Published:Updated:

என்ன நடக்குது வங்கியில் ?

ச.இரா. ஸ்ரீதர், சா.வடிவரசு

பிரீமியம் ஸ்டோரி

சென்னை, தண்டையார்பேட்டை
லிட்டில் ஃபிளவர் பள்ளி மாணவர்கள்.

நன்றி: இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சென்னை லயோலா கல்லூரிக் கிளை.

##~##

''இவருக்கு என்னப்பா... ஒரு பேங்கையே பாக்கெட்ல வெச்சு இருக்கார்'' என்று கிண்டலுடன் சொல்வதைக் கேட்டு இருப்பீர்கள். அந்த வங்கியில் பணத்தை எப்படிப் பாதுகாக்கிறார்கள்? அங்கே வேறு என்ன வேலை எல்லாம் நடக்கிறது?

இதைத் தெரிந்துகொள்ள 'சென்னைதண்டையார்பேட்டை, லிட்டில் ஃபிளவர் பள்ளி மாணவர்களுடன், லயோலா கல்லூரியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குச் சென்றோம்.

எல்லோரையும் வரவேற்ற வங்கி மேனேஜர் பால்வண்ணன், ''உங்களில் எத்தனைப் பேருக்கு  பேங்க் அக்கவுன்ட் இருக்கு?'' என்று கேட்டார். சுட்டிகளில் சிலர் கையை உயர்த்தினர்.

''வெரிகுட்! வங்கி என்றால் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாகவும் சேமிப்பாகவும் வைக்க உதவும் இடம்னு உங்களுக்குத் தெரிஞ்சு இருக்கும். பணம் மட்டும் அல்லாமல் நகைகளையும் சேமிப்பாக வைக்கலாம். குழந்தைகளுக்கு மைனர் அக்கவுன்ட் பிரிவு  உள்ளது. இதில் பத்து வயது பூர்த்தியான யார் வேணும்னாலும் அக்கவுன்ட் தொடங்கலாம்' என்றார்.

''இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. ஒன்று கரன்ட் அக்கவுன்ட், மற்றொன்று சேமிப்பு கணக்கு. கரன்ட் அக்கவுன்டைத் தொழில் ரீதியாகப் பயன்படுத்துவார்கள். சேமிப்புக் கணக்கைத் தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்துவார்கள். இந்த இரு வகையான கணக்குகளுக்கும் தொடக்கக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்தத் தொகை எப்போதும் மினிமம் பேலன்ஸாக இருப்பில் இருக்கும். நாம் சேமிக்கும் பணத்தை நேரடியாகவோ, ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தியோ எடுக்கலாம்' என்றார் சேமிப்புக் கணக்குப் பிரிவைச் சேர்ந்த பாலு.

என்ன நடக்குது வங்கியில் ?

''எந்த பேங்கில் இருந்தும் பணத்தை எடுக்க முடியுமா அங்கிள்?'' என்று கேட்டாள் வைரோஜினி.

'நேரடியாக எடுக்க, கணக்கு உள்ள வங்கிக்குத்தான் செல்ல வேண்டும். ஏ.டி.எம் கார்டு மூலம் எந்த வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இருந்தும் எடுக்கலாம்' என்றார் அவர்.

அடுத்ததாக, 'டி.டி’ எனப்படும் டிமாண்ட் டிராப்ட் எப்படி எடுப்பது என்றுச் சொல்லத் தனி அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார் ராஜா.

'டி.டி என்பது கிட்டத்தட்ட செக் போலதான். பல இடங்களில் பணத்தை நேரடியாக வாங்குவது கிடையாது. உதாரணமாக, ஒரு தேர்வுக்கு விண்ணப்பம் செய்தால், அதற்கான தேர்வுக் கட்டணத்தை நேரடியாக வாங்காமல், டி.டி மூலம் செலுத்தச் சொல்வார்கள். இதனால் பணம் பாதுகாப்பாக நாம் செலுத்தவேண்டிய இடத்துக்குச் சென்றுவிடும். நேரமும் மிச்சம் ஆகும்' என்ற ராஜா, ''இதுதான் டி.டி எடுக்கும் சலான். இதில் கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்திசெய்து எங்களிடம் கொடுக்க வேண்டும். டி.டி எடுப்பவரின் கையெழுத்து நிச்சயம் போட வேண்டும்'' என்றார்.

என்ன நடக்குது வங்கியில் ?

''ஒருவேளை தப்பாக எழுதிட்டா என்ன செய்யுறது?'' என்று நந்தகுமார் கேட்க, 'முடிந்தவரை  சலானை மாற்றிவிடுவது நல்லது. சிறு தவறு என்றால் அதை அடித்துவிட்டுப் பக்கத்திலேயே சரியான விவரங்களை எழுதலாம்' என்று விளக்கினார்.

அடுத்து காசோலை. 'இதுதான் செக் ஃபார்ம். இதில் நமக்கு வேண்டிய பணத்தை பூர்த்திசெய்து கணக்கில் இருந்து எடுக்கலாம். வேறு நபர்களுக்கும் கொடுக்கலாம். நம் அக்கவுண்ட் நம்பர், வங்கிக் கிளையின் பெயர் மற்றும் எடுக்கவேண்டிய தொகை போன்றவற்றைக் கவனமாகப் பூர்த்திசெய்ய வேண்டும். சிறு தவறு இருந்தாலும் காசோலை செல்லாமல் போய்விடும். யாருக்காவது நீங்கள் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க நினைத்தால், அதைப் பணமாக இல்லாமல் இப்படி செக்காக கொடுத்தாலே போதும்' என்றார் ராஜா.

''இதில் டாலர் கணக்கிலும் பணத்தை ஃபில் பண்ணலாமா?'' என்று கேட்டான் பிரவீன்.

'இந்திய ரூபாய் மட்டுமே ஃபில் செய்து பெற முடியும்'' என்றவர், பணத்தை எப்படிச் செலுத்துவது என்பதைக் காட்ட அழைத்துச் சென்றார்.

வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்த சலானை எடுத்துவந்து இங்கேதான் கொடுப்பார்கள். கொடுக்கும் பணத்தை அவர்களின் கணக்கில் வரவு வைத்துகொண்டு சலானின் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுப்போம். அதுதான் பணத்தை செலுத்தியதற்கான அடையாளம். இதில் கேஷியர் கோடு நம்பர் மற்றும் கையப்பம் இட்டு சீல் வைப்பார். எந்த வங்கி செக்காக இருந்தாலும் அதைத் தங்கள் அக்கவுண்ட்க்கு மாற்றிக்கொள்ளலாம்' என்றார் செல்வசேகர்.

அடுத்து அதிகமாகப் பணம் வந்தால் அதை வேகமாக எண்ணி முடிப்பதற்கு தயாரிக்கபட்ட கருவியைக் காட்டினார் செல்வசேகர்.

பின்னர் பிரகாஷ் என்பவர் வங்கிக் கணக்குகள் அடங்கிய நோட்டுப் புத்தகங்களைக் காட்டி, 'இதில் வங்கியில் பணம் செலுத்துபவர்கள், எடுப்பவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் இருக்கும்' என்றார்.

''அங்கிள், இப்போதான் கம்ப்யூட்டர் வந்துடுச்சே, அப்புறம் எதுக்கு இந்த நோட்டுகள்?'' என்று கேட்டான் கிருஷ்ணா.

என்ன நடக்குது வங்கியில் ?

'கம்ப்யூட்டர்ல எப்ப வேணும்னாலும் பிரச்னை வரலாம். வைரஸ் தாக்கி சில சமயங்களில் மொத்த டாகுமென்ட்டுகளும் அழிந்துபோக வாய்ப்பு இருக்கு. அதனால், ஒரு சேஃப்ட்டிக்காக இதிலும் குறித்துவைப்போம்' என்றார் பிரகாஷ்.

''எத்தனையோ பேர் தினமும் வங்கிக்கு வராங்க, பணம் போடறாங்க.  இந்தப் பணத்தை எல்லாம் எப்படிப் பாதுகாப்பாக வைக்கிறீங்க?'' என்று கேட்ட சுட்டிகளை, பணம்வைக்கும் லாக்கர் பகுதிக்கு அழைத்துச் சென்று காட்டினார்.  

பின்னர் ஏ.டி.எம் மூலம் எப்படிப் பணம் எடுப்பது என்று விளக்குவதற்கு  அழைத்துச் சென்ற சிவபிரசாத் ''உங்களில் யாராவது பெற்றோருடன் ஏ.டி.எம் சென்டர் போய் இருப்பீங்க. இந்த மெஷின்ல பணம் எடுக்க, அதற்கான இடத்தில் பச்சை நிற லைட் எரியுதான்னு பார்த்து கார்டை உள்ளே நுழைக்க வேண்டும். பிறகு நீங்கள் பயன்படுத்தப்போகும் மொழியைத் தேர்தெடுத்துவிட்டு ரகசிய ஏ.டி.எம் நம்பரை டைப் செய்ய வேண்டும். பின்னர் கேட்கும் ஆப்ஷன்களில் நமக்கு தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து  பணத்தை எடுக்கலாம். ஒரு சிலர் பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கவும் பயன்படுத்துவார்கள்'' என்று விளக்கினார்.

''அங்கிள் நான்  5,000 ரூபாய் பணம் எடுக்க நினைக்கிறேன். ஆனால் என் கணக்கில் 4,000 ரூபாய்தான் இருக்கு. எப்படி எடுக்க முடியும்?'' என்று கேட்டாள் ஸ்வேதா.

'நம் கணக்கில் இருக்கும் பணம் அளவுக்குத்தான் எடுக்கமுடியும். அதற்கு ஏற்றவகையில் செட் செய்து இருப்பாங்க. இப்போது உங்களுக்கு பேங்க் பற்றி நல்லாத் தெரிஞ்சு இருக்கும். நம் ஒவ்வொருவருக்கும் சேமிப்பு என்பது மிகவும் முக்கியம். பல இக்கட்டான நேரங்களில் அது நமக்கு கைகொடுக்கும். உங்களில் யாருக்குக் கணக்கு இல்லைன்னாலும் உடனடியாகத் தொடங்கி மாத்ம்தோறும் குறைந்தபட்சம் 100, 200 ரூபாய் என்றாவது சேமித்து வாருங்கள் அது ஒரு நல்ல பழக்கம். செய்வீங்களா?'' என்று கேட்டார் சிவபிரசாத்.

''கண்டிப்பாக அங்கிள்! எங்களுக்கு ரொம்பப் பொறுமையோடு பல விஷயங்களைச் சொன்ன உங்க எல்லோருக்கும் நன்றி'' என்று சொல்லிவிட்டு வங்கியைவிட்டு சுட்டிகள் விடைபெற்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு