Published:Updated:

கிராமத்து விளையாட்டு

திருடன் போலீஸ்இரா.முத்துநாகு

##~##

'கள்ளன் பெருசா? காப்பான் பெருசா? கள்ளன்தான் பெருசு.’

இப்படிக் கேள்வி கேட்டவர்களே விடை சொல்வதை இன்னும் கிராமங்களில் கேட்கலாம். அதாவது, காவலாளியைவிடத் திருடனே பல சமயங்களில் திறமையானவனாக இருப்பானாம். அப்படியானால், அந்தத் திருடனைப் பிடிக்க நாம் மிகவும் புத்திக்கூர்மையுடன் இருக்க வேண்டும் அல்லவா? இதற்காகப்  பல விடுகதைகளையும் சொலவடைகளையும் விளையாட்டு மூலம் சொல்லி இருக்கிறார்கள். அதுதான் கள்ளன் காப்பான் விளையாட்டு. இப்போது, திருடன் போலீஸ் என மாறி இருக்கிறது.

இதைப் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே விளையாடுவார்கள். சில சமயம் பெண்களும் சேர்ந்துகொள்வார்கள். திருடனைப் பிடிக்க வெளிச்சம் தேவை. அதனால், முன் நிலவு வெளிச்சம் உள்ள நேரத்தையே விளையாடத் தேர்ந்து எடுப்பார்கள்.

எல்லா விளையாட்டுகளைப் போலவே இதிலும் இரண்டு அணிகள் இருக்கும். தலைவர்கள் காயா, பழமா போடுவார்கள். காய் விழுந்தால் திருடன், பழம் விழுந்தால் போலீஸ். திருடன் அணியினர், ஓடிப் போய்  மறைந்துகொள்ள வேண்டும். கிராமத்துத் தெருக்களில் உள்ள சந்து பொந்து, கோழிக்கூடு, தண்ணீர் இறைக்கப் பயன்படும் சால், சாக்குமூட்டை இடுக்குகள் போன்றவற்றில் மறைந்துகொள்வார்கள். சட்டை போட்டு இருந்தால் தெரிந்துவிடும் என்பதால் கழற்றி, சுருட்டி வைத்துக்கொள்வார்கள். போலீஸ் அணியினர் தேடிக் கண்டுபிடித்து, கையைப் பின்னால் கட்டித் தலைவனிடம் அழைத்து வர வேண்டும்.

கிராமத்து விளையாட்டு

இந்த விளையாட்டில், திருடன் மறைந்து இருக்கும் இடத்தைப் போலீஸ் பார்த்துவிட்டால், திருடன் ஓடாமல் சிக்கிக்கொள்ள வேண்டும். இது விளையாட்டின் பொது மரபு. திருடனைப் பிடித்து வரும் போலீஸ், தன்னுடைய உயர் அதிகாரியான அணித் தலைவன் முன்பு நிறுத்துவார். ''என்ன திருடினே?'' என்று அதிகாரி கேட்க, ''பசி பயங்கரமாக இருந்துச்சு. இவன் வீட்டில் கறிச் சாப்பாடு வாசனை வந்துச்சு. அதனால், திருடிச் சாப்புட்டேன்'' என்பான் திருடன். ''ஆட்கள் இருக்கிறப்ப எப்படி எடுத்தே?'' என விசாரிக்க, ''முதலில் வீட்டை நோட்டம் விட்டபோது, வீட்டுல ஒரு தீபம் எரிந்தது. அதை ஊதி அணைச்சுட்டேன். நேரம் ஆனதால், எல்லோரும் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க. நான் மண்டியிட்டுப் படுத்து, பூனை மாதிரி  ஊர்ந்து போய், சோற்றுச் சட்டியில் குழம்பை ஊற்றினேன். அப்படியே  ஓடைக்குத் தூக்கி வந்து, எல்லோரும் கூட்டாகச் சாப்பிட்டோம்'' எனச் சொல்ல, அனைவரும் சிரிப்பார்கள். ''சரி... சரி, இனி மேல் இப்படிச் செய்யக் கூடாது'' என்கிற அதிகாரி திருடு கொடுத்தவரிடம், ''நீங்க முழிச்சு இருக்கும்போதே திருடி இருக்கான். வீட்டுக்காரங்க இனி மேல் கவனமா இருக்கணும்'' என்று போலீஸ் அதிகாரி அறிவுரை சொல்ல, விசாரணை முடியும்.

இப்படியாக ஒவ்வொரு திருடனிடமும் விசாரணை நடக்கும். சில திருடர்களைப் போலீஸால் பிடிக்க முடியாமல் போய்விடும். அப்போது, அனைத்துப் போலீஸாரும் கூட்டாகச் சேர்ந்து தேடுவார்கள். அதற்கு முன்பு திருடனாக இருப்பவன், வழக்கமாக எந்த இடத்தில் மறைந்து இருப்பான், எவ்வளவு தூரம் போவான், எதன் மீது ஏறிப் படுத்து இருப்பான் எனத் திருடனைப் பற்றிய ஆய்வு நடக்கும். இதில், போலீஸுசுக்குப் பல ஐடியாக்களைப் பிடிபட்ட திருடர்களே சொல்லுவார்கள். அனைவரும் பிடிபட்ட பின்பு, திருடர்கள் போலீஸ்களாக மாறி, விளையாட்டு மறுபடியும் தொடங்கும். இந்த விளையாட்டில் தனி நபர்களின் பண்புகளை ஆய்வு செய்வது, புத்திக்கூர்மை, தைரியம் போன்றவை வளரும்.

சில சமயம் இரவு 12 மணி வரைகூட விளையாட்டு நீடிக்கும். அப்போது பெரியவர்கள் தேடி வந்து, ஒளிந்து இருக்கும் திருடர்களைக் கண்டுபிடித்து, தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு