Published:Updated:

கிராமத்து விளையாட்டு

திரித் திரியாம் பொம்மக்கா !வீ.சக்தி அருணகிரி இரா.முத்துநாகு

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

சிலைகளுக்கு உயிர் இருப்பதாக உலகம் முழுவதும் நம்பிக்கை உள்ளது. பொம்மை வடிவில் உள்ள துஷ்டத் தெய்வமான குறளி,  மனிதர்களுக்குத் தீமை செய்யும். தெய்வச் சிலைகள் உயிர்த்து எழுந்து தடுக்கும் என்ற நம்பிக்கை நமது கிராமங்களில் உண்டு. இதன் அடிப்படையில் உருவான விளையாட்டுகளில் ஒன்று, திரி திரியாம் பொம்மாளே.

இந்த விளையாட்டை பெரும்பாலும் பெண்களே விளையாடுவார்கள். இருவர் இருவராக இரண்டு அடி நீளத்துக்கு பாம்புபோல் மண்ணைத் திரித்து (குவித்து) வைப்பார்கள். இந்த விளையாட்டில் ஆட்டத்தை யார் துவக்குவது என்ற சிக்கல் இல்லை. விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் 'நான் ஆடவா, நீ ஆடுகிறாயா?’ எனக் கேட்டு ஆட்டம் துவங்கும். முதலில் ஆட்டத்தைத் துவக்குபவர், சின்னதான துணியால் திரி திரிப்பார். அதில் தலை, கை கால்கள்போல் செய்வார். அந்தத் துணித் திரி பொம்மையை விரல் இடுக்கில் மறைத்தவாறு, இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி வைப்பார். இப்படி எந்தக் கையில் துணி திரி பொம்மை இருக்கிறது என்பதை எதிர் ஆட்டக்காரர் கண்டுபிடிக்காத அளவுக்கு வேகமாக மாற்றி மாற்றி வைப்பார்.

பிறகு, இரண்டு கைகளையும் குவித்த மணல் திரியில்வைத்து,

'திரித் திரியாம் பொம்மக்கா
தீயக்காளி பொம்மக்கா
மார்மாறு பொம்மக்கா
மந்திரக்காளி பொம்மக்கா’

எனச் சொல்லிக்கொண்டே மண் குவியலுக்குள் விரல்களை ஊடுருவவிட்டு பொம்மையை மறைத்துவைப்பார். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர் ஆட்டக்காரர் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். (பாட்டு பாடுவதை உணர்ந்து அந்தத் திரி பொம்மை மறைந்துகொள்ளும் என்பது நம்பிக்கை)

கிராமத்து விளையாட்டு

மண் குவியலுக்குள் பொம்மையை மறைத்த பிறகு, எல்லா இடங்களும் ஒன்றுபோல் இருக்க, மீண்டும் ஒரு முறை மண் குவியலை திரிபோல் ஆக்குவார்கள். பின்பு 'கண்களைத் திறந்து திரிந்த பொம்மையைக் கண்டுபிடி’ எனச் சொன்னதும் எதிர் ஆட்டக்காரர் கண்களைத் திறப்பார். மண் திரியை உற்று கவனித்து, திரி பொம்மை இருக்கும் என நினைக்கும் இடத்தில் 'திரித் திரியாம் பொம்மக்கா’ எனச் சொல்லி இரண்டு கை விரல்களையும் கோத்துவைப்பார்.

ஆட்டக்காரர் மண் குவியலை இரண்டு கைகளால் கிண்டிக்கொண்டே வருவார். எதிர் ஆட்டக்காரர் கை வைத்த இடத்தில் பொம்மை சிக்கிக்கொண்டால் அவுட்.இல்லை என்றால் அவரே மீண்டும் ஆட்டத்தைத் தொடங்குவார்.

சில ஊர்களில் திரி பொம்மைக்குப் பதிலாக சிறிய கல் அல்லது சிறியக் குச்சியை விரல் இடுக்கில்வைத்து விளையாடுவார்கள். பாடலின் வரிகளும் இடத்துக்கு ஏற்ப மாறும். கல்லைவைத்து விளையாடும்போது விரல் இடுக்கில் மறைக்கப்படும் கல், எதிர் ஆட்டக்காரர் கண்களுக்குத் தெரியாது. இதனால் கண்களை மூட வேண்டியது இல்லை.

சிறு வயதில் இருந்தே எதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஆற்றலை இந்த விளையாட்டு மூலம் கற்றுக்கொடுக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு