Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

##~##

''மை டியர் ஜீபா... கிணறுகளை ஏன் வட்ட வடிவத்திலேயே அமைக்கிறார்கள்?''

-செ.செந்தாமரை, காரைக்கால்.

''பாலங்கள், பழைய பெரிய கட்டடங்களைக் கவனிச்சு இருக்கியா செந்தாமரை? அவை பெரும்பாலும் ஆர்ச் வடிவில் இருக்கும். ஆர்ச் வடிவத்துக்கு பாரத்தைத் தாங்கும் சக்தி அதிகம். காரணம், ஆர்ச் வடிவில் கட்டும்போது கற்கள் மற்றும் மணல் துகள்கள் இறுக்கமாகப் பிணைந்து அதிகப்படியான உறுதியை ஏற்படுத்துகின்றன. கிணறு என்பதும் இரண்டு அரை வட்ட ஆர்ச்களின் இணைப்புதான். வட்ட வடிவில் கிணறுகளை அமைப்பதால் அடிப்பகுதியில் கற்களும் மணலும் பிணைந்து உறுதியாக நிற்கிறது. இதுவே சதுர வடிவில் வெட்டினால் நாட்கள் செல்லச் செல்ல உள் பகுதியில் மணல் உதிர ஆரம்பித்துவிடும்.''  

''ஹலோ ஜீபா... கடலில் அலைகள் ஓயாமல் வந்துகொண்டே இருக்கிறதே அது எப்படி?''

-ச.தாமோதரன், சென்னை-82.

''கடலில் அலை ஏற்படுவதற்குக் கடல் மட்டத்தின் மீது வீசும் காற்று முக்கியக் காரணமாக இருக்கிறது. பூமியில் காற்று இருக்கும் வரை அலைகள் இருக்கும். தவிர கடல் அலை விஷயத்தில் நிலா மற்றும் சூரியனின் பங்கும் உண்டு. நமது விஞ்ஞானிகள் அலைகளைப் பல வகைகளாகப் பிரிக்கிறார்கள். பூமிக்கு நேர் கோட்டில் நிலவு வரும்போது, இழுவிசை காரணமாக அலைகள் மேல் நோக்கி எழும். இதனை எழுச்சி அலைகள் என்பார்கள். நிலவு பூமிக்கு அருகில் வரும்போது ஏற்படும் அலைகளுக்கு பெரிஜீ என்று பெயர். நிலா-சூரியன்- பூமி மூன்றும் நேர் கோட்டில் இருக்கும்போது அலையின் வீச்சு குறைவாக இருக்கும். இதனை மட்ட அலைகள் என்பார்கள். கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டாலோ அல்லது எரிமலை வெடித்தாலோ எழும் அலைகளே சுனாமி எனப்படுகிறது.''  

மை டியர் ஜீபா !

''ஹாய் ஜீபா... நாய்க்கு உண்மையிலே நன்றி உணர்வு இருக்கிறதா? அதுக்கு மட்டும் எப்படி அந்த ஸ்பெஷல் வந்துச்சு?''

  -டி.பிரனேஷ்குமார், சின்ன மேட்டுப்பாளையம்.

''பழக்கம்தான் காரணம் பிரனேஷ். மனிதனுக்கும் நாய்க்குமான பழக்கம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆதி மனிதன் குகையில் வசித்தபோதே அவனுடன் நாயும் சேர்ந்து வசித்து இருக்கிறது. அதற்கு ஆதாரமாக மனிதன் மற்றும் நாயின் எலும்புக்கூடுகளை ஒரே இடத்தில் இருந்து எடுத்து இருக்கிறார்கள். ஆதி மனிதனுக்கு நாய்கள் வேட்டையில் உதவி இருக்கின்றன. காட்டைவிட்டு ஊர்களில் வசிக்கும் சூழ்நிலைக்கு மனிதன் மாறியபோது நாயும் அவனுக்குத் துணையாக வந்துவிட்டது. இப்படிக் காலம் காலமாகப் பழகி வந்ததால், மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து, அதற்கு ஏற்ப தனது செயல்களை வெளிப்படுத்தும் திறன் பெற்றது. சிங்கம், முதலை மற்றும் பாம்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்களைப் பார்த்து இருப்போம். பழக்கம் இருந்தால் எல்லா உயிரினத்துக்கும் இந்த உணர்வு வரும்.''  

மை டியர் ஜீபா !

''ஹலோ ஜீபா... மற்ற உயிரினங்களைப் போலவே தாவரங்களிலும் ஆண், பெண் இருக்கிறதா?''

   - எஸ்.சபரிஷ், திருச்சி.

''நிச்சயம் உண்டு சபரீஷ். ஆனால், மற்ற உயிரினகளைக் காட்டிலும் தாவரங்களில் இந்த வித்தியாசம் குறைவு. பெரும்பாலும் மரங்கள் ஆணும் பெண்ணும் கலந்ததாகவே இருக்கும். பனை மற்றும் பப்பாளி போன்ற சில மரங்களில் ஆண், பெண் வித்தியாசம் பளிச் எனத் தெரியும். இவ்வகை மரங்களில் ஆண் மரங்கள் காய்க்காது. மற்ற உயிரினங்களில் ஆண், பெண் வேறுபாட்டிற்கு குரோமோசோம் காரணமாக அமைகிறது. ஆனால், தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நிகழும்போதே ஆண், பெண் கலந்ததாக மாறிவிடுகிறது. நெற்பயிர்கள் போன்ற பல தாவரங்கள் அப்படித்தான். இது இயற்கை நமக்காக செய்கிற அற்புத வேலை. யோசித்துப்பாருங்கள்... மற்ற உயிரினங்களைப்போலவே தாவரத்திலும் பெண்ணுக்குச் சமமாக ஆண் என்று இருந்தால் மனிதன் உட்பட கோடிக்கனக்கான உயிரினங்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும்.''

''ஜீபா... எனக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கு. ஞாபக சக்திக்கு ஒரு வழி சொல்லு?''

  - கே.பரணிதரன், சேலம்.

''சில வித்தியாசமான செயல்கள் மூலம் ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். உதாரணமாக, நாளை நீ ஒரு பொருளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், இரவு உன் கர்ச்சீஃபை பந்துபோல் நன்றாகச் சுருட்டி டேபிள் மீது வைத்துவிடு. காலையில் அதைப் பார்க்கும்போது 'ஏன் இப்படி இருக்கு?’ என்று தோன்றும். உடனே எடுத்துச் செல்ல வேண்டிய பொருள் நினைவுக்கு வரும். இப்படி ஒரு விஷயத்துடன் இன்னொரு விஷயத்தைத் தொடர்புபடுத்துவதன் மூலம் நினைவாற்றலை வளர்க்கலாம். தசாவதானி என்பவர்கள் ஒரே சமயத்தில் 10 செயல்களைச் செய்வார்கள். அவர்கள் இந்த டெக்னிக்கைதான் பின்பற்றுகிறார்கள். ஆனால் ஒரு விஷயம்; கர்ச்சீஃப் பந்தை டேபிள் மீது வைக்கும்போதே அம்மா, அப்பாவிடம் சொல்லிடணும். இல்லை என்றால் நீ தூங்கின பிறகு 'இந்தப் பரணி பயல் கர்ச்சீஃபை எப்படி வெச்சு இருக்கான் பாரேன்’னு அதை எடுத்து மெனக்கெட்டு ஒழுங்கா மடித்து வைத்துவிட்டால் நம்ம டெக்னிக் புஸ் ஆகிவிடும்.''