Published:Updated:

சிலிர்க்கவைத்த ஜான்சி ராணிகள் !

க.தனசேகரன் கே.ஆர்.ராஜமாணிக்கம்

##~##

ஜான்சி ராணி என்ற பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் நடு நடுங்கிப்போவார்கள். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய அந்தப் பெண் புலி இப்போது நேரில் வந்தால்?

''ஏனுங்க... எங்க பொண்ணு ஜான்சி ராணி வேஷம் கட்டப்போவுதாமே உங்களுக்குச் சொன்னாங்களா?''

''ஆமா அம்மணி பள்ளிக்கூடத்துல இருந்து பிரின்சிபால் போன்பண்ணிச் சொன்னாருங்க...''  

''ஏதோ புரோக்ராமுங்களாம் நாளைக்கு, போவோணும்'' இப்படி அந்த ஏரியாவில் இரண்டு நாட்களாகவே பேச்சு.

அன்று காலை  திருச்செங்கோடு 'வித்யா விகாஸ் இன்டர்நேஷனல் பள்ளி’ நுழைவாயில் அருகே வந்து நின்ற டவுன் பஸ்ஸில் இருந்து இரண்டு ஜான்சி ராணிகள் தங்கள் அம்மாக்களுடன் இறங்கினர். தலையில் போர் வீராங்கனைகளுக்கான தலைக் கவசம், இடுப்பில் செருகி இருந்த வாள், அவற்றைச் சூடி வந்த கம்பீரம் எல்லாம் பார்த்துவிட்டு அங்கே நின்ற ஒரு பாட்டி ''என்ன கண்ணு இது... ராசா வேஷம் போட்டுப் போறீங்களாக்கும்?'' என்று கேட்டார்.

''இது ராசா வேஷம் இல்ல பாட்டி, ராணி வேஷம். மூக்குத்தியைப் பார்த்தா தெரியலயாக்கும்?'' என்று ஒரு ஜான்ஸி ராணி சொல்ல, பாட்டியோடு சேர்ந்து பக்கத்தில் நின்றவர்களும் சிரித்தனர்.

சிலிர்க்கவைத்த ஜான்சி ராணிகள் !

இன்னொரு ஜான்சி ராணி, ''அம்மா... அம்மா, அப்பா கிட்ட சொல்லி எனக்கும் இதுமாதிரி மூக்குத்தி வாங்கித் தரச் சொல்லும்மா'' என்று கேட்க, ''இப்ப என்ன மூக்குத்திக்கு அவசரம்? நீ படிச்சுப் பெரிய பொண்ணா ஆனதும்... உனக்கு டிசைன் டிசைனா வாங்கித் தர்றேன்'' என்றார்.

குட்டிப் பெண்களுக்கு ஜான்சி ராணிபோல் வலது பக்கம் வகிடு எடுத்துத் தலை வாருவதே டீச்சர்களுக்கு பெரிய வேலை. தலையில் முடி குறைவாக இருந்தவர்களுக்கு தலைக்கவசம் அதை மறைத்தது பிளஸ். நெற்றியில் பிறை வடிவில் பொட்டு,  காதில்  மணி, கழுத்தில் மாலையுடன் அட்டியல், ஒட்டியாணம், பளபளக்கும் வாள் என ராணிக்கான கெட்டப் வரவும் அனைவரும் வீர மங்கைகளாக வாள் எடுத்து சண்டைபோடத் தொடங்கிவிட்டனர்.

''அந்நியப் படைகளுக்கு எதிராய் வாள் உயர்த்துவோம், எங்கள் வாள்களால் அவர்களைக் கூறுபோடுவோம்'' என்று கோரஸாய்க் குரல் எழுப்ப, சுற்றி நின்றவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

சிலிர்க்கவைத்த ஜான்சி ராணிகள் !

''ஜான்சி ராணி குதிரையில் வரலையா?'' என்று ஸ்கூல் டிரைவர் கேட்க, குதிரையைக் கட்டிவெச்சு இருந்தேனா... அது ஓடிப்போயிருச்சு!'' என்று ஒரு ஜான்சி ராணி வெள்ளந்தியாய்ச் சொல்ல, எல்லோரும்  ரசித்துச் சிரித்தனர்.

சிலிர்க்கவைத்த ஜான்சி ராணிகள் !

வாள் இடையில் இருக்கும்போது கைகள் சும்மா இருக்குமா? இரண்டு இரண்டு பேராக, வாள் பயிற்சி செய்ய ஆரம்பித்தார்கள். சிலர் கைகளாலும் சண்டை போட்டனர். அப்போது ஒரு ஜான்சிராணி, ''ஜான்சிக்கு சடுகுடுன்னா ரொம்பப் பிடிக்கும். யாரு வர்றீங்க என்னோட சடுகுடு விளையாட?'' என்று அழைத்த நொடியே, 'நான் நீ’ என்று  தயாரானார்கள். அப்போது ஒரு டீச்சர் குறுக்கிட்டு ''மண்ணில் விளையாடினா, டிரெஸ் அழுக்காயிடும், கழட்டி வெச்சுட்டு உங்க கலர் டிரெஸைப் போட்டுக்கங்க'' என்றார்.

சிலிர்க்கவைத்த ஜான்சி ராணிகள் !

''மிஸ் நீங்க எப்பவும் இப்பிடித்தான். இதுக்கு எங்க அம்மாவே தேவலாம்'' என்று சொன்னதும் மற்ற ஜான்சி ராணிகளோடு சேர்ந்து, அந்த மிஸ்ஸும் சிரித்தது கலகலப்பூட்டியது.

அந்நியர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஜான்சி ராணியின் பங்கு மகத்தானது. அவரின் மதிநுட்பமும் மன வலிமையும் வீர தீரச் செயல்களும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.

சிலிர்க்கவைத்த ஜான்சி ராணிகள் !