Published:Updated:

ஸ்கூல் ஸ்டார்

ஆ.அலெக்ஸ் பாண்டியன் ர.அருண் பாண்டியன்

ஸ்கூல் ஸ்டார்

ஆ.அலெக்ஸ் பாண்டியன் ர.அருண் பாண்டியன்

Published:Updated:
##~##

பொழுதுபோக்காக பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் நம்மில் பலருக்குப் பழக்கமாக இருக்கும். ஆனால், பொழுதுக்கும் பாடல்களைப் பாடி, பல சாதனைகளைப் படைத்து இருக்கிறார்... கரூர், பரணி பார்க் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் சிபி.

''கோயம்புத்தூர் லோக்கல் சேனல்   (டிடி.வி) நடத்திய போட்டியில், 'வாய்ஸ் ஆஃப் கோவை’ என்ற பட்டமும், 6 லட்சத்துக்கான வீட்டுமனைப் பட்டாவும் வாங்கினேன். ஜெயா டி.வி-யின் 'ராகமாலிகா’ ஃபைனலில் 'பெஸ்ட் வாய்ஸ்’ அவார்ட், அதே சேனலில் 'ஹரியுடன் நான்’, விஜய் டி.வி-யின் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்’, சுட்டி டி.வி-யின் 'ஸ்கூல் ஸ்டார்’ எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, 'எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடிகர் ஜெய் அண்ணா இறந்த பிறகு ஒரு ஹம்மிங் வருமே, அது நானும் என் ஃப்ரெண்ட்ஸும் பண்ணினோம்.  ஜேம்ஸ் வசந்தன் சார் தனது அடுத்த படத்தில் ஒரு சோலோ சாங் தந்தார். ரெக்கார்டிங்கும் முடிஞ்சிருச்சு' என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிபியின் குரலில் மட்டுமா வித்தை? வாள் சண்டை, இரண்டு மணி நேரம் வரை நீரில் மிதப்பது என பல வித்தைகளைக் கைவசம் வைத்துள்ளார். தவிர, ட்ரம்ஸ், கீ போர்டு என இசைக் கருவிகள் வாசிப்பதிலும் சிபி கில்லாடி!

'ஸ்கூலில் சேருவதற்கு முன் அம்மா, அப்பா ரெண்டு பேருமே வேலைக்குப் போயிருவாங்க. டி.வி.யையே பார்த்துட்டு இருக்கக் கூடாதுனு கேபிள் ஒயரைக் கழட்டி விட்டுருவாங்க, அதனால், ரேடியோதான்  கேட்டுட்டு இருப்பேன். கொஞ்ச நாளில் நானும் சேர்ந்து பாட ஆரம்பிச்சுட்டேன், ப்ரீகே.ஜி படிக்கும்போது... ஸ்கூல் ஸ்டேஜில் நான் பாடினதைக் கேட்டுட்டு, அப்பா எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணினார். ஹரிஹரன் சார், ஜேம்ஸ் வசந்தன் சார், அனுராதா ஸ்ரீராம், சுசீலா மேடம், சைந்தவி, ரஞ்சித், விஜய் யேசுதாஸ்னு நிறையப் பிரபலங்கள் முன்னாடி பாடிட்டேன். ஆனாலும், செய்ய வேண்டியது இன்னும் இருக்கு' என சாதனைக்கும் பேச்சுக்கும் கமா போடுகிறார் சிபி.

ஸ்கூல் ஸ்டார்

'மியூசிக் கத்துக்க வாரா வாரம் கோயம்புத்தூர் போகணும், காலையில் 4 மணிக்கே கிளம்பிருவான். திரும்பி வர சாயந்திரம் ஆகிரும். இவனை ஒரு பெரிய பாடகராப் பார்க்கணும். சினிமா மட்டும் இல்லாமல் மேடைப் பாடகராவும் வரணும்'' என்கிறார் சிபியின் தந்தை ஸ்ரீனிவாசன்.

சிபி, இதுவரை மேடைகளில் பாடிய பாடல்களை எல்லாம் ஒரு டி.வி.டியாகப் போட்டு, பார்ப்பவர்களுக்கு எல்லாம் பெருமிதத்துடன் இலவசமாகக் கொடுத்து வருகிறார் இந்த அன்புத் தந்தை.

'இவனைப் பார்த்து, இந்தப் பள்ளியில் படிக்கும் இவனது நண்பர்களும் நாமும் ஏதாச்சும் சாதிக்கணும்னு ஆர்வமா சொல்றாங்க. சிபியும் எந்தவித ஈகோவும் இல்லாமல் தனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிக் கொடுக்கிறான்.' என்று பெருமையாகக் குறிப்பிடுகிறார் பள்ளியின் முதல்வர் ராம சுப்பிரமணியன்.

'ஸ்கூலுக்கு அடிக்கடி லீவ் போட்டுட்டு பாடப் போயிருவான். இருந்தாலும், அவன் தான் ஃபஸ்ட் ரேங்க் எடுக்கிறான். எங்க ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாரும் அவனைப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. அவன் எங்களோட ஃபேவரைட்' என்கிறார்கள் பள்ளி நண்பர்கள்.

ஸ்கூல் ஸ்டார்

இந்த நண்பர்கள் சிபிக்கு வைத்துள்ள செல்லப் பெயர்... பன், பட்டர், பாபு.பார்க்க பன் போலவும், பட்டர் குரலோடும் இருக்கும் பையன் என்று அர்த்தம்.

'ஹாரிஸ் சார் கம்போஸிங்ல பாடணும், ரஞ்சித், சைந்தவி, அவங்களோட எல்லாம் டூயட் பாடணும், அப்புறம் நானே ஒரு பெரிய ப்ளேபேக் சிங்கரா கோலிவுட்டைக் கலக்கணும்'' என்று தனது கனவுகளை அடுக்கும் சிபி, வெற்றிக்கான டியூனாகச் சொல்வது...

''எந்த விஷயமா இருந்தாலும் இதில் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கைதான் முக்கியம். சாதிக்க நினைக்கிறதை சந்தோஷமா செய்தால், நிச்சயம் ஜெயிக்கலாம்''

ஸ்கூல் ஸ்டார்

உங்கள் பள்ளியிலும் இவரைப் போன்ற திறமைசாலிகள் இருந்தால், எங்களுக்கு எழுதுங்கள். அவரை அறிமுகப்படுத்த சுட்டி விகடன் தயாராக இருக்கிறது. அவரது பெயர், வகுப்பு, பள்ளி முதல்வர் மற்றும் முழு முகவரியுடன்... செல் நம்பரையும் குறிப்பிடவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism