Published:Updated:

கொல கொலயா முந்திரிக்கா !

இரா.முத்துநாகு ,வீ.சக்தி அருணகிரி

பிரீமியம் ஸ்டோரி
##~##

கிராமங்களில் இன்றும் விளையாடப்படும் 'கொல கொலயா முந்திரிக்கா’ விளையாட்டை கோ கோ விளையாட்டின் தாய் என்று சொல்லலாம். 10, 20, 30 என ஊரில் இருக்கும் எல்லாச் சுட்டிகளும் விளையாடும் ஒரே விளையாட்டு இது.

மற்ற விளையாட்டுகளைப் போல் விளையாடுவதற்கு அணி பிரிப்பது கிடையாது.  ஒருவர் சுற்றி வர, மற்றவர்கள் எதிர் அணியாக இருப்பார்கள். அப்படி முதலில் சுற்றி வருபவரைத் தேர்ந்தெடுப்பதே ஓர் அழகு. எல்லோரும் இரண்டு கைகளையும் சற்று மேலே தூக்கி உதறுவதுபோல உதறியபடி 'சுண்டெலி நண்டெலி... ஒன்று-இரண்டு-மூன்று... சேர்ந்து விளையாடு பப்படி சொப்படி எப்படி?’ எனச் சொல்லியவாறு தங்களுடைய  ஒரு கையை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட மற்றவர்கள் கைகள் மீது அடுக்குவார்கள். அதில் சிலர் உள்ளங்கையை விரித்தும், சிலர் புறங்கை தெரியும்படியும் வைப்பார்கள். இதில் உள்ளங்கை தெரிய இருப்பவர்கள் எத்தனை பேர்... புறங்கை தெரிய வைத்தவர்கள் எத்தனை பேர்... எனக் கூட்டத்தில்  எண்ணுவார்கள். எந்தப் பக்கம் அதிகமான எண்ணிக்கை  இருக்கிறதோ அவர்கள் ஓர் அணியாக வட்டமாக உட்கார வேண்டும். மீதம் உள்ளவர்கள் 'சுண்டெலி நண்டெலி’ என மறுபடியும் அதே பாட்டைப் பாடிக் கையைச் உதறி ஒருவர் கை மீது ஒருவர் வைப்பார்கள்.

இப்படியாகத் தொடர்ந்து கடைசியில் மிஞ்சும் ஒருவர் சுற்றி வருவார். சில சமயம் கடைசியாக இருவர் இருந்தால், ஒப்புக்குச் சப்பாணி எனப்படும் சப்ஸ்டியூட்டாக ஒருவர் சேர்ந்து, அவரும் சுண்டெலி நண்டெலி பாட்டுப் பாடி கையை வைப்பார்.அவர் எந்தப் பக்கம் கையைவைத்தாலும், கணக்குக் கிடையாது. அதில் மாற்றி வைப்பவர் சுற்றி வருவார்.

கொல கொலயா முந்திரிக்கா !

எல்லோரும் வட்டமாக உட்கார்ந்ததும் சுற்றி வருபவர் துண்டு அல்லது துணியைச் சுருட்டிவைத்து வட்டத்தைச் சுற்றி வருவார். வட்டத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் 'கொல கொலயா முந்திரிக்கா நிறைய நிறைய சுற்றி வா... கொள்ளை அடிப்பவன் எங்கிருக்கான்? கூட்டத்தில் பார்! கண்டுபிடி’ எனப் பாட்டுப் படிப்பார்கள்.

சுற்றி வருபவர் கையில்வைத்து இருக்கும் துணியை யார் பின்னாலாவது அவருக்குத் தெரியாமல் போட்டுவிட்டு வட்டத்தைச் சுற்றி வருவார். துணி போடப்பட்ட நபர் தனக்குப் பின்னால் துணி இருப்பது தெரியாமல் இருந்தால், சுற்றி வருபவர் அந்தத் துணியை எடுத்து அவர் முதுகில் அடிப்பார். அவர் எழுந்து வட்டம் அடித்து மறுபடியும் அதே இடத்தில் உட்காருவதற்குள் அடித்தவர் ஓடிவந்து அந்த இடத்தில் கையில் உள்ள துணியைப் போட்டுவிட்டு உட்காருவார். அடி வாங்கியவர் அந்தத் துணியை எடுத்துக்கொண்டு வட்டத்தைச் சுற்றி வந்து யார் முதுகின் பின்னாலாவது அவருக்கு தெரியாமல் துணியைப் போடுவார்.

துணி போடுவது தெரிந்துவிட்டால், உடனே எழுந்து அந்தத் துணியால் துணி போட்டவர் உட்காரும் வரை துரத்தித் துரத்தி அடிப்பார். இப்படியாக ஒருவர் மாற்றி ஒருவர் வட்டமிட 'கொல கொலயா முந்திரிக்கா’ பாட்டு தொடரும்.

கொல கொலயா முந்திரிக்கா !

நேரம் செல்வதே தெரியாமல் ஆட்டத்தைத் தொடரும் பிள்ளைகளை யாராவது தேடிவந்து, ''என்னங்கடா பசிக்கலையா?'' என்று கேட்டு அழைத்துச் செல்வார்கள். ஆட்டத்தை முடிக்க வேண்டும் என நினைப்பவர் எழுந்து 'அவரவரும் வீட்டுக்கும் அவரக்காயும் சோற்றுக்கும்’ எனப் பாட்டை பாடிக் கலைந்து செல்வார்கள்.

கூட்டத்தில் எப்படி ஆளுமையையும், தனித் திறனையும் வெளிக்கொண்டு வருவது என்பதைக் கற்றுத்தருவதே கொல கொலயா முந்திரிக்கா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு