Published:Updated:

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

Published:Updated:

சரி என்பதற்கு O.K. என்று சொல்கிறோமே... அந்த O.K.-வின் விரிவாக்கம் என்ன ஜீபா?

-ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

மை டியர் ஜீபா !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விரிவாக்கம்னு எல்லாம் எதும் கிடையாது. இதை OK, O.K., Okay-ன்னு எப்படி வேணும்னாலும் எழுதிக்கலாம். 'எல்லாம் சரி’, 'திருப்தி’, 'சம்மதம்’, 'ஒப்புதல்’... இப்படி அர்த்தம் இடத்துக்கு ஏத்தமாதிரி போய்கிட்டே இருக்கு. பேச்சு வழக்குல இருந்த ஓகே என்கிற வார்த்தை, இன்னிக்கு மற்ற மொழிகளாலும் தத்தெடுத்துக்கற அளவுக்கு பெரிய ஆளாயிடுச்சு. யார் இதைக் கண்டுபிடிச்சாங்கன்னு பார்க்கப் போன எனக்கு தலையே சுத்த ஆரம்பிச்சுடுச்சு..

கொஞ்சம் உன் தலையையும் சுத்த வெக்கறேன்... அமெரிக்காவின் டென்னஸ்ஸியன் மாகாணத்தில் சம்னர் கன்ட்ரிங்கற இடத்தில் இதை 1859-ல் கண்டுபிடிச்சதா சொல்லிக்கறாங்க. ஆனா, அதுக்கு முன்னாடியே 1815-ல வில்லியம் ரிச்சர்ட்சன் என்கிறவர், தன்னோட டைரிலே ஓகே-வை கைப்பட எழுதி இருக்காரு. 1839-ல ஒரு பத்திரிகையில் பிரின்ட் ஆகியிருக்கு. ஆரம்பத்தில் ‘Oll Korrect’’ன்னு (All Correct-க்குதான் அப்படி ஸ்பெல்லிங்) அர்த்தம் சொல்லிக்கிட்டாங்க. அப்போ எல்லாம் No Use-ஐ Know Yuseமீன்னும், enough said என்பதை nuff cedன்னும் ஸ்பெல்லிங்கைக் கொலைபண்ணி, பேச்சு வழக்கை அப்படியே பயன்படுத்தினாங்க. அப்படிதான் இந்த 'ஆல் கரெக்ட்’டும் 'ஓகே’ ஆனது.

ஓகே, ஓகே... சுத்தினது போதும்னு நினைக்கறேன்

##~##

பூமியில் இருந்து தண்ணீர் வருதுன்னு யார் ஜீபா கண்டுபிடிச்சது?

-ஏ.நிலவு, சென்னை.

மறைவா இருக்கிற ஒண்ணைத்தான் கண்டுபிடிப்பாங்க. பூமியிலே இருக்கிற தண்ணீரை ஒருத்தர் கண்டுபிடிச்சு வேற சொல்லணுமா என்ன? அப்படிப் பார்த்தா... பூமியிலே மண் இருக்குன்னு யாரு கண்டுபிடிச்சது? மலை இருக்குன்னு யாரு கண்டுபிடிச்சது? மரம் இருக்குன்னு யாரு கண்டுபிடிச்சாங்க? இப்படி என்னோட கேள்வி லிஸ்ட் போயிட்டே இருக்கும். பூமியை விடு... இப்ப நிலவுல தண்ணீர் இருக்கறதா கண்டுபிடிச்சிருக்காங்க... அதைப் பத்தி பேசுவோம்

  மை டியர் ஜீபா நம்மைப் போலவே எல்லா விலங்குகளுக்கும் பால் பற்கள் உண்டா? விழுந்து முளைக்குமா? வயதானால் பற்கள் விழுந்து பொக்கை ஆகுமா?

-அர்ஜுன், மணலூர்.

பாலூட்டிகள் எல்லாத்துக்குமே ஒரே மாதிரி சிஸ்டம்தான். பால் பற்கள் இருக்கும். அவை விழுந்து நிலையான பற்கள் முளைக்கும். எத்தனை தடவை விழுந்து முளைக்கும் என்பதுதான் ஒவ்வொரு விலங்குக்கும் மாறுபடும். இந்த எண்ணிக்கை குறைவா இருக்கிற பாலூட்டிகளுக்கு வயசானா பல் விழுந்து பொக்கை ஆகும். இதுங்களுக்கு பல்செட் மாட்டிக்கவோ, மிக்ஸிலே அரைச்சு சாப்பிடவோ தெரியாது. பசிக்கு சாப்பிட முடியாம சீக்கிரமே செத்துப்போவும்.

டியர் ஜீபா நெல்லிக்காயை சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் இனிப்பது ஏன்?

-இரா.லிங்கேஷ்வர், சென்னை.

நெல்லிக்காயை நாம் சாப்பிடும்போது அதில் இருக்கிற புரோட்டான் புளிப்பு டேஸ்டைக் கொடுக்குது. இந்த புளிப்புத்தன்மை நம்மோட நாக்கில் இருக்கும் சுவை அரும்புகள் மேலே உட்கார்ந்துக்கும். நாம தண்ணியைக் குடிக்கும்போது, இந்த புரோட்டான்கள் எல்லாம் நாக்கிலிருந்து அடிச்சுக் கழுவி வயிற்றுக்குப் போயிடும். 'அப்பாடா... தொலைஞ்சது புளிச்ச புரோட்டான்’னு சுவை அரும்புகள் சுதாரிக்க கொஞ்சம் டைம் எடுத்துக்கும். ஆனா, அந்த சமயத்துல நாம குடிச்ச தண்ணிக்கு டேஸ்ட் சொல்லியாகணுமே... அவசர கதியா ஒரு டேஸ்ட்டை நம்ம மூளைக்குக் கொடுத்துவைக்கும். அந்த டேஸ்ட் இனிப்பா அமைஞ்சது... நம்ம லக்கு லிங்கேஷ்வரா

  உலகம் முழுவதும் ஒரு நாள் மின்சாரம் இல்லாவிட்டால் எப்படி இருக்கும் ஜீபா?

-எஸ்.சௌமியா, தேவனாங்குறிச்சி.

பூமி சுற்றும். சூரியன் உதிக்கும். காற்று வீசும். கடல் அலைகள் கரை தொட்டுப் போவும். மழை பெய்யலாம். நிலவு வரலாம். செடி, கொடி, மரங்கள் வளரும். பூக்கும், காய்க்கும். பறவைகள், விலங்குகள் இரை தேடித் தின்னும். நமக்கும் பசிக்கும். தூக்கம் வரும். முழிப்பும் வரும். வயிறு கலக்கும். மின்சாரம் இல்லாத அந்த ஒரு நாள் முடிவில் சௌமியாவோடு சேர்த்து எல்லோருக்கும் ஒரு நாள் வயசு கூடியிருக்கும். எப்பூடி?

அன்புள்ள ஜீபாவுக்கு, மழை பெய்தால் ஏன் மண் வாசனை வருகிறது?
 

-டி.சி.ஸ்ருதி, திருவேற்காடு.

மை டியர் ஜீபா !

ஏராளமான பாக்டீரியாக்கள் மண்ணோடு மண்ணா இருக்கு. அது மட்டுமில்லே... இறந்த புழு, பூச்சி, காய்ஞ்ச பூ, மகரந்தத் தூள், விதை இப்படி எல்லாமே இருக்கு. மழைத் துளிகள் இந்த மண் மேலே விழும்போது, அதுவரைக்கும் 'உறக்கத்தில்’ இருக்கிற பாக்டீரியாக்கள் எல்லாம் 'பக்கெட் தண்ணிய மூஞ்சிலே ஊத்தின மாதிரி’ படக்குன்னு முழிச்சுக்கும். உடனே சுறுசுறுப்பாகி நைட்ரஜன் அடங்கிய கேஸை ஏகத்துக்கு வெளியிடும். கூடவே ஹைட்ரஜன் சல்பைடு, கார்பன்-டை-ஆக்ஸைடு, சல்பர் ஆக்ஸைடுன்னு மத்த வாயுக்களும்  வெளியே வரும். மழையோடு காத்தும் வீசும்போது, இந்த வாயுக் கலவை நம்ம மூக்கு வரை வந்து 'யூ-டர்ன்’ எடுக்கும். அப்போ நம்ம மூக்கு எல்லாம் கலந்தடிச்சு ஓர் இனிய வாசனையை உணரும்... மழை வலுவாகப் பெய்ய ஆரம்பிச்சதும் இந்த வாசனை அடங்கிடும்.

அதுசரி, என்ன இப்படி எல்லாரும் சீரியஸாவே கேள்வி கேட்டு இருக்கீங்க? பரீட்சை நெருங்கிடுச்சுன்னு நல்லா புரியுது மக்களே டோண்ட் வொர்ரி... ஆரம்பத்தில், பரீட்சை என்கிற மழை தூற ஆரபிக்கும்போதுதான் மண் வாசனை மாதிரி டென்ஷன் இருக்கும். படிக்க ஆரம்பிச்சு பரீட்சை மழை வலுவா பெய்ய ஆரம்பிச்சுட்டா, பயமெல்லாம் மறைஞ்சு போயிடும். தைரியமா ஃபேஸ் பண்ணுவோம்... ஓகே?

மை டியர் ஜீபா !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism