Published:Updated:

பாஸ்கெட் நிறைய பிஸ்கட் !

கே.ஆர்.ராஜமாணிக்கம் படங்கள் : எம்.உசேன்

##~##

'மாமா பிஸ்கோத்து..!’-இது காமெடி டயலாக் அல்ல. நிஜமாகவே நம் குட்டீஸுக்கு ரகம் ரகமான சாக்லேட்டுகளுக்கு அடுத்தபடியாகப் பிடித்த அயிட்டம் பிஸ்கட்தானே. பெரியவர்களுக்கும்கூட பசியைப் போக்க உதவும் அவசர கால உணவும் பிஸ்கட்டுகள்தான். இன்று வரை போர்க் காலங்களில் ஆபத்பாந்தவனாய் இருந்து, நம் ஜவான்களின் பசியைப் போக்கி, அவர்களை ஜாம்பவான்களாய் மாற்றிக் காட்டுவதும் இதே பிஸ்கட்கள்தான்!

வகை வகைகளாய், விதவிதமாகப் புதுப்புதுச் சுவைகளோடு மார்க்கெட்டுக்கு வரும் பிஸ்கட்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதை அறிய, கே.கே.நகர் மற்றும் தாம்பரம் சானடோரியம் மாணவர்களோடு... சென்னை, சிப்காட் தொழிற் பூங்காவில் உள்ள 'டாலர் பிஸ்கட்’ ஃபேக்டரிக்கு ஒரு மின்மினி விசிட் அடித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஹேய்... அங்கே பாருடா 'ஃபன்டூன்... பிஸ்கட் விளம்பரத்தில் பார்ப்போமே அந்தப் பையன்டா'' என்றபடி ஸ்ரீதர், ஃபன்டூன் கையைப் பிடித்துக் குலுக்கி, உற்சாக ட்ரிப்பை உறியடித்துத் துவக்கிவைத்தான். ஃபன்டூன் பையனும் எல்லோருக்கும் கை கொடுத்து வரவேற்பு அளித்தான்.

''வாங்க உள்ளே போகலாம்'' என்று ஃபன்டூன் பையன் அழைத்ததுதான் தாமதம், அவனையே ஓவர்டேக் செய்து துள்ளல் நடைபோட்டு ஃபேக்டரிக்குள் நுழைந்தனர்.

அங்கே நமக்காகக் காத்திருந்தனர் தென் மண்டல மனிதவள மேம்பாட்டு மேலாளர் எஸ்.கணபதி, தர மேலாளர் காந்தா மற்றும் நிர்வாகச் செயல் அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர். மண்டையைப் பிளக்கும் மதிய நேரம். வெளியே வெயிலின் சூடு அதிகமாக இருந்ததால், நம் சுட்டிகளின் முகத்தில் மெலிதான வாட்டம். அதைக் கவனித்த நிர்வாகிகள், குளிர்பானம் கொடுத்து உபசரித்தனர். ஐந்தே நிமிடங்களில் சுட்டிகள் 'ரெஃப்ரெஷ்’ ஆகி, பவர் ரேஞ்சர்களாய் உருமாறினார்கள்.

பாஸ்கெட் நிறைய பிஸ்கட் !

''உங்க ஃபேவரைட் பிஸ்கட் பிராண்டு என்னன்னு சொல்றீங்களா?'' என்று கணபதி கேட்க, ஒவ்வொருவரும் அவர்களின் ஃபேவரைட் பிஸ்கட் பிராண்டை சவுண்ட் எஃபெக்ட்டோடு சொன்னார்கள். சிலர், டி.வி விளம்பரத்தை அப்படியே ஆக்ஷன் ரீ-ப்ளே செய்து  திகைப்பில் ஆழ்த்தினர். நிர்வாகிகள் அனைவரும் 'வாவ்’ போட்டு அசந்துபோனார்கள். முத்தாய்ப்பாய், ''அங்கிள்! ஒரு பாஸ்கெட் நிறைய பிஸ்கட் சாப்பிடுறதுதான் இப்போ என்னோட ஒரே டார்கெட்!'' என்று ஆக்ஷன் அவதாரம் எடுத்து பூர்னேஷ் சொல்ல, அதிர்வேட்டுச் சிரிப்புதான்.

''உங்களுக்கு பாஸ்கெட் நிறைய பிஸ்கட் வேணும்னா நாங்க நடத்துற க்விஸ் போட்டியில் ஜெயிக்கணும். ஓ.கே-வா?'' என்று தர மேலாளர் காந்தா கேட்க, ''எனக்கு இங்கிலீஷ்ல பிடிக்காத ஒரே வார்த்தை க்விஸ்தான் அங்கிள்!'' என்று காமெடி ராவடி பண்ணினான் அவினாஷ்.

பாஸ்கெட் நிறைய பிஸ்கட் !

''ஒவ்வொரு சரியான பதிலுக்கும் பிஸ்கட் பாக்கெட் பரிசு!'' என்று ஸ்ரீதர் சார் சொன்னதும் எல்லோர் முகங்களிலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு.  

''ஓகே... அதுக்கு முன்னாடி நாம ஃபேக்டரி விசிட்டை முடிச்சுட்டு வந்துடுவோம்'' என்ற கணபதி, எல்லாருக்கும் தலை உறைகள் தந்து போட்டுக்கொள்ளச் சொன்னார். ''எதுக்கு சார் இப்படிப் போட்டுக்கச் சொல்றீங்க?'' என்று பொறுப்பு பொன்னம்பலாய்க் கேட்டான் சிவகிருஷ்ணா.

''தலைமுடி, பிஸ்கட் தயாரிப்பு யூனிட்களில் விழுந்துவிடக் கூடாதுனுதான்'' என்று விளக்கினார் ஸ்ரீதர்.      

பிஸ்கட் தயாரிப்பின் முதல் நிலையான கலவை போடும் இடத்துக்குச் சுட்டிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

''மைதா, சர்க்கரை, டால்டா ஆகியன எங்களிடம் வரும்போதே சுத்தமானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் இருக்கும்.   அதோடு, சோதிக்கப்பட்ட பின்னரே கலவை இயந்திரத்துக்கு வரும்'' என்றார் காந்தா. ''பிஸ்கட் மாவை ஆட்கள் பிசைய மாட்டாங்களா?'' என்றாள் கிரிஷாலி. ''கொஞ்சமாக இருந்தால் ஆட்கள் பிசையலாம். இங்கே ஆயிரக்கணக்கில் பிஸ்கட் தயாராகுதே... அதனால், மெஷின் மூலம் செய்வதுதான் சரி'' என்று விளக்கம் அளித்தார் காந்தா.

பாஸ்கெட் நிறைய பிஸ்கட் !

''இந்த மாவு வெள்ளையா இருக்கு... இது எப்படி பிரவுன் கலருக்கு மாறுது அங்கிள்?'' என்று கேட்டாள் கிரிஷாலி.

''அப்படிக் கேளும்மா...  மாவை, இதோ இந்த டிரக்கரில் ஏற்றி, மெஷினுக்குள் கொட்டிவிடுவோம். அங்கே இருந்து, மாவை மெல்லிதாக்கும் கனமான உருளைகள் வழியாகச் செல்லும் மாவு,  தடிமனான விரிப்பைப் போல நகரும். அது, போகும் வழியில் மறுபடி மறுபடி  மெல்லியதாக்கப்பட்டு, அடுக்குகளாய் நகரும். சரியான தடிமன் வந்தவுடன், சுழலும் கட்டருக்குள் போகும். இங்கே, பெயர் மற்றும் டிசைன் பதிக்கப்பட்டு,  மெஷினின் உதவியோடு சரியான அளவுகளில் பிஸ்கட்கள் வெட்டப்படும். அதோடு, மில்க் ஸ்பிரேவும் செய்யப்படும். பிஸ்கட் எடுத்தது போக, வெளித் தள்ளப்படும் எஞ்சிய மாவு, மீண்டும் ஆரம்ப இடத்துக்கு அனுப்பப்பட்டு மாவோடு கலந்துவிடும்'' என்று சொல்ல, சுட்டிகள் ஆவலுடன் பார்த்தார்கள்.

''அச்சில் இருந்து வரும் பிஸ்கட்டுகள், அடுத்தக் கட்டமாக, 240 அடி நீளமான பிரமாண்ட ஓவனுக்குள் கன்வேயர் பெல்ட் மூலம் நகரும். இங்கே பிஸ்கட்டுகள் சூடாக்கப்படும்போது, பிரவுன் கலருக்கு மாறும்'' என்றார் காந்தா.  இங்கே இருந்து  மற்றொரு வழியாக பிஸ்கட்கள் வெளியே வந்தன. அவற்றைப் பார்த்ததும், ''இந்த பிஸ்கட்டைத் திங்கலாமா அங்கிள்? நாக்கில் எச்சில் ஊறுது'' என்றான் பூர்னேஷ்.

''டேய்... இது நம்ம பிஸ்கட் ஃபேக்டரிடா... அவசரப்படாதே! அவங்களாவே தருவாங்க'' என்றான் ஒரு சுட்டி.

பாஸ்கெட் நிறைய பிஸ்கட் !

இதை ரசித்தபடி சுட்டிகளுக்கு விளக்கினார் காந்தா, ''இப்பவே தின்னக் கூடாது. ஏன்னா, மாவு இன்னும் உலராமல்  ஈரமாக இருக்கும். நான்கு நிமிடங்கள் ஓவனுக்குள் பயணம் செய்து உலர்ந்த பின், சற்று நேரம் கூலிங் கன்வே மூலம் சென்று கூலான பிறகுதான் சாப்பிடக் கூடிய பக்குவம் அதற்கு வரும்'' என்றவர், ''அடுத்து, மெட்டல் டிடெக்டர் சோதனைப் பகுதி. இங்கே ஏதேனும் தேவையற்ற பொருள் கலந்துவிட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த இடத்தில் உள்ள டிரே தானாகக் கீழே இறங்கிவிடும்'' என்று சொல்ல,

''இப்படி ஒதுக்கின பிஸ்கட்களை என்ன செய்வீர்கள் அங்கிள்?'' என்று கேட்டான் சுகவனேஷ். ''அதை அப்படியே உடைத்து குப்பையில் போட்டுவிடுவோம். ஆனால், இது எப்பவாவதுதான் நடக்கும்!'' என்றார் காந்தா.

அவரே தொடர்ந்து, ''பிஸ்கட்களை மெஷினே எண்ணி, அச்சிட்ட கவர் வரும் பகுதிக்கு நகர்த்தும். அங்கே உறைகளில் இடப்பட்டு, இரண்டு பக்கங்களிலும் சீல் செய்யப்படும். இறுதியாக, பாக்கெட்டுகள் காட்டன் பெட்டிகளில் அடுக்கப்பட்டு, சீல் வைத்து விற்பனைக்கு அனுப்பப்படும்'' என்று முடித்தார் காந்தா.

மீண்டும் குளிர்சாதன அறைக்குச் சென்றனர். அங்கே க்விஸ் புரொக்ராம் நடத்தத் தயாராய் இருந்தார் அவினேஷ். 'இலை ஏன் பச்சையாக இருக்கிறது?’, 'குளோபல் வார்மிங்கை எப்படிச் சரிசெய்வது?’ போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன. சுட்டிகள் அதிரிபுதிரியாய்ப் பதில் அளித்து, ஃபேக்டரி நிர்வாகிகளை அசர அடித்தனர். ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு பிஸ்கட் பாக்கெட் பரிசாகக் கொடுக்கப்பட்டது.

இதுதவிர, தனியாகவும் ஒரு பை நிறைய விதவிதமான பிஸ்கட் பாக்கெட்களை நிரப்பிக் கொடுத்து சுட்டிகள் ஒவ்வொருவரையும் சந்தோஷத்தில் திளைக்கவைத்தனர் நிர்வாகத்தினர்.

''ஒன்ஸ்மோர் இங்கே வர்றோம்... பை பை!'' என்று வாய் நிறைய சிரிப்பும், கை நிறைய பிஸ்கட்ஸுமாய் சுட்டிகள் சொன்னது இன்னமும் நம் கண்களை விட்டு அகலவில்லை!