Published:Updated:

தீவிரவாதிகளுக்கு ஒரு செக் !

சுட்டி விஞ்ஞானி

பிரீமியம் ஸ்டோரி
##~##

நாடு முழுவதும் தீவிரவாதம் தலைதூக்கி இருக்கும்  நிலையில், தேச நலனைப் பாதுகாக்கும் வகையில் தனது அறிவியல் கண்டுபிடிப்பினைச் செய்து அசத்தி இருக்கிறார் அதிரா.  ஈரோடு மாவட்டம், திண்டல் பாரதிய வித்யாபவன் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி.

மாநில அளவிலான 'இன்ஸ்பைர்’ கண்காட்சியில் பங்கேற்றுத் தங்கப் பதக்கம். புதுடெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகொள்ளக் காத்திருக்கிறார்.

'வகுப்பில் ஒரு நாள், '2001 டிசம்பர் 13-ல் நம் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்தது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் பலர் உயிர் இழந்தார்கள்’ என்று எங்கள் ஆசிரியர் சொன்னபோது, அது என்னை ரொம்பவே பாதித்தது. அறிவியல் தொழில்நுட்பம் மூலம் இதுபோன்ற விஷயங்களைத் தடுப்பது எப்படி என்று யோசித்தபோது இந்த ஐடியா எனக்குத் தோன்றியது' என்கிற அதிரா, தனது கண்டுபிடிப்பைப் பற்றி விளக்கினார்.

தீவிரவாதிகளுக்கு ஒரு செக் !
தீவிரவாதிகளுக்கு ஒரு செக் !

'பார்லிமென்ட் செக்யூரிட்டி சிஸ்டத்தில், அங்கே வரும் அனுமதி பெற்ற வாகனங்கள் அனைத்திலும் ரேடியோ வேவ் ட்ரான்ஸ்மிட்டர் (Radio Wave Transmitter) பொருத்தப்பட வேண்டும். ஆள் இல்லாத முதல் நுழைவு வாயிலில் அதற்கான ரிசீவர் (Receiver)  பொருத்தப்பட வேண்டும். இரண்டாவது நுழைவு வாயிலில், நமது வீரர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். முதல் நுழைவு வாயில் அருகில் வாகனம் வந்தவுடன், அதன் டிரைவர் அவருக்கு அளிக்கப்பட்ட ரகசிய அலைவரிசையிலான ரேடியோ ஃப்ரீக்வென்ஸியை (Radio frequency)  ட்யூன் செய்ய வேண்டும். அது, நுழைவு வாயிலில் உள்ள ரிசீவரால் ஏற்கப்பட்டு, மேட்ச் ஆனால் மட்டுமே பச்சை விளக்கு எரியும். அதன் பின்னரே வாகனம் முதல் நுழைவு வாயிலைக் கடக்க அனுமதிக்கப்பட வேண்டும். இரண்டாவது நுழைவு வாயிலில், வழக்கமான சோதனைகளுக்குப் பின்னர் வாகனம் உள்ளே செல்ல அனுமதிக்கப்படலாம்.

அனுமதி பெறாத அல்லது தீவிரவாதிகளின் வாகனம், முதல் நுழைவு வாயிலின் அருகே வரும்போது பச்சை விளக்கு எரியாது என்பதால், நமது பாதுகாப்புப் படை வீரர்கள் உடனே அலெர்ட் ஆகிவிட முடியும். தீவிரவாதத் தாக்குதலை உயிரிழப்பின்றித் தடுத்துவிட முடியும்' என்கிறார் அதிரா.

'இந்த ரேடியோ அலைவரிசையை,  தேவைப்படும் போது ரகசியமான முறையில் மாற்றிக்கொள்ளவும் முடியும். மேலும் இதனை நாடாளுமன்றக் கட்டடம் மட்டுமின்றி, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்' என்கிறார் அதிரா.    

அதிராவின் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, 'அதிராவின் இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்குத் தெரிவித்தோம். அவர் இதனைச் செயல்படுத்துவது சாத்தியம்தான் என்று கடிதம் மூலம் தெரிவித்துப் பாராட்டினார்' என்றார்.

அதிராவின் கண்டுபிடிப்புக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியை பிரேம்சுதா, 'அதிராவுக்கு அறிவியல் தொடர்பான சோதனைகள் செய்வதில் ஆர்வம் அதிகம். எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்-ஐப் பயன்படுத்தி, நமது கடல் எல்லையைச் சரியாக அறிந்து மீனவர்கள் மீன் பிடிக்க உதவும் கருவி... மருத்துவமனை, கல்வி நிலையங்கள் இருக்கும் பகுதிகளில் பேரிரைச்சல் ஏற்படுத்தும் வகையில் ஒலி எழுப்புவதைத் தடுக்கும் கருவி ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்' என்றார்.

''எனது இந்தக் கண்டுபிடிப்புக்குக் கிடைத்த பாராட்டுகளைவிட, 'தீவிரவாதம் அறவே ஒழிக்கப்பட்டது. நம் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது’ என்ற செய்திதான் எனக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கும்'' என்கிறார் அதிரா.

தீவிரவாதிகளுக்கு ஒரு செக் !
தீவிரவாதிகளுக்கு ஒரு செக் !

நம் எல்லோரின் ஆசையும் அதுதானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு