Published:Updated:

கிராமத்து விளையாட்டு

Vikatan Correspondent

நீலி விளையாட்டு!இரா.முத்துநாகுபடங்கள் : சக்தி அருணகிரி

##~##

கிராமத்துப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தண்ணீரைக் கண்டு பயப்படாமல், அதை எதிர்கொண்டு வாழ விளையாட்டு மூலம் சொல்லித்தருகிறார்கள். அதில் முக்கியமானது நீலி விளையாட்டு எனப்படும் நீச்சல்.

 கிராமங்களில் சிறுவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது, 'ஏலே, இவன் பெரிய பயந்தாங்கோழி... நீச்சல் பழகாம இருக்கான்’ எனக் கிண்டல் அடிப்பார்கள். பிறகு பெரியவர்கள் ஆலோசனைப்படி அவர்களுக்குப் பெரிய பையன்கள் நீச்சல் பழக்குவார்கள். மிகவும் பயந்த சிறுவர்கள், சுரைக் குடுவை அல்லது காற்று நிரப்பிய லாரி டியூப்களை இடுப்பில் கட்டி நீந்திப் பழகுவார்கள்.

இப்படி நன்கு நீச்சல் பழகியதும்... ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் நீலி விளையாட்டு விளையாடுவார்கள். 'கோடை பிறந்தால் போதும் கிணறு அரண்டுபோகும்’ எனக் கிராமங்களில் பெரியவர்கள் சொல்லி வருத்தப்பட்டாலும், ''ஏலே, அந்தக் கிணறு கிடை (நீண்ட நாள் பயன்படுத்தாதது) சளி பிடிச்சுக்கிரும். கிழக்குத் தோட்டத்துக் கிணத்துல நிறைத் (அதிகமாக) தண்ணியா இருக்கு. அங்கன குளிக்காதீங்க. வடக்குத் தோட்டத்துக் கிணத்துல குளிங்க'' என ஆலோசனை சொல்வார்கள்.

கிராமத்து விளையாட்டு

இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். ஆண்கள் மட்டுமே விளையாடுவார்கள். மற்ற விளையாட்டுகளைப்போல் அணி பிரிப்பது இல்லை. நீச்சலில் கெட்டிக்காரர் தானாக முன் வந்து, 'இன்னைக்கு நான் பட்டு வருகிறேன்... மற்றவர்கள் தண்ணீக்குள் போங்க’ எனச் சொல்வார்.

ஒவ்வொருவரும் தங்கள் ஸ்டைலில் முன்புறமாக டைவ், பின்புறமாக டைவ் எனக் கிணற்றுக்குள் குதித்து, நீந்தி, கிணற்றின் சுவரைப் பிடித்தபடி நிற்பார்கள். பட்டு வருபவர், கிணற்றுப் படிக்கட்டில் நின்று தலைகீழாக டைவ் அடித்து, முங்கு நீச்சலாக தண்ணீக்குள் நீந்தி, சுவர்களில் ஒட்டி உள்ளவர்கள் கால்களை இழுத்துத் தொட்டால், அவுட்.

பட்டு வருபவர் வருவது தெரிந்து, மற்றவர்கள் அவரிடம் சிக்காமல் முங்கு நீச்சலாகவோ அல்லது மேலாகவோ நீந்தித் தப்பிப்பார்கள். மூச்சு தம் கட்டுபவர்கள் நீண்ட நேரம் தண்ணீருக்குள் முங்கி, பட்டு வருபவர் கண்ணில் படாமல் தப்புவார்கள். கடைசியாக யார் அவுட் ஆகிறாரோ, அவரே பட்டு வர வேண்டும். இது ஒரு வகை.

சில ஊர்களில்... பட்டு வருபவர் தொட்டு அவுட் ஆக்குவதற்கு முன்பு, கிணற்றுப் படிக்கட்டைத் தொட்டுவிட்டால் அவுட் இல்லை. இதனால், பட்டு வருபவரின் கண்களில் சிக்காமல், முங்கு நீச்சலில் தண்ணீரில் ஆழம் வரை போய் அங்கே இருந்தபடியே கிணற்றுச் சுவரைப் பிடித்துக்கொண்டே குறிப்பிட்ட படிக்கட்டைத் தொடப் பலரும் முயற்சிப்பார்கள். பட்டு வருபவர் மிகக் கவனமாகத் தண்ணீரில் மூழ்கி, குறிப்பிட்ட படிக்கட்டைத் தொடுவதற்கு முன்பு மற்றவர்களைத் தொட்டு அவுட் செய்வார்.

இந்த விளையாட்டு, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும். எந்தச் சூழ்நிலையிலும் பதட்டம் இல்லாமல் முடிவு எடுக்கும் திறனும் எதையும் எதிர்கொள்ளும் திறமையும் வளரும்.