Published:Updated:

நல்லதைக் கொடுக்கும் வம்பன் !

சுட்டிகளின் பண்ணை விசிட் !கரு.முத்து கே.குணசீலன்

நல்லதைக் கொடுக்கும் வம்பன் !

சுட்டிகளின் பண்ணை விசிட் !கரு.முத்து கே.குணசீலன்

Published:Updated:
##~##

இட்லி, வடை, சாம்பார்னு வகை வகையாய் சாப்பிடுறோமே... அதில் கலந்து இருக்கிற உணவுப் பொருட்கள் எந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது?

இந்த பெரிய சந்தேகத்தைப் போக்குவதற்கு புதுக்கோட்டை, நேரு மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் களுடன், பட்டுக்கோட்டையில்  இருக்கும் வம்பன் தேசியப் பயிறுவகை ஆராய்ச்சி மையத்துக்கு சென்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இது வரை விவசாயிகள் தான் இங்கே வருவார்கள். முதன்முதலாக பள்ளி மாணவர்கள் வருவது இப்போதுதான்'' என்று மகிழ்ச்சி பொங்க வரவேற்று, பண்ணையின் உள்ளே அழைத்துப்போனார் தலைவர் டாக்டர் விஜயராகவன்.

'' இங்கேதான் விவசாயம் செய்றீங்களா? உங்களை எல்லாம் பார்த்தால் ஆபீஸர் மாதிரி இருக்கே?'' என்று ஆர்வத்துடன் கேள்வியை ஆரம்பித்தார்கள் சுட்டிகள்.

நல்லதைக் கொடுக்கும் வம்பன் !

''நாங்களும் விவசாயிகள்தான். அதாவது, ஒரு புதிய ரக விதையைக் கண்டுபிடித்து, அதைப் பயிரிட்டுப் பார்த்து, விவசாயிகளின் வயல்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்போம். இந்த அலுவலகம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள  ஆராய்ச்சி மையம். இப்படி 36 ஆராய்ச்சி நிலையங்களும், 10 கல்லூரிகளும், 16 வேளாண் அறிவியல் மையங்களும் தமிழ்நாட்டில் இருக்கு. நெல், உளுந்து, கரும்பு, பருத்தி என்று ஒவ்வொன்றுக்கும் அது அதிகம் விளையும் இடத்தில் ஆராய்ச்சி மையம் இருக்கும். இது பயிறு வகைகளுக்கான ஆராய்ச்சி நிலையம். இங்கே புதிய பயிறு வகைகளை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து இங்கேயே விதைத்துப் பயிரிடுவோம். அதன் வளர்ச்சி நிலைகள், தாக்கும் நோய்கள், மகசூலின் அளவு இவற்றுக்கு ஏற்ப, திரும்பவும் புதிய மாற்றங்கள் செய்து விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவோம்'' என்றார் டாக்டர் சுந்தர்.

''பயிறு என்றால் என்ன?'' என்ற சந்தேகத்தைக் கேட்டான் சரவணன்.

நல்லதைக் கொடுக்கும் வம்பன் !

உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை, துவரை, தட்டைப்பயிறு ஆகியவை வைக்கப்பட்டு இருக்கும் ஆராய்ச்சி மையத்துக்குள் அழைத்துப்போய் ஒவ்வொன்றாகக் காட்டி விளக்கினார். பிறகு, விவசாயப் பரப்புக்குள் நுழைந்தார்கள். அங்கே வரவேற்ற டாக்டர் தினகரன், முதலில் அழைத்துப்போனது வெயில், காற்று, காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம், திசை, மழை ஆகியவற்றை அளவிடும் இடத்துக்கு. ''நம்முடைய முன்னோர்கள், வானம் பார்த்தே இதை எல்லாம் துல்லியமாகக் கண்டறிந்தார்கள். அதற்கு ஏற்றாற்போல் தங்கள் விவசாயத்தை அமைத்துக் கொண்டார்கள். ஏனென்றால், வானிலையை மையமாக வைத்துத்தான் விவசாயம் செய்ய முடியும்.'' என்றார்.

''இது காற்றின் திசையை அளவிடும் அனிமா மீட்டர் கருவி. நான்கு திசைகளும் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதில் அம்புக்குறி அங்கும் இங்கும் நகரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அது நகர்ந்து காட்டும் திசையில் காற்று அடிக்கிறது என்று அர்த்தம். இதுபோல ஈரப்பதம் அளக்கும் கருவி, வெப்ப நிலை அளக்கும் கருவியும் உண்டு'' என்று ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி, விளக்கினார் உழவியல் துறைப் பேராசிரியர் ராஜரத்தினம்.

''இந்த ஊரில் 20 செ.மீ, அந்த ஊரில் 30 செ.மீ மழைன்னு டி.வி.யில் சொல்றாங்களே, அதை எப்படிக் கண்டுபிடிப்பாங்க?'' என்று கேட்டாள்  ஸ்ரீஆர்த்தி.

நல்லதைக் கொடுக்கும் வம்பன் !

''ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஓர் இடத்தில் மழையை அளவிடும் மழைமானி இருக்கும். திறந்த வெளியில் மேடை போன்ற அமைப்பின் நடுவில் இருக்கும் இந்த வாய் அகன்ற குடுவையில், ஒரு நாளில் பெய்யும் மழை, கீழே இருக்கும் பீக்கரில் (பாத்திரம்) சேகரமாகும். அதனை எடுத்துப்போய் அளவிடும் கருவி மூலம் அளந்து சொல்வோம். குறைந்தது 2 மி.மீ பெய்து இருந்தால்தான், அது மழை நாளாகக் கணக்கிடப்படும்.'' என்று விளக்கினார் ராஜரத்தினம்.

இனி பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படும் வயல்களைப் பார்க்கலாம் என்று அழைத்துப் போனார் தினகரன். ஓர் இடத்தில் மிகப் பெரிய தொட்டிகளில் குப்பைகள் கொட்டப்படுவதைப் பார்த்து நின்றுவிட்ட சுட்டிகள், அது என்ன? என்று கேட்டன்ர். ''இதுதான் மண்புழு உரம் தயாரிக்கும் இடம். கீழே விழுந்து கிடக்கும் இலை தழைகள் இந்தத் தொட்டியில் கொட்டப்பட்டு, அதில் மண்புழுக்களை விட்டு மேலே சாணத்தை நிரப்பி வைப்பார்கள். மண்புழுக்கள் அந்தக் குப்பைகளைத் தின்று கழிவுகளை வெளியேற்றும். 60 நாட்களுக்குப் பிறகு, அந்தத் தொட்டியில் இருப்பவற்றை எடுத்து சுத்தமாகச் சலித்து எடுத்தால், மண்புழு உரம் தயார். அதனைப் பெரும்பாலும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்து கிறார்கள்'' என்றார்.

நல்லதைக் கொடுக்கும் வம்பன் !

துவரை விதைகளை ஏற்கெனவே பார்த்திருந்த சுட்டிகள், அவர்களின் மார்பு அளவுக்கு வளர்ந்து இருந்த துவரைச் செடிகளைப் பார்த்து ஆர்வமாக உள்ளே ஓடினார்கள். ''விதையை மண்ணில் விதைத்த ஐந்தாம் நாளில் இருந்து ஏழாம் நாளுக்குள் இரண்டு இலைகள் முளைத்து வெளிவந்துவிடும். இங்கே நீங்கள் பார்க்கும் எல்லாப் பயிறு வகைகளும் ஈரிலைத் தாவரங்கள்தான். பதினைந்தாம் நாளில் நான்கு இலைகள் என்று பிறகு செடி வளர ஆரம்பித்துவிடும். வளரும் பருவத்தில் வாரம் ஒருமுறை தண்ணீர் விட வேண்டும். 40 நாளில் உரம் போட வேண்டும். அதில் நைட்ரஜன், பொட்டாஷ், பாஸ்பரஸ் ஆகியவை கட்டாயமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, அவற்றைப் பூச்சி, நோய்கள் ஆகியவை தாக்காமல் மருந்து தெளித்தும், தேவையானபோது உரம் போட்டும் வளர்த்துவந்தால், 70-வது நாளில் பூ பூக்கும். அந்தப் பூக்கள்தான் காயாக மாறும். ஒரு காயில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட துவரை மணிகள் இருக்கும். தரம்வாரியாக 105-வது நாளில் இருந்து செடியை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். அதிகபட்சம் 180 நாள் வரை இருக்கும் ரகமும் உள்ளது. அறுவடை செய்த செடிகளை வெயிலில் காயவைத்து, பிறகு செடியில் இருந்து காய்களைப் பிரித்து எடுப்போம். அதில் இருந்து துவரை தனியாகப் பிரித்து எடுக்கப்படும்'' என்று விளக்கமாகச் சொன்னார் டாக்டர் சௌந்தரராஜன்.

அப்படியே கடலைக் கொல்லைக்குப் போனார்கள். அதன் பயிர் முறைகள் பற்றியும் விளக்கினார். ''கொத்துக்கடலை, கொடிக்கடலை, கொத்துக் கொடிக்கடலை என்று இதில் மூன்று ரகங்கள் இருக்கின்றன.'' என்றார் டாக்டர் தினகரன்.

''பூச்சி மற்றும் நோய்கள்தான் பருப்பு வகைகளின் உற்பத்தியை மிகவும் பாதிக்கக்கூடியது. அதற்காக இங்கே தனிப் பிரிவு உள்ளது. இரண்டு வகைக்கும் இரண்டு பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.'' என்றார்.

நல்லதைக் கொடுக்கும் வம்பன் !

சுட்டிகள் அந்தப் பேராசிரியர்களுடனும் பேசி தங்கள் சந்தேகங்களை அறிந்தனர். பாசிப்பயிறு, தட்டைப்பயிறு ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு  இருக்கும் ஏரியாவையும், தென்னை நாற்றங்காலையும், குரோட்டன் செடிகள், மருந்து செடிகள் ஆகியவை வைக்கப்பட்டு இருக்கும் தோட்டங்களையும் பார்த்து முடித்த சுட்டிகள், இப்படித்தான் நம்முடைய உணவுப் பொருட்கள் விளைவிக்கப்படுகிறதா? என்று வியந்தனர்.

ஆராய்ச்சி மையத் தலைவர் விஜயராகவன், ''இங்கு கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கும் ரகப் பயிர்களுக்கு வம்பன் என்று பெயர். வம்பன்-1, வம்பன்-2 என்று வரிசையாக எண்கள் கொடுக்கப் படும். ஆனால் எந்த வம்பும் செய்யாத பயிர்கள். இவை பெரும்பாலும், எல்லா ரக மண்ணுக்கும் ஏற்ற ரகங்கள் என்று விவசாயிகள் பாராட்டி இருக் கிறார்கள். அதேபோல், எங்கள் மையத்தின் பயிறு வகைகளில் பூச்சித் தாக்குதலும் நோய்த் தாக்குதலும் குறைவாக இருக்கும்'' என்றார்.

இதை எல்லாம் பார்த்து முடித்த சுட்டிகளுக்கு விவசாயத்தின் முக்கியத்துவம் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கும். அதற்கு அத்தாட்சியாக '' நாங்களும் நாளை விவசாய அதிகாரிகளாக ஆகி நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்குவோம்'' என்று சொன்னபோது அதிகாரிகள் முகங்களில் நெகிழ்ச்சி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism