Published:Updated:

நியூ ஸ்போர்ட்ஸ் !

சரா

உலகின் நம்பர்1

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்ட தீபிகா, 'உலகின் நம்பர் 1 வில்வித்தை வீராங்கனை’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.

மகளிர் வில்வித்தைத் தர வரிசையில் 253 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கும் இவர் உலகத் தர நிலையில் இந்த இடத்தை அடைந்து இருப்பது இதுவே முதல் முறை.

இதன்மூலம் வில்வித்தையில் உச்சத்தைத் தொட்ட இந்தியாவின் இரண்டாவது வீராங்கனை என்ற சிறப்பை தீபிகா பெற்றுள்ளார். உலகின் நம்பர் 1 வீராங்கனையாகப் பெருமை பெற்ற முதல் இந்தியப் பெண் டோலா பானர்ஜி!

நியூ ஸ்போர்ட்ஸ் !

''உலகத் தர வரிசையில் முதல் இடம் வகித்து இருப்பது மகிழ்ச்சியே. எனினும், என் கவனம் முழுவதும் ஒலிம்பிக்குக்குத் தயாராவதில்தான் உள்ளது'' என்கிறார் தீபிகா பெருமிதத்துடன்.

சவுதி அரேபியா பச்சைக்கொடி!

ஒலிம்பிக் போட்டிகளில் தனது நாட்டுப் பெண்கள் பங்கேற்பதற்கு சவுதி அரேபிய அரசு முதல் முறையாக அனுமதி வழங்கி உள்ளது.

சமூகத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களைச் செயல்படவிடாமல் இருக்கும் சவுதி அரேபியா, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்குத் தனது நாட்டுப் பெண்களை இதுவரை அனுப்பியதே இல்லை.

இந்த நிலையில், சர்வதேச சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தல்களுக்குக் கட்டுப்பட்டு, லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட சவுதி அரேபியா பெண்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

நியூ ஸ்போர்ட்ஸ் !

சவுதி அரேபியாவைச் சேர்ந்த தல்மா ருஷ்டி மல்ஹாஸ் என்ற 'ஷோ ஜம்பிங்’ வீராங்கனை மட்டுமே லண்டன் ஒலிம்பிக்ஸுக்குத் தகுதி பெற்றிருக்கிறார். ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை என்ற பெருமையும் இவரையே சேரும்!

ஃபேஸ்புக்கில் ஒலிம்பிக் அப்டேட்ஸ்!

இதோ ஜூலை 27 நெருங்கிக் கொண்டு இருக்கிறது. லண்டன் ஒலிம்பிக் திருவிழா களைகட்டுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நேரத்தில் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வழங்குவதற்காக சிறப்புப் பக்கம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.

ஃபேஸ்புக்கின் http://www.facebook.com/pages/olympics என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தின் வழியாக பிரபல வீரர், வீராங்கனைகள், அணிகள், வெவ்வேறு விளையாட்டுப் போட்டிகள் எனப் பல தகவல்களை அறிந்துகொள்ளலாம். அவற்றை லைக் செய்வதன் மூலம் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும் தகவல்களைப் பார்வையிடலாம்!

யூரோ கப் ஹைலைட்ஸ்...

கால்பந்துப் போட்டிகளில் 2-வது மிகப் பெரியது யூரோ கோப்பை என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து போட்டி. இது ஜூன் 8-ல் தொடங்கியது. உக்ரேனிலும் போலந்திலும் 16 முன்னணி அணிகள் பங்கேற்ற விறுவிறுப்பான இந்தத் தொடரின் ஹைலைட்ஸ்...

கைடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய நெதர்லாந்து மீது எதிர்பார்ப்பு மிகுதியாக இருந்தது. ஆனால், யூரோ கோப்பையில் ஓர் ஆட்டத்தில்கூட வெற்றி பெறாமல் அந்த அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது.

¬ஃபிரான்ஸ் உடனான கால் இறுதிப் போட்டியின்போது ஸ்பெயின் வீரர் அலோன்சோ தனது நூறாவது கோலை அடித்து சாதனை படைத்தார்.

நியூ ஸ்போர்ட்ஸ் !

தைன் அபார ஆட்டத்தால் கடந்த யூரோவில் கோல்டன் பூட் பரிசு பெற்ற டேவிட் வில்லா, காயம் காரணமாக இந்த யூரோ கோப்பையில் கலந்துகொள்ள முடியாதது ஸ்பெயின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

¬யூரோ 2012-ன் அதிக வயதான வீரர் என்ற சிறப்புக்குச் சொந்தக்காரர் கிரீஸ் அணியின் கோல் கீப்பர் ரோஸ்டஸ் சாக்கியஸ். இவரது வயது 38.

நைடப்பு யூரோ கோப்பையின் இளம் வீரர் என்ற பெருமைக்கு உரியவர் ஆனார் நெதர்லாந்தின் ஜெட்ரோ வில்லியம்ஸ். இவரது வயது 18.

¬இந்தத் தொடரின் உருவத்தில் உயர்ந்த வீரர் என்ற சிறப்பு 199 செ.மீ. உயரமான ஸ்வீடன் கோல் கீப்பர் ஆண்ட்ரஸ் ஐசக்ஸனுக்குக் கிடைத்தது.

¬ஜெர்மனிக்காக விளையாடி அதிக கோல்கள் அடித்தவரான ஜெர்ட் முல்லர் (68 கோல்கள்) சாதனையை மிரோஸ்லாவ் க்ளோஸ் நெருங்கினார். கால் இறுதியின்போது அவர் 64 கோல்களை அடித்து இருந்தார்.

¬இந்தத் தொடரில் தனது அபார ஆட்டத்தால், ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக வலம்வந்தவர் போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டினோ ரொனால்டோ.

-உ.இந்திரகுமார்

பிங்கியின் பெருமிதம் !

லண்டன் ஒலிம்பிக் ஜோதி ஏந்தி செல்லும் தொடர் ஓட்டத்தில், இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு அஸ்ஸாமைச் சேர்ந்த 10-ம் வகுப்புப் படிக்கும் பிங்கிக்குக் கிடைத்து உள்ளது.

ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்வது என்பது உலக அளவில் மிகப் பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது. இந்த மகத்தான பெருமைக்கு 17 வயது பிங்கி தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மிகப் பெரிய விஷயம்.

நியூ ஸ்போர்ட்ஸ் !

அஸ்ஸாமின் திப்ரூகர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் விளையாட்டின் நன்மையைச் சொல்வதுதான் பிங்கியின் முக்கியப் பணி. அத்துடன் படிப்பறிவு இல்லாத கிராம மக்களிடம் குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும், மதுவின் தீமைகள் குறித்தும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார் பிங்கி.

பள்ளியில் படித்துக்கொண்டே செய்துவரும் இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க சமூகப் பணிதான் பிங்கிக்கு ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்லலும் கௌரவத்தை அளித்து இருக்கிறது. ''நமது நாட்டின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது பெருமிதமாக இருக்கிறது'' என்கிறார்.

எங்களுக்கும்தான் பிங்கி!