Published:Updated:

அதிசயங்கள் நிறைந்த அகழ் வைப்பகம் !

எம்.தமிழ்ச்செல்வன்

சி.தாமரை
ஸ்ரீ விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
பென்னாகரம்.

##~##

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எத்தகைய பொருட்களைப் பயன்படுத் தினார்கள் என்பதை வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே படித்து இருப்போம். அவற்றை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்வதற்காக தருமபுரி அகழ் வைப்பகத்துக்கு (மியூசியம்) ஒரு விசிட் அடித்தோம்.

'அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த வள்ளல் அதியமான் ஆண்ட தருமபுரியில் அமைந்து இருக்கும் அகழ் வைப்பகத்துக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்' என்று இலக்கிய நயத்தோடு சுட்டிகளை வரவேற்றார், அகழ் வைப்பகத்தின் தொல்லியல் அலுவலர் ஜெயராமன்.

இந்த அகழ் வைப்பகம், தகடூர் வரலாற்றுப் பேரவையைச் சார்ந்த ஆசிரியர்கள் உதவியுடன்  தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அரிய நடுகற்கள் சேகரிக்கப்பட்டு இங்கே பராமரிக்கப்படுவதால் ’நடுகல் அகழ் வைப்பகம்’ என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

அதிசயங்கள் நிறைந்த அகழ் வைப்பகம் !

சுட்டிகளை நடுகற்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார் ஜெயராமன். 'போரில் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவாக நடப்படுவதுதான் நடுகல். இந்த நடுகல் வழக்கம் சங்க காலம் தொட்டு உள்ளது. போரில் மட்டும் அல்லாமல் புலி, காட்டுப் பன்றி போன்ற விலங்குகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தவர்களுக்கும் வீரக்கல் உண்டு. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட நடுகற்கள் கிடைத்து உள்ளன' என்று கூறியபடி நடுகல் ஒன்றினைச் சுட்டிக் காட்டினார். அதில் புலியை எதிர்த்து ஈட்டியுடன் வீரன் போரிடுவது போன்ற புடைப்புச் சிற்பம் இருந்தது. அந்தக் கல்லுக்கு ’புலிக் குத்தப்பட்டான் கல்’ என்று பெயராம்.

அடுத்து கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'நவகண்டச் சிற்பம்’ இருக்கும் இடத்திற்குச் சென்றனர். அதில் வீரன் ஒருவன் நின்றவாறு தன்னுடைய இரண்டு கைகளிலும் கத்தியைக் கழுத்தின் பின்புறம் பிடித்து இருப்பதைப் போல் காணப்பட்டது.

அதிசயங்கள் நிறைந்த அகழ் வைப்பகம் !

'நவகண்டம் என்பது உடலில் உள்ள ஒன்பது அங்கங்களில் ஒன்றை வெட்டி, கொற்றவைக்குக் காணிக்கையாகத் தருவது. இது, வீரன் ஒருவன் தன் தலையைத் தானே வெட்டிக் காணிக்கையாக்கும் நவகண்டச் சிற்பம்' என்றவர், 'கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததைக் காட்டும் சதிக்கல் இதோ...' என்று அதனையும் சுட்டிக் காட்டினார்.

அங்கே இருந்து 'குடுகுடு’ என ஓடிய சந்துரு, 'நான் இப்போ புத்தராகப் போறேன்' என்றபடி அங்கே தலை சிதைந்த நிலையில் காணப்பட்ட புத்தர் சிலைக்குத் தன் தலையைக் கொடுத்தான். மற்ற சுட்டிகள் 'புத்தம் சரணம்... கச்சாமி’ என்று வணங்கினர். 'இது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நின்ற நிலையில் இருக்கும் புத்தரை அகழ் வைப்பகத்தின் உள்ளே பார்க்கலாம்' என்றார் ஜெயராமன்.

பிறகு 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன மனிதன் தலை, ஐரோப்பிய மனிதன் தலை, குடுமி அலங்காரம் போன்ற சிற்பங்களைக் கண்டார்கள். ''அடுத்து நாம் பார்க்கப்போவது, பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட்களை'' என்றார் ஜெயராமன். 'பெருங்கற்காலம் அப்படின்னா எந்தக் காலம்?' எனக் கேட்டாள் திரிஷா.

'சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய காலம். இங்கே இருக்கின்ற குடுவைகள், ஐந்து கால் சாடி, மூன்று கால் சாடி, சுடுமண் கெண்டி எல்லாம் ஏறக்குறைய கி.மு 300-ஆம் ஆண்டை ஒட்டியவை'' என்றார். 'அடேங்கப்பா'' என ஆச்சரியப்பட்டனர் சுட்டிகள்.

அதிசயங்கள் நிறைந்த அகழ் வைப்பகம் !

அடுத்தது தோலினால் செய்யப்பட்ட குடுவை, சுடுமண் காதணிகள், சங்கு வளையல்கள். கற்கால ஆயுதங்கள், இரும்பினால் ஆன ஆயுதங்கள், ஓலைச் சுவடிகள் என வரிசயாகப் பார்த்து ரசித்தனர்.

அங்கே பெரிதாகப் பானை வடிவில் இருந்ததை எட்டிப் பார்த்த அஸ்வினி, 'இது, எங்க கிராமத்துப் பாட்டி வீட்டில் தானியங்களைப் போட்டுவைக்கிற கலன் மாதிரி இருக்கே' என்றாள்.

''இதுக்குப் பெயர், 'முதுமக்கள் தாழி.’ இறந்தவங்களை அவங்க பயன்படுத்திய பொருட்களுடன் இந்த மாதிரியான தாழியில் போட்டுப் புதைப்பாங்க. இந்தத் தாழி, கி.மு 300 முதல் கி.பி 300 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தது'' என்றார்.

''ரொம்பப் பார்க்காதே அஸ்வினி, ஜீபூம்பா மாதிரி ஏதாவது வந்துடப்போகுது' என்று அகிலன் கிண்டல் அடித்தான்.

அனைத்துப் பகுதிகளையும் பார்த்து முடித்ததும், 'அங்கிள் காலச் சக்கரத்தில் போய் வந்த மாதிரி இருக்கு. நம் முன்னோர்களின் நாகரிகத்தையும் வாழ்க்கை முறைகளையும் பற்றித் தெரிஞ்சுக்கிட்டோம். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்' என்றபடி விடை பெற்றனர்.