்பரா இருக்கும்!'' என்றான் சாய்சுதன். சொல்லும்போதே அவன் வாயில் நீர் ஊறியது.

விஜயகுமார் விளக்கினார், ''இரண்டு பிஸ்கெட்கள் நடுவில் க்ரீம், இந்த மூன்றையும் கவர் செய்த மாதிரி சாக்லேட். இதுதான் சாக்கோ பை. வித்தியாசமான சுவையில் இருக்கும். சாக்கோ பையை சாப்பிட்டுப் பாருங்க'' என்றார் விஜயகுமார்.

சுட்டிகள் ரசித்து சுவைத்தார்கள். ''இனி ஃபேக்டரி ரவுண்ட் போகலாம். இது உணவுப் பொருள் இல்லியா? சுத்தம் மிகவும் அவசியம்.'' என்றார் விஜயகுமார்.

தலைமுடி விழாமல் இருப்பதற்காக எல்லோருக்கும் தொப்பி அளிக்கப்பட்டது. அதைஅணிந்துகொண்டு கிளம்பினார்கள். ஓர் இடத்தில் சுவருடன் பொருத்தப்பட்ட வாக்குவம் க்ளீனர் போன்ற கருவிகள் இருந்தன.

''இது உங்க டிரெஸ்ஸில் இருக்கிற தூசியை உறிஞ்சிடும்'' என்று சொன்னவாறே கருவியை இயக்கி, மெட்டல் டிடெக்டர் போல் உடல் முழுவதும் படரவிட்டார்கள்.

ஷக்கலக்க சாக்கோ பை!

'உய்ய்ங்ங்ங்’ என்ற சத்தத்துடன்  அந்தக் கருவி இயங்க, சந்தோஷ் உஷாராக, ''கொஞ்சம் எட்டியே பிடிங்க அங்கிள். தூசியோடு சேர்த்து சட்டை பையில் இருக்கும் பணத்தையும் உறிஞ்சிடப்போகுது.'' என்றான்.

பிறகு, சோப் வாட்டரில் கைகளைக் கழுவிக்கொண்டு, ஈரம் காய்வதற்கு ஹீட்டரில் காண்பித்தார்கள். அதன் பிறகுதான் கதவு திறந்தது. ''இது ஆட்டோமெட்டிக் டோர். இதை எல்லாம் செஞ்சுக்காமல், நீங்க போனீங்கன்னா கதவு திறக்காது'' என்றார் அங்கிருந்த பணியாளர்.

''இந்த மாதிரி நம்ம வீட்டு டைனிங் ஹாலிலும் வெச்சுட்டா நல்லா இருக்கும்ல... விளையாடிட்டு நேராப் போய் பிஸ்கெட்டையோ, பழங் களையோ தொடவே முடியாது'' என்றாள் ஜெகஸ்ரீ.

''நல்ல ஐடியா!'' என்றாள் கிருத்திகா.

எல்லோரும் உள்ளே நுழைய, கண்ணாடித் தடுப்புக்கு பின்னால் சாக்லேட் தயாரிப்பு நடந்துகொண்டு இருந்தது.

''இந்த பெரிய குழாயின் உள்ளே பிஸ்கெட் தயாரிப்புக்கான மாவையும் சர்க்கரையும் போட்டு இருக்கிறோம். அது சில நிமிடங்களில் ஒன்றோடு ஒன்று கலந்து இப்படி வட்டவட்டமான பிஸ்கெட்களாக கன்வேயர் பெல்ட் மூலம் வெளியே வரும்.'' என்றார் விஜயகுமார்.

ஷக்கலக்க சாக்கோ பை!

மாவாக உள்ளே போனது கீழ்ப் பகுதியில் உள்ள ஒரு கன்வேயர் பெல்ட்டில் நூற்றுக்கணக்கான பிஸ்கெட்களாகத் தயாராகி வந்தன. அடுத்து இருக்கும் பகுதியில் அந்த பிஸ்கெட்களின் மேலே ரோபோட் குழாய்கள் வேக வேகமாக வந்து, க்ரீமை கொஞ்சம் கொஞ்சமாக விட, க்ரீம் அப்படியே வட்டமாக பிஸ்கெட்கள் மீது பரவிப் படிந்தது. அடுத்த பகுதியில் மேல் கன்டெய்னரில் இருந்து தயாராகி வந்த பிஸ்கெட்கள், க்ரீமுடன் இருக்கும் பிஸ்கெட்களின் மேல் வைத்து அடுத்த செக்ஷனுக்கு அனுப்பியது.

''இங்கு ஈரப் பதத்துடன் இருக்கும் பிஸ்கெட்கள், அடுத்த செக்ஷனில் குறிப்பிட்ட டிகிரி செல்ஷியஸில் உலரவைக்கப்படுது. அதனால் இந்த ஏரியாவே ரொம்ப ஹீட்டாக இருக்கும்'' என்றார் விஜயகுமார்.

அந்தப் பகுதியை 'தில்’லாக கடந்து சுட்டிகள் அடுத்து சென்ற இடம், சாக்லேட் பகுதி. ஒரு பெரிய கன்டெய்னரில் காப்பி நிறத்தில் தயாரான சாக்லேட் க்ரீம், குழிவான தட்டுக்களில் வந்து சேர்ந்தன. பார்ப்பதற்கு குட்டி நீச்சல் குளம் போல் இருந்தது. வரிசையாக வந்த பிஸ்கெட்கள், அந்த குளத்தில் டைவ் அடித்தன. அவை மீண்டும் மேலே வந்தபோது, பிஸ்கெட் சுத்தமாக தெரியாதபடி சாக்லெட் க்ரீமால் கவர் செய்யப்பட்டு இருந்தது.

''அவ்வளவுதான்... பிஸ்கெட் சாக்கோ பையாக மாறியாச்சு. இனி, அதுக்கு சட்டை போடணும்'' என்றார் விஜயகுமார்.

''சட்டையா?'' என்று திகைத்தான் சந்தோஷ்.

''ஆமா! பாக்கெட்களில் அடைக்கணும். அதையும்  மெஷினே செய்துவிடும். சுட்டிகள் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருள்.  சுத்தமாக இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். அதனால், சாக்கோ பை, இங்கு ஆரம்பம் முதல் கடைசி வரை  எந்த இடத்திலும் கையால் தொடப்படுவதே இல்லை. சாக்கோ பை பெரிய பார்சல்களுக்கு மாறும் வரை எல்லாமே மெஷின்கள் மூலம்தான் நடக்கின்றன. அதை லாரியில் ஏற்றுவது மட்டும்தான் மனிதர்கள் வேலை'' என்றார் விஜயகுமார்.

சாக்கோ பை சிறு சிறு பாக்கெட்களில் அடைக்கப்பட்டு, பிறகு பெரிய பார்சல்களாக வெளியே வந்தன. லாரியில் ஏற்றப்படும் இடத்துக்கு வந்த சுட்டிகள், உற்சாகமாகி அவர்களும் எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

''உங்களுக்கு எதுக்கு சுட்டிகளா இந்த வேலை? நீங்க எல்லோரும் நல்லாப் படிச்சு, இந்த மாதிரி பெரிய பெரிய ஃபேக்டரிகளுக்கே முதலாளியா வாங்க'' என்றார் ஒருவர்.

''கண்டிப்பா அங்கிள். அப்படி ஆரம்பிச்சாலும் இந்த மாதிரி சாக்லேட் ஃபேக்டரியா வைப்போம். அப்போதானே நினைச்ச நேரத்தில் சாக்லேட்களை அள்ளிச் சாப்பிடலாம்'' என்று ஜெகஸ்ரீ சொல்ல, எல்லோரிடமும் சாக்லேட் சிரிப்பு பரவியது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism