Published:Updated:

ஸ்கூல் ஸ்டார் !

சா.வடிவரசு படங்கள் : பா.காயத்ரி அகல்யா

பிரீமியம் ஸ்டோரி
##~##

யோகா கலை மூலம் உலகின் கவனம் ஈர்க்கிறார் சென்னை, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் 11-ஆம் வகுப்புப் படிக்கும் நிகாரிகா.

சென்ற ஆண்டு உருகுவேயில் நடந்த சர்வதேச யோகாப் போட்டிகளில் ஐந்து பதக்கங்களை வென்றார் என்று கேள்விப்பட்டு, அவரைப் பார்க்கச் சென்றோம். உடலை வில்லாக வளைத்து, கைகளைத் தலைக்கு மேல் குவித்து, வணக்கம் சொல்லி வரவேற்றார். ''அடேங்கப்பா... யோகாவில்தான் கலக்கிறீங்கன்னு நினைச்சோம். ஜிம்னாஸ்டிக்கும் தெரியும்போல'' என்றதும் சிரிக்கிறார்.

'ஆரம்பத்தில் ஜிம்னாஸ்டிக், நீச்சல் இரண்டும்தான் என்னோட ஃபேவரிட்'' என்கிற நிகாரிகா, நீச்சலில் பல தங்கப் பதக்கங்களைக் குவித்த சுறா.

அப்புறம் எப்படி யோகா ஆர்வம் ஏற்பட்டது?

ஸ்கூல் ஸ்டார் !

''உடலை வளைத்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுக்கும்போது, அவ்வப்போது கை, கால்களில் காயங்கள் ஏற்படும். அதனால், ஜிம்னாஸ்டிக் மேல் ஒரு வித பயம் இருந்தது. நீச்சலில் பதக்கங்கள் வாங்கினாலும் ஈடுபாடு குறைஞ்சுடுச்சு. ஒரு நாள் என் தோழி யோகா பயிற்சி எடுப்பதாகச் சொன்னாள். 'யோகா செய்வதில் அடி படாது’னு சொன்னதுதான் அதைக் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது'' என்று  யோகாவில் நுழைந்த கதையைச் சொன்னார் நிகாரிகா.

ஸ்கூல் ஸ்டார் !

8-ஆம் வகுப்புப் படிக்கும்போது, முதன் முதலில் மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்று ஐந்தாவது பரிசை வாங்கியபோது, சீக்கிரமே முதல்  இடத்தைப் பிடிக்கும் தீவிரம் பிறந்ததாம்.

''கடுமையான பயிற்சிகள் மூலம் முதல் இடத்தைப் பிடித்தேன். சென்ற வருடம் முதல் முறையாக ஆசிய அளவில் நடந்த யோகாசனப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். அந்த வெற்றி எனக்கு மேலும் ஊக்கத்தைத் தந்தது. தொடர்ந்து உருகுவேயில் நடந்த சர்வதேச யோகா போட்டிகளில் ரிதமிக் யோகா, அத்லெட் யோகா, யோகா டான்ஸ், ஆர்ட்டிஸ்டிக் யோகா, ஒற்றையர் மற்றும் இரட்டையர் யோகா எனப் பல போட்டிகளில் கலந்து கொண்டேன்'' என்கிறார்.

இதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என ஐந்து பதக்கங்களைக் குவித்து அசத்தி இருக்கிறார்.   இது வரை மாநில அளவில் நடத்தப்பட்ட யோகாசனப் போட்டிகளில் 25-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று உள்ளார். மேலும், தேசிய அளவில் மூன்று பதக்கங்கள். சென்ற வருடம் தாய்லாந்தில் நடந்த போட்டியில் ஆசிய அளவில் 'யோகா சாம்பியன்’ பட்டம்.

'ஹார்டு வொர்க்... ஹேப்பி மைண்ட் இதுதான் நிகாரிகாவுக்கு நான் சொல்லிக் கொடுத்த பாடம். அதை அப்படியே பின்பற்றி பல சாதனைகளைச் செய்கிறாள்'' என்கிற தந்தை பிரேம் குரலில் பெருமிதம்.

''நிகாரிகாவின் சாதனைகள் தொடர எங்களின் முழு சப்போர்ட் உண்டு. எக்ஸாம் நேரங்களில் போட்டி வந்தால், அவளுக்கு வேறு நாளில் தனி எக்ஸாம் வைப்போம். நிகாரிகாவின் சாதனை, எங்கள் பள்ளிக்கும் பெருமைதானே'' என்கிறார் பள்ளி முதல்வர் அமுதலக்ஷ்மி.

ஸ்கூல் ஸ்டார் !

இன்னும் இன்னும் பல சாதனைகள் மூலம் தமிழ்நாட்டுக்கும் நிகாரிகா பெருமை சேர்க்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு