Published:Updated:

கிராமத்து விளையாட்டு !

Vikatan Correspondent

இரா.முத்துநாகு

##~##

விளையாடும் அலுப்பே இல்லாமல் களிப்பை ஏற்படுத்தக்கூடியவை சில விளையாட்டுகள். அந்த வரிசையில் ஒன்று... கரகர வண்டி.

இந்த விளையாட்டைப் பெரும்பாலும் பெண்களே விளையாடுவார்கள். 'திம்பி’ என்றும் சொல்வது உண்டு. இதை இரண்டு இரண்டு பேர்களாக விளையாடலாம். இருவரும் கையைப் பெருக்கல் வடிவத்தில் வைத்து, ஒருவர் கையை ஒருவர் விரல்களால் கொக்கிபோல் பின்னிக்கொள்ள வேண்டும். இருவரும் கால் பாதங்களும் ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டு இருக்கும். பிறகு,  கைகளை விறைப்புடன் பிடித்துகொண்டு, பின்பக்கமாக முதுகைச் சாய்த்து, ஒருவரை ஒருவர் இழுத்தபடி 'ஸ்’ வடிவத்தில் சுற்றுவார்கள். விழுந்துவிடாமல் இருக்க, புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப சாய்வது ஒரு திறமையான கலை.

இப்படியாக, தலை கிறுகிறுப்பு வரும் வரை சுற்றுவார்கள். தலைச் சுற்றல் ஏற்படும் என்பதால், ரொம்பச் சின்ன சுட்டிகள் இதை விளையாட  மாட்டார்கள். சற்றே வளர்ந்த பெண் சுட்டிகளே விளையாடுவார்கள். விளையாட்டைத் துவக்கும்போது ராட்டினம் மெதுவாக சுற்றுவதைப் போல் துவங்கி, நேரம் ஆக ஆக கரகரவென சக்கரமாகச் சுற்றுவார்கள்.

கிராமத்து விளையாட்டு !

வெறும் ஆட்டம் மட்டுமே இருந்தால் எப்படி? பாட்டும் இருந்தால்தானே இன்னும் சுவையாக இருக்கும்.

'பூப்பூவாம் புளியம்பூ
பொட்டியில வச்சா தாழம்பூ...

என முதல் சிறுமி பாட்டைத் தொடங்கியதும், அவளுடன் சுற்றும் சிறுமியும் பாடலில் சேர்ந்துகொள்வாள்.இருவரும் பாட ஆரம்பித்து, சுற்றும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, பாடும் வேகமும் அதிகமாகும்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு  பாடல் இருக்கிறது. அந்த ஊரில் எது பிரபலமாகப் பேசப்படுகிறதோ, அதுவே பாடலாக அமைகிறது. ஆண்டிபட்டி பகுதியில்...

'கரகர வண்டி காமாட்சி வண்டி
குடுகுடு வண்டி குருவாச்சி வண்டி’

எனப் பாடுகிறார்கள். குருவாச்சி என்பது பிரபலமான பெண் தெய்வத்தின் பெயர். இதே பாடலை திண்டுக்கல் மாவட்டத்தில்...

'கரகர வண்டி காமாட்சி வண்டி
கிழக்கே போகும் பொள்ளாச்சி வண்டி’

கிராமத்து விளையாட்டு !

எனப் பொள்ளாச்சி போகும் ரயிலை வைத்துப் பாடுகிறார்கள். இந்தப் பாடல் மெட்டுகளை மாற்றி, சினிமாப் பாடல்களும் வந்துள்ளன. இதைத் தவிர,

'நீயும் நானும் சோடி
நெல்லு குத்த வாடி
ஆத்து மணல அள்ளிப்போட்டு
அவுலு இடிக்க வாடி’
என்று வேடிக்கையாகவும் பாடுவார்கள்.

எந்த ஒரு விளையாட்டுக்கும் இல்லாத சிறப்பு, கரகர வண்டிக்கு உண்டு. பொதுவாக, ஒரு விளையாட்டுக்கு பல விதிமுறைகள் இருக்கும். விளையாட்டின் முடிவில் தோற்றவர்கள், வெற்றி பெற்றவர்கள் என்று இருப்பார்கள். இது எதுவுமே திம்பி எனப்படும் கரகர வண்டி விளையாட்டில் கிடையாது. விளையாடும் அனைவருக்கும் சந்தோஷத்தை மட்டுமே தரும். சுருக்கமாகச் சொன்னால், பைசா செலவே இல்லாத ராட்டினம்.