பிரீமியம் ஸ்டோரி

 நம்பர் 1 ஆவாரா விராட்?

##~##

'இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தூண்’ என்று வர்ணிக்கும் அளவுக்குத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் துணை கேப்டன் விராட் கோலி.

இந்தியா-இலங்கை இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் 113 பந்துகளில் 106 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இது அவரது 12-வது ஒரு நாள் சதம். இந்த ஆண்டின் நான்காவது சதம்.

மொத்தம் 87 போட்டிகளில் விளையாடி, 11 முறை ஆட்ட நாயகன் விருதைக் கைப்பற்றி உள்ள விராட், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். தற்போது, 846 புள்ளிகளுடன் பேட்டிங் தர வரிசையில் கோலி மூன்றாம் இடத்தில் உள்ளார். ஹசிம் ஹாம்லா (871), டி வில்லியர்ஸ் (851) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றனர். இவர்களைக் கடந்து முதல் இடத்துக்கு கோலி முன்னேறுவது இலங்கைக்கு எதிரான தொடர் முடிவடையும் ஆகஸ்ட் 4-ம் தேதி தெரியும்.

நியூ ஸ்போர்ட்ஸ்

'பிளேடு ரன்னர்’ பிஸ்டோரியஸ்!

பதக்கம் வெல்வாரோ, இல்லையோ... ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலமே புதிய சரித்திரம் படைக்கிறார் தென் ஆப்பிரிக்க ஓட்டப் பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்.

இரண்டு கால்களையும் இழந்த நிலையில் ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் பங்குபெறும் முதல் வீரர் என்கிற பெருமையை இவர் பெறுகிறார். சிறு வயதிலேயே இரண்டு கால்களையும் இழந்துவிட்டவர்,  தன்னம்பிக்கையைக் கைவிடாமல் தன் இலக்கை நோக்கி ஓடத் தொடங்கினார். கார்பன் இழைகளால் செய்த மெலிதான செயற்கைக் கால்களால் ஓடுவதால் 'பிளேடு ரன்னர்’ என்று அழைக்கப்படுகிறார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் பங்குபெறுகிறார்.

நியூ ஸ்போர்ட்ஸ்

தனது வாழ்க்கையில் பெருமைக்குரிய தருணங்களில் இதுவும் ஒன்று எனக் கூறும் 25 வயதான பிஸ்டோரியஸ், லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு நடைபெற உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான 'பாராலிம்பிக்ஸ்’ போட்டிகளிலும் பங்கேற்க இருக்கிறார்.

முன்னதாக, ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்படுவதற்கே பெரும் போராட்டத்தைச் சந்தித்தார் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு ஓடும் பிஸ்டோரியஸ்,  மற்ற போட்டியாளர்களுடன் ஓடும்போது, சாதகமான நிலையைப் பெறுகிறார் என்ற புகார் எழுந்தது. அந்தப் புகார், விளையாட்டுத் துறைக்கான சர்வதேசத் தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டு இப்போது ஒலிம்பிக்கில் கலந்துகொள்கிறார்.

ஒலிம்பிக்ஸ் வேட்டைக்காரர்கள்!

லண்டனில் ஆகஸ்ட் 12 வரை களைகட்டும்  ஒலிம்பிக் திருவிழாவில் பதக்க வேட்டையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் மூன்று முக்கிய ஸ்டார்கள்...

மைக்கேல் ஃபெல்ப்ஸ்: அமெரிக்காவின் தங்க மீன் மனிதன். 2008 ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளின் எட்டுப் பிரிவுகளிலும் தங்கத்தை அள்ளி சாதித்தவர். இதுவரை 16 பதக்கங்களை வென்று இருக்கும் ஃபெல்ப்ஸ், லண்டனில் மூன்று பதக்கங்களை வென்றால், ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்றவர் என்ற சாதனையைப் படைப்பார். சக நாட்டு வீரரான ரையான் லோக்டே, இவருக்கு நெருக்குதல் தரக் கூடிய வல்லமை படைத்தவர்.

நியூ ஸ்போர்ட்ஸ்

உசேன் போல்ட்: உலக அளவில் ரசிகர்களை வசப்படுத்தி இருக்கும் ஓட்டப் புயல். ஜமைக்காவின் இந்த 25 வயது மின்னல் வேக இளைஞர்,  பீஜிங்கில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4ஙீ100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் புதிய சாதனைகளுடன் தங்க வேட்டை நிகழ்த்தியவர். தனது முந்தைய சாதனைகளைத் தானே முறியடிப்பதுதான் இவர் இலக்கு. போல்ட்டுக்குச் சவாலாக இருப்பவர், அதே நாட்டைச் சேர்ந்த யோஹன் பிளேக்.

மிஸ்ஸி ஃபிராங்ளின்: அமெரிக்காவின் அதிவேக நீச்சல் பெண். 17 வயதான இவர், தன் அசுர வேகத்தால் அசரவைப்பவர். நான்கு தனி நபர் மற்றும் மூன்று குழுத் தொடர் என மொத்தம் ஏழு பிரிவுகளில் பங்கேற்கிறார். ஏழுக்கு ஏழு என எழுச்சி பெற்றாலும் வியப்பு இல்லை. ஒரே ஒலிம்பிக்கில் அதிகத் தங்கம் வென்ற வீராங்கனை எனும் சிறப்பைப் பெறும் வாய்ப்பு உள்ளவர்.

நியூ ஸ்போர்ட்ஸ்

பதக்க வேட்டையில், பீஜிங் ஒலிம்பிக்ஸைப் போலவே இந்த முறையும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில்தான் கடும் போட்டி. இந்த ரேஸில் முதல் இடம் வகிக்கும் சீனா 102 தங்கப் பதக்கங்களையும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அமெரிக்கா 100 பதக்கங்களையும் கைப்பற்றும் என்று ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வு ஒன்று  சொல்கிறது. ரஷ்யா 71 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து 57 பதக்கங்களுடன் நான்காவது இடத்தையும் வகிக்கும் என்றும் விளையாட்டு வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

 ஒலிம்பிக்ஸ் அப்டேட்ஸ்...

ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுகள் தொடர்பாக, சுட்டி விகடனின் ஃபேஸ்புக் பக்கத்தில், ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து தகவல்கள் வெளியாகும். அப்டேட்ஸ்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள http://www.facebook.com/ChuttiVikatan   பக்கத்தில் இணைந்து இருங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு