Published:Updated:

'எங்களுக்கு இது 'கார்'காலம் !

ம.கா.செந்தில்குமார் படங்கள்: பொன்.காசிராஜன்,ஒருங்கிணைப்பு: சார்லஸ்,கே.ஆர்.ராஜமாணிக்கம்

##~##

கார், ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருள். ஆனால், இன்று அது அத்தியாவசியம். அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

விருகம்பாக்கம், சின்மயா வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகளுடன், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்துக்குள் நுழைந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'ஹூண்டாய் மோட்டார் இண்டியா - நியூ திங்கிங், நியூ பாசிபிலிட்டீஸ்’ என்று மின்னிய கட்டட முகப்பை வியப்பு அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்த மாணவர்களை, அதிகாரிகள் வரவேற்றனர். ''பாதுகாப்பு காரணங்களுக்காக ஹூண்டாயின் 16 ஆண்டு கால வரலாற்றில் ஃபேக்டரியை சுற்றிப் பார்க்க பள்ளி மாணவர்களை இதுவரை நாங்கள் அனுமதித்ததே கிடையாது. இது, உங்களுக்கான சிறப்பு அனுமதி'' என்றவர், ''ஹூண்டாயைப் பற்றி உங்களுக்கு என்ன எல்லாம் தெரியும்?'' என்று கேட்டார் மேலாளர் ஆழ்வார்சாமி.

'உலக அளவில் நான்காவது இடம்’, 'இந்திய அளவில் இரண்டாவது இடம்’, 'பிராண்டு அம்பாசிடர் ஷாருக் கான்’, '12 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்’, 'ஒரு நிமிடத்துக்கு இரண்டு கார்கள் என ஆண்டுக்கு 6.3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன’, 'இரண்டு பிளான்ட்டுகள் இருக்கின்றன!’- எனச் சொல்லி, சுட்டிகள் பிரமிக்கவைத்தனர்.

'எங்களுக்கு இது 'கார்'காலம் !

''1967ல் தென் கொரியாவில் தொடங்கப்பட்ட இந்த ஹூண்டாய் மோட்டார் கம்பெனி, சென்னைக்கு 1996-ல் வந்தது. ஆரம்பித்த புதிதில் ஆண்டுக்கு 8,500 கார்களை மட்டுமே உற்பத்தி செய்தோம். தற்போது உள்நாட்டு உற்பத்தி மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என ஆண்டுக்கு 6.3 லட்சம் கார்களை உற்பத்தி செய்கிறோம்'' என்றவரிடம்,  ''இந்த மோட்டார் கம்பெனி இங்கு தொடங்கப்பட்டபோது எவ்வளவு இன்வெஸ்ட் செய்யப்பட்டது?'' என்று கேட்டான் நவமோகன கிருஷ்ணன்.

''இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள்.  இந்தியப் பணத்தில் 8,000 கோடி ரூபாய்'' என்று அவர் முடிக்கும் முன்பே, ''ஒரு காருக்குத் தேவையான அனைத்துப் பாகங்களும் இங்கேயே தயாரிக்கப்படுகிறதா?'' என்று கேட்டாள் சினேகா ஸ்ரீராம். ''எங்களின் கார்களுக்குப் பயன்படும் நெட், போல்டு என சின்னச் சின்ன உதிரிப் பாகங்களைச் செய்து தருவதற்குக்கூட 50 கி.மீட்டர் தொலைவுக்குள் 140-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் எங்களுடன் சேர்ந்தே தொடங்கப்பட்டன'' என்றவர், ''முதலில் ஹூண்டாய் மோட்டார் ஃபேக்டரியை ஒரு பறவையின் பார்வையில் இருந்து எடுக்கப்பட்ட  போட்டோக்களை வைத்து விளக்கினால், இங்கு நடைபெறும் பணிகள் உங்களுக்குப் பிடிபடும்'' என்றார் ஆழ்வார்சாமி.

'எங்களுக்கு இது 'கார்'காலம் !

அருகே இருந்த திரை ஒளிரத் தொடங்கியது. ''லைட் ப்ளூ கலரில் இருப்பது பிளான்ட் ஒன். டார்க் ப்ளூ கலரில் இருப்பது பிளான்ட் டூ'' என விவரிக்கத் தொடங்கியவர், ''இந்த இரண்டு பிளான்ட்டுகளில் இருந்தும் ஒரு நாளைக்கு 2,300 கார்கள் தயாராகின்றன'' என்றார். ''இங்கே மொத்தம் எவ்வளவு பேர் வேலை செய்றாங்க?'' என்று கேட்டான் புவன். ''12 ஆயிரம் பேர். பிரஸ் ஷாப், பாடி ஷாப், பெயின்ட் ஷாப், அசெம்பிள் ஷாப், என்ஜின் ஷாப் என தனித்தனிப் பிரிவுகள் உள்ளன. இதைத் தவிர, இங்கேயே இரண்டு டெஸ்ட் டிராக்குகள் இருப்பது சிறப்பு. இவை ஒவ்வொன்றும் 1.4 கி.மீட்டர் நீளம்கொண்டது. இங்கு தயாராகும் கார்களை முதலில் இந்த டிராக்கில் ஓட்டிப் பார்த்து, அவற்றின் தரத்தைச் சோதனை செய்வோம்'' என்றார் ஆழ்வார்சாமி.

அடுத்து பேச வந்த பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார், ''எங்களைப் போன்ற நிறுவனங்களின் மிகப்பெரிய சொத்து எது எனச் சொல்ல முடியுமா?'' என்று கேட்டு மாணவர்களை வெகுவாக யோசிக்க வைத்தார். ''ரோபோக்கள்! ஏன்னா, அதுதான் டீ பிரேக், லஞ்ச் பிரேக் கேட்காது. அவ்வளவு ஏன்? சம்பளம் கூட கேட்காது'' என்ற அபியுத்குமாரின் பதிலால் அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. ''குட் ஜோக். ஆனால், சரியான பதில் கிடையாது'' என்றார் செந்தில். ''பின் வரிசையில் இருந்து, ''ஹியூமன் ரிசோர்ஸ். அதாவது, மனித வளம்'' என்று மெல்லிய குரலில் ஆசிரியை லதா பதில் அளிக்க, ''தட்ஸ் இட். அதான் டீச்சர்'' என்ற செந்தில்குமார், ''இந்த மனித வளம்தான் முக்கியம். அவர்கள் விலைமதிப்பு இல்லாதவர்கள். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம். போபால் விஷ வாயுக் கசிவு சம்பவம் நமக்கு மறந்து இருக்காது. அந்த சம்பவம் நமக்கு ஒரு பாடம்'' என்றவர், ''ஓ.கே. இப்போது நீங்கள் ஃபேக்டரியை சுற்றிப்பார்க்கப் போகிறீர்கள். முதலில் பிரஸ் ஷாப்'' என்றார்.  

பிரஸ் ஷாப் வாயிலில் நின்று வரவேற்ற ஷாப் மேனேஜர் கோபி, ''இந்த பிரஸ் ஷாப்தான் ஃபேக்டரியின் தொடக்கம் என்று சொல்லலாம். கார்கள் செய்யத் தேவைப்படும் இரும்புத் தகடுகள், நூல் கண்டுகளைப் போல் சுற்றப்பட்டு காயிலாக வரும். அதை கார்களுக்குத் தகுந்தாற்போல் குறிப்பிட்ட வடிவங்களில் வெட்டப்படும். பிறகு, அவை சீட்டுக் கட்டுகளைப் போல் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்படும். இவை கார்களுக்கு ஏற்றபடி வெவ்வேறு வடிவங்கள்கொண்ட அச்சுகளுக்கு இடையில் செல்லும் வகையில் அமைக்கப்படும். ஒவ்வோர் அச்சும் 3,500 டன்னில் இருந்து 5,400 டன் எடை கொண்டவை. காந்தத் தன்மைகொண்ட கன்வேயர் பெல்ட் ஒவ்வொரு தகடாக இழுக்க, அதை ஒரு ரோபோ பிடித்து, கீழே உள்ள அச்சின் மீது வைக்கும். அப்போது மேலே இருந்து இறங்கும் வேறு ஓர் அச்சு, வேகமாகத் தகட்டின் மீது மோதும்போது காருக்குத் தேவையான பேனல்கள் நமக்குக் கிடைக்கும். இதேபோல், அடுத்தடுத்த புராசஸில் தகட்டில் எஞ்சி இருக்கும் தேவையற்ற பாகங்கள் நீக்கப்பட்டு, பிசிறு இல்லாத பேனல்கள் கிடைக்கும். இப்படி ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேனல்கள் இங்கு தயாராகின்றன'' என்றார்.

'எங்களுக்கு இது 'கார்'காலம் !

அடுத்து, பாடி ஷாப். இதன் பணிகளை உதவி மேலாளர் சுவாமிநாதன் விளக்கினார். ''ஏற்கெனவே நீங்கள் பிரஸ் ­ஷாப்பில் பார்த்த பேனல்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதுதான் பாடி ஷாப்பின் பணி. ரோபோவின் பணி இங்கு அதிகம்'' என்றார். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டுள்ள மேற்புறம், அடிப்புறம், பக்கவாட்டு பேனல்கள் கன்வேயர் பெல்ட்டில் வர, அவற்றை ரோபோக்களே எடுத்து எவ்வித அலங்காரமும் இல்லாத எலும்புக்கூடுகளைப் போன்ற கார்களாக மாற்றி அனுப்புகின்றன. இந்தப் பகுதியில் துல்லியமாக இயங்கும் ரோபோக்கள் மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தது.

பாடி ஷாப்பைத் தொடர்ந்து, அசெம்பிள் ஷாப். இதன் இன்சார்ஜ் இன்ஜினியர் கிருஷ்ணன், ''இதைக் கார்களுக்கு ஃபைனல் டச் தரும் இடம்'' என்றவர், ''கன்வேயர் பெல்ட்டில் நகரும் கார்களை பணியாளர்கள் வரிசையில் நின்றபடி ஒருவர் சீட் பெல்ட், மற்றொருவர் ஹெட் லைட், வேறொருவர் ஒயரிங் என அலங்கரிக்கிறார்கள். ஒவ்வொரு பணியும் சில வினாடிகளில் முடிந்துவிடுகின்றன.'' ஒரு புறம் எலும்புக்கூடாக வரும் கார்கள் மறுபுறம் அலங்கரிக்கப்பட்டு ஓட்டிச் செல்லப்படுவதைப் பார்த்த போது ஏதோ மாய மந்திரம் நிகழ்வதைப் போல் மாணவர்கள் தங்கள் கண்களையே நம்பாமல் வியப்பில் நின்றனர்!