ஸ்பெஷல்
Published:Updated:

அவதார் - களம் இறங்கிய கல்பனா சாவ்லாக்கள் !

கே.ஆர்.ராஜமாணிக்கம்மகா.தமிழ்ப் பிரபாகரன்

##~##

விண்வெளி ஆராய்ச்சிக்காக நாசாவில் இருந்து பறந்த இந்தியப் பறவை கல்பனா சாவ்லா, இன்று பள்ளிக் குழந்தைகளின் மன வானில் சிறகடிப்பவர். அவர் நேரில் வந்தால் எப்படி இருக்கும்?

தர்மபுரி மாவட்டம், அரூர் இந்தியன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் மெயின் கேட்டில் 'வெல்கம் டு அவர் கல்பனா சாவ்லாஸ்’ பேனர் வரவேற்றது. 'கல்பனா சாவ்லா இங்கே எப்படி?’ என்று சிலர் தலையைச் சொறிந்துகொண்டு செல்ல, சாலையின் இரண்டு பக்கங்களிலும் இருந்து 'பரபர’ என  ஹெல்மெட்டுடன் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்த சின்னச் சின்ன கல்பனா சாவ்லாக்களைப் பார்த்ததும் புரிந்தது.

சில சாவ்லாக்கள் அப்பாக்களின் பின்னால் அடையாளம் தெரியாதபடி வந்து இறங்கினார்கள். குழப்பமான வாட்ச்மேன், ''யாரு நீங்க?'' என்று  தடுத்து நிறுத்தினார். ''என்ன தாத்தா என்னைத் தெரியலையா? நான்தான் மலைமதி'' என்று ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டுச் சொல்ல, பக்கத்தில் நின்ற ராஜேஸ்வரியும் கவிதாவும் கேலியாய்ச் சிரித்தனர். ''அட இது என்ன கல்பனா சாவ்லா வேஷமா? ராக்கெட்ல பறந்துபோச்சே அந்தப் பொண்ணுதானே?'' என்று வாட்ச்மேன் கேட்க, ''ஆமாம்... வா ஹாஸ்டலில் போயி கலக்கலாம்'' என்று மூவரும் ஓடினார்கள்.

அவதார் - களம் இறங்கிய கல்பனா சாவ்லாக்கள் !

''ஏன்பா, ஹெல்மெட் வேணும்னு சொன்னேனே எங்கே?'' என்று ஒரு சிறுமி கேட்க, ''அய்யய்யோ... நேத்தே உன் மாமாகிட்ட சொல்லி இருந்தேன். விடியக் காலமா வெளியே போய்ட்டார். வேற யாரு கிட்டயாச்சும் வாங்கி அட்ஜஸ் பண்ணிக்கே'' என்றார் அப்பா. மூட்-அவுட்டால் முகம் சோர்ந்த அந்தப் பெண்ணிடம் ''என்னோட ஹெல்மெட்டை எடுத்துக்கோ'' என்று கொடுத்தார் ஓர் அங்கிள். சாவ்லா வேஷம் போட்டுக்கொண்டு இருந்த டீச்சரிடம் புன்முறுவலோடு சென்றாள் அந்தச் சிறுமி.

''இப்பிடி போட்டோ எடுக்கிறது, படம் புடிக்கிறது தெரிஞ்சு இருந்தா செயின், வளையல் எல்லாம் எடுத்து வந்து இருப்பேனே கண்ணு... நேத்து சொல்லி இருக்கலாம்ல'' என்று ஒரு அம்மா சொல்ல, ''கல்பனா சாவ்லா நகை எல்லாம் போட மாட்டாங்கம்மா'' என்றார் ஒரு டீச்சர். ''அட! நகை, செயின் எல்லாம் நான் போட்டுட்டு வந்திருப்பேனே!'' என்றார் அந்த அம்மா.

அவதார் - களம் இறங்கிய கல்பனா சாவ்லாக்கள் !

''பேரன்ட்ஸுக்குச் சிரமம் கொடுக்காமல் நாங்களே மேக்-அப் பண்ணிடுறோம்'' என்று சில ஆசிரியைகளே சிறுமிகளைக் கல்பனா சாவ்லாவாக மாற்றும் வேலையில் மும்முரம் ஆனார்கள். ''டீச்சர், இவ தலை குளிக்காமல் வந்திருக்கா'' என்று ரம்யா புகார் சொல்ல, ''எப்பவும் குளிக்காமயே வர்ற நீ இன்னிக்கு மட்டும் குளிச்சிட்டு வந்துட்டியா? என்று காவ்யா கேட்கவும் அங்கே சிரிப்பு வெடித்தது.  ''ஆரம்பிச்சுட்டாளுங்க புராணத்தை'' என்றார் ஒரு டீச்சர்.      

'தக தக’ என வெள்ளியிலேயே செய்தவை போன்ற பேன்ட்கள், முழுக்கை ஜாக்கெட்டுகள், இடுப்புப் பட்டை, சாவ்லா போல் தலை முடியை வாரி, ஷூ போட்டு... இப்படி டீச்சர்களை நிறையவே வேலை வாங்கினார்கள் மாணவிகள். அப்போது ஒரு பெண் இன்னொரு பெண்ணின் காதில் ''அடிக்கடி என்னைத் திட்டிக்கிட்டே இருக்கிற மிஸ், இப்போ எனக்கு ஷூ மாட்டிவிடுறாங்க. என் நேரம் இன்னிக்கு நல்லா இருக்கு'' என்று கிசுகிசுத்தாள். அங்கே ரகசியமாய்ச் சிரிப்பு எழுந்து அடங்கியது.

அவதார் - களம் இறங்கிய கல்பனா சாவ்லாக்கள் !

முழு உடையும் அணிந்த, கல்பனா சாவ்லாக்கள் கண் முன் நின்றார்கள். நாம்  போட்டோ எடுத்துக்கொண்டு அடுத்த கட்டம் நகர்வதற்குள், சில 'துருதுரு’ சுட்டிகள் இடுப்பில் கைகோத்துக் கொண்டு சிக்குபுக்கு ரயில் விட ஆரம்பித்தார்கள். வெயில் ஏறியதால் களைத்த சுட்டிகளுக்குக் கொஞ்ச நேரம் இடைவேளை விட்டதுதான் தாமதம், எல்லோரும் ஆடைகளை மாற்றிவிட்டார்கள். ''அரிக்கிற மாதிரி இருக்குது அங்கிள்... கசகசன்னு இருக்குது'' என்று புகார் வாசித்தார்கள். சில சுட்டிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மலைபோல் குவித்து இருந்த மணலில் விழுந்து புரண்டு ஜாலியாய்க் கொண்டாடி னார்கள். நிச்சயமாய் சின்ன வயது சாவ்லா குறும்புப் பெண்ணாகத்தான் இருந்திருப்பார். அதைத் தம் பிள்ளைகள் மூலம் கண்டதில் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி. நிஜ கல்பனா சாவ்லா மறைந்தாலும்  சாதிக்க நினைக்கும் பலருக்கும் அவர் ஒரு தூண்டுகோலாய் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

சுட்டிகள் இந்த முறை கல்பனா சாவ்லாக்களாக அசத்தியது 'இந்தியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி’. தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்டுரோட்டில் அமைந்து உள்ள இந்தப் பள்ளி 1992ல் தொடங்கப்பட்டது. சுற்று வட்டாரக் கிராம மாணவர்கள் மற்றும் வெளியூர் மாணவர்கள் படிக்கின்றனர்.

பள்ளியின் தலைவர் ஏ.கே.பழனியப்பன், ''எங்கள் பள்ளியின் அரவணைப்பு வாக்கியம்... 'பெற்றோரே முதல் ஆசிரியர், ஆசிரியர்களே இரண்டாம் பெற்றோர்’ என்பதுதான். பள்ளியில் சேரும் ஒவ்வொரு குழந்தையையும் தனித்திறமையோடும் ஒழுக்கத்தோடும் பண்படுத்துகிறோம். சமூகத்தில் மற்றவர்களுக்கு உதாரணமாகவும், மனிதநேயம் மிக்கவர்களாகவும் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறோம்'' என்கிறார்.

 கல்பனா சாவ்லா!

கல்பனா சாவ்லா 1961 ஜூலை ஒன்றாம் தேதி ஹரியானா மாநிலத்தின் கர்னல் நகரில் பிறந்தார். பெற்றோர் - பனார்சி லால் சாவ்லா, சன்யோகிதா தேவி.

சிறு வயதிலேயே விண்ணில் பறக்க ஆசைப்பட்ட கல்பனா,  கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். பல்வேறு தடங்கல்களைச் சந்தித்தாலும் அமெரிக்காவில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெறுவது வரை நீண்டது அவரது கல்விப் பயணம்.

மாணவியாக இருந்தபோதே விமானத்தையும் கிளைடர்களையும் ஓட்டக் கற்றுக்கொண்டார். அத்துடன் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழையும் பெற்றார்.

ஜீன் பியரி ஹாரிஸன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்கக் குடிமகளான கல்பனா, விண்வெளி குறித்த ஆய்வுகளில் தலைசிறந்து விளங்குவதைக் கண்டுகொண்டது நாசா. 1994ல் நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆறு மாதங்களிலேயே விண்வெளி வீரர் குழுவில் இடம்பிடித்தார்.

1996-ல் முதல் விண்வெளிப் பயணம். ஆறு வீரர்களில் ஒருவராக கல்பனா சாவ்லா பறந்தார். விண்வெளி சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

அவதார் - களம் இறங்கிய கல்பனா சாவ்லாக்கள் !