Published:Updated:

என் 10 - ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

பூ.கொ.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், டிசம்பர் 18.12.1946-ல் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் பிறந்தார். அப்பா, கணினித் தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியாளர். அம்மா, உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர். ஸ்பீல்பெர்க், அப்பா செல்லம். பழுதான தன் பழைய கேமரா ஒன்றை, ஸ்பீல்பெர்க்குக்குக் கொடுத்தார் அப்பா. அதுதான் ஆரம்பம்!  

பள்ளிக் காலத்தில் எட்டுக் குட்டிக் குட்டிப் படங்களை எடுத்தவர் இவர். அந்தப் படங்களை வீட்டில் நண்பர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க, 25 சென்ட் கட்டணம் வசூலிப்பார். தங்கை தயாரித்த பாப்கார்னை இடைவேளைகளில் விற்பார்கள். அப்போது ஸ்பீல்பெர்க் எடுத்த படங்கள் எல்லாம் துப்பாக்கிச் சூடு, போர் எனத் த்ரில்லர் வகையைச் சேர்ந்தவை.

தெற்கு கலிஃபோர்னியா நாடகக் கல்லூரியில் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மனம் தளராமல், கலிஃபோர்னியா மாகாணப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கேயும் தொடர்ந்து படிக்கவில்லை. சினிமா ஆர்வம் உந்தித் தள்ள, உலகப் புகழ் பெற்ற யுனிவர்சல் ஸ்டுடியோவின் எடிட்டிங் துறையில் சம்பளம் வாங்காத மாணவராகச் சேர்ந்தார். ஒரு நாள் கூட விடுமுறை கிடைக்காத வேலை அது.

என் 10 - ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

யுனிவர்சல் ஸ்டுடியோவுக்காக 'ஆம்ப்ளின்’ என்கிற குறும்படத்தை இயக்கியது வாழ்வின் முதல் திருப்புமுனை. 26 நிமிடங்கள் ஓடும் அந்தப் படம். கவலைகள் இல்லாத ஒரு ஹிப்பி இளைஞன் ஒரு பெண்ணோடு பாலைவனத்தைக் கடப்பதுதான் கதை. படத்தில் வசனமே கிடையாது. பின்னணியில் கிடார் இசை மட்டுமே ஒலிக்கும் நகைச்சுவைப் படம்.

ஸ்பீல்பெர்க் ரொம்பவும் கூச்ச சுபாவம் உள்ளவர்.  நண்பர்கள் அதிகம் இல்லாதவர். இளமைக் காலத்தில் தாய், தந்தை விவாகரத்துப் பெற்று பிரிந்ததன் தாக்கமும், ஒரு சகோதரன்  இல்லையே என்கிற ஏக்கமும்தான்  உலகப் புகழ் பெற்ற ஈடி படம் எடுக்க உந்துதலாக இருந்தது.

தன் படங்களுக்காகக் கடுமையாக உழைப்பார். 'ஒவ்வொரு படமும் ஒரு மேஜிக்’ எனப் பார்க்கிற ரசிகர்கள் உணரவேண்டும் என்பார். அதிலும் குழந்தைகளுக்கான படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம். அப்படி எடுத்த படங்கள்தான் ஜுராசிக் பார்க், ஈடி, டின்டினின் சாகசங்கள் ஆகியவை.

பல படங்களை ஒரே வாரத்தில் பல முறை பார்த்துவிடுவார். கதைகள் சொல்லிக் குழந்தைகளை மகிழ்விக்கவும் செய்வார். 'ஜாஸ்’ கதையைப் படிப்பதற்கு முன்பு வரை அது ஏதோ பல் சம்பந்தப்பட்ட புத்தகம் என்றே நினைத்துக்கொண்டு இருந்தார். படித்து முடித்ததும் உடனே படம் எடுக்கலாம் எனக் கிளம்பிவிட்டார்.

என் 10 - ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

'இல்லாத உலகத்தைக் காட்டி, படத்தை ஓட்டி விடுகிறார்’ என்ற விமர்சனம் எழுந்தது.  ஹிட்லரிடம் இருந்து ஆயிரம் யூதர்களைக் காப்பாற்றப் போராடும் 'ஷிண்ட்லர்’ எனும் மனிதனின் கதையைக் கறுப்பு வெள்ளையில் சொல்லிக் கண்ணீரை வரவைத்தார். அந்தப் படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். அந்தப் படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை ஹிட்லரின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறக்கட்டளை மூலம் கொடுத்துவிட்டார்.

   அமெரிக்க உள்நாட்டுப் போரில் லிங்கன் சந்தித்த சிக்கல்கள், அதை அவர் எதிர்கொண்ட விதம் ஆகியவற்றை மையமாக வைத்து இப்போது  படம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.  

குழந்தைகளுக்கான 'ட்ரீம் வொர்க்ஸ்’ எனும் அனிமேஷன் நிறுவனத்தை நிறுவி உள்ளார். இவருக்கு ஏழு குழந்தைகள். ஒரு அனிமேஷன் படத்தைத் தயாரிப்பதற்கு முன் தன் பிள்ளைகளிடம் கதையைச் சொல்லி, அவர்கள் கண்கள் ஒளிர்கிறதா எனப் பார்த்த பின்பே அதைப் படமாக எடுக்கச் சம்மதம் சொல்வார். 'திரையரங்கில் படம் பார்க்கிற 500 ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளாக மாறி என் படத்தை ரசிக்க வேண்டும், அதுதான் என் குறிக்கோள்’ என சொல்கிற சாதனையாளர் ஸ்பீல்பெர்க்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு