##~##

தன்னைத் தானே கவனித்தல்..!

சுஷில் குமார்... சீனாவில் 2008-ல் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம், இப்போது லண்டனில் வெள்ளிப் பதக்கம் என அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர். இப்படி மகத்தான சாதனை படைப்பதற்கோ அல்லது தான் குறித்துக்கொண்ட குறிக்கோளைச் செம்மையாக முடிப்பதற்கோ ஒரு சிலருக்கு மட்டும் எப்படி முடிகிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிறரிடம் இல்லாத ஏதோ ஓர் உந்துசக்தி அவர்களிடம் இருக்கிறது.

இதைச் செய்ய வேண்டும், இதில் வெற்றிபெற வேண்டும் என்கிற எண்ணம் எல்லோரிடமும் இருக்கும். பத்தாம் வகுப்பிலும் 12-ஆம் வகுப்பிலும் மாநில அளவில் ரேங்க் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாரிடம்தான் இருக்காது? ஆனால், சிலர்தானே அதைச் சாதிக்கிறார்கள்... அதற்கு அவர்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருந்தது உந்துசக்தி. ஆங்கிலத்தில் விஷீtவீஸ்ணீtவீஷீஸீ.

படிப்பது, வேலைக்குப் போவது, பணம் சம்பாதிப்பது, பிறருடனான உறவுகளைச் சிறப்பாகப் பேணுவது போன்ற பல்வேறு காரியங்களுக்கு முக்கியமான ஒத்தாசையாக இருப்பது இந்த உந்துசக்திதான். நமக்கு உள்ளே இருந்தே உந்துசக்தி நமக்குக் கிடைக்கும். சில சமயம் வெளியில் இருந்தும் உருவாகி வரும்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

ஒவ்வொரு நபருக்கும் தக்கபடி இந்த உந்துசக்திக்கான காரணங்கள் மாறுபடும். ஊக்கப்படுத்துதல், பரிசுகள், பணம், புகழ் போன்றவை சில காரணங்கள். உங்களுக்குப் பிடித்த ஒரு சினிமா நடிகரை எடுத்துக்கொள்ளுங்கள், ரசிகர்களின் பாராட்டுகள் அவரை ஊக்கப்படுத்தி இருக்கும். விருதுகளும் பரிசுகளும் அவரை அடுத்த படிக்கு இட்டுச் சென்றிருக்கும். அதனால் அவரது சன்மானப் பணம் படிப்படியாக உயர்ந்து, மேலும் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தி இருக்கும். இதனால் அவரது புகழ் அதிகரித்து, அந்தப் புகழைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்கிற எண்ணம்கூட அவருக்கு ஒரு முக்கியமான உந்துசக்தியாக இருந்து இருப்பதை நீங்கள் உணர முடியும்.

இந்த உந்துசக்தியின் அளவுகூட நேரத்துக்கு நேரம் மாறுபடும் தன்மை உடையது. நம்பிக்கை, பிறரின் உதவியைப் பயன்படுத்திக்கொள்ளல், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, ஒரு வேலையைத் தொடர்ந்து செய்யும் தன்மை, ஒழுக்கம் போன்ற பல தகுதிகள், இந்த உந்துசக்தியின் அளவை அதிகரிக்கும்.

இப்போது விளையாட்டாக ஒரு கற்பனையைப் பார்ப்போம். நீங்கள் ஒரு பென்சில் டிராயிங் படத்துக்கு கலர் அடிக்கப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு உதவி செய்ய உங்கள் நண்பர் ஒருவர் பக்கத்தில் இருக்கிறார். இதில் மூன்று விதமான சூழ்நிலைகளைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

சூழ்நிலை-1: நீங்கள் கலர் அடிக்க விரும்பும் வண்ணத்திலான பென்சில்களை உங்கள் நண்பர் உடனே எடுத்துக்கொடுக்கிறார். படத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் நீங்கள் கலர் அடித்து முடிக்கும்போது, நண்பர் உங்களைப் பாராட்டிக் கை தட்டுகிறார். நீங்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் 'பரவாயில்லை, மறுபடி முயற்சி செய்..’ என்கிறார்.

சூழ்நிலை-2: நீங்கள் ஒரு கலரில் பென்சில் கேட்டால், நண்பர் இன்னொரு கலரை எடுத்துக் கொடுக்கிறார். சரியான கலரைக் கொடுத்தால், அவர் கொடுக்கும் பென்சில் கூர் இல்லாமல் மொட்டையாக இருக்கிறது. தூரத்தில் இருந்து பென்சிலைத் தூக்கிப் போடுகிறார். 'என்ன, மரம் சிவப்பு கலர்ல இருக்கு’ என்று கிண்டல் செய்கிறார்.

சூழ்நிலை-3: உங்கள் நண்பர் எந்த விதமான உணர்வுகளையும் காட்டவில்லை. கேட்ட பென்சிலைக் கொடுக்கிறார். நீங்கள் கலர் அடிப்பதைப் பார்க்காமல் வேறு எதிலோ கவனமாக இருக்கிறார். கலர் அடித்தது நன்றாக இருந்தால் பாராட்டவில்லை. மோசமாக இருந்தால் சுட்டிக்காட்டுவதும் இல்லை.

சரியா... இப்போது இந்த மூன்று சூழ்நிலைகளிலும் நீங்கள் கலர் அடித்த ஓவியம் என்ன மாதிரி இருக்கும் என்று நீங்களே சொல்லுங்களேன்...

முதல் சூழ்நிலையில் நீங்கள் பிரமாதப்படுத்தி இருப்பீர்கள்.

சூழ்நிலை இரண்டில் கலர் அடித்து முடிப்பதே மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும். உங்கள் நண்பரின் ஒத்துழையாமை இயக்கத்தையும் மீறி நீங்கள் கலர் அடித்தது ரொம்பவே சுமாராக இருக்கும்.

சூழ்நிலை மூன்றிலும் நிலைமை ஒன்றும் சுகம் இல்லை. திட்டும் கிடைக்காமல் பாராட்டும் இல்லாமல் கலர் அடிப்பது என்கிற சந்தோஷமான காரியத்தை, ஏதோ கடமைக்குச் செய்ததைப் போலச் செய்து முடித்திருப்பீர்கள்.

இப்போது 'உந்துசக்தி’ பற்றிய ஒரு சித்திரம் உங்களுக்குக் கிடைக்கிறது அல்லவா?

இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது. அமிதாப் பச்சன், சிவாஜி கணேசன் என்கிற இரண்டு சினிமா நடிகர்கள் ஆரம்பத்தில் சின்ன வேடத்துக்குக்கூட லாயக்கு இல்லை என்று பல இயக்குநர்களாலும் தயாரிப்பாளர்களாலும் ஒதுக்கப்பட்டவர்கள். கேரம் விளையாட்டு சாம்பியன் இளவழகிக்கு அரசு வழங்குவதாகச் சொன்ன பரிசுப் பணம் வருடக்கணக்காகத் தரப்படாமல் இழுத்தடிக்கப்படும் செய்தியையும் பத்திரிகைகளில் படித்து இருப்பீர்கள். ஆனாலும் மேலே குறிப்பிடப்பட்டவர்கள் தங்கள் துறைகளில் செய்த, செய்துவரும் சாதனைகளை நம்மால் வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. இவர்களுக்கு உதவியது, இவர்களுக்கு உள்ளேயே சேமித்து வைக்கப்பட்ட உந்துசக்தி.  இந்த சுய உந்துசக்தியைக்கொண்டு நாம் ஏன் வெற்றிகளை சாத்தியப்படுத்திக்கொள்ளக் கூடாது?

நம் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு நாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட சரியான பாதையில் இருந்து விலகாமல் இருப்பது நமது பொறுப்பு. நாம் ஒருவேளை உடனடியாக வெற்றி பெறாமல் போகலாம். ஆனாலும், நமது சுய உந்துசக்தியையும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கைவிட்டுவிடக் கூடாது. எப்போதும் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் இருப்போம்.

ஒரு தோல்வியில் இருந்து இன்னொரு தோல்விக்குச் சென்றாலும் உற்சாகத்தை இழந்துவிடாமல் இருப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். விழுவது அல்ல தோல்வி; விழுந்தாலும் எழாமல் இருப்பதுதான் தோல்வி என்கிற பழமொழி உங்களுக்குத் தெரியும்தானே..?

வெற்றிக்கு உந்துசக்தியே முக்கியமானது.

வெளியில் இருந்து உந்துசக்தி கிடைக்காவிட்டாலும், உள்ளே இருக்கும் உந்துசக்தியைக் கண்டடைந்து பயன்படுத்துவோம்.

பிறருக்கு உந்துசக்தியாக இருப்பதையும் தொடர்வோம்.

புரிந்துகொள்வோம் உந்துசக்தியை.

நாம் ஏன் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தை உணர்த்துவதும் உந்துசக்தியே.

றீநாம் நடந்துகொள்ளும் விதத்துக்கு நோக்கத்தைக் கொடுத்து, திசையைக் காட்டுவதுமே உந்துசக்தி.

குறிப்பிட்ட விதத்தில் நடந்துகொள்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வேலையை எடுத்துக்கொள்வதற்கு எது உங்களைச் செலுத்துகிறதோ, தூண்டுகிறதோ அதுவே உந்துசக்தி.

நமக்கு ஒரு விஷயம் வேண்டும் என்று உறுதியாக ஆசைப்பட்டால், அதை அடைவதற்கான வழி நமக்குத் தெரியாவிட்டாலும் நாம் முயற்சிப்பதை நிறுத்திவிடக் கூடாது. உண்மையிலேயே நாம் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று விரும்பினால், உலகமே அதற்கான சூழ்நிலைகளையும் வாய்ப்புகளையும் தேவையான நபர்களையும் உதவிகளையும் நமக்குக் கொடுக்கும் என்று பரவலாகச் சொல்லப்படுவது உண்டு.

அசாத்தியம் என்று தோன்றுவதைக்கூட சாதிக்க தேவை, தொலைநோக்குப் பார்வை, கனவு, ஆழ்ந்த விருப்பம் போன்றவை உதவும். தடைகளைத் தாண்டி முன்னேறவும் தோல்வி, ஊக்கமின்மை போன்றவற்றில் இருந்து மேலேறி வரவும் நாம் பழக வேண்டும். சாதனை என்றால் அதற்கு முன்பாக, தடைகளும் தோல்விகளும் இருக்கத்தான் செய்யும். அவற்றில் இருந்து மேலேறி வரப் படைப்பூக்கம் மிக்க சிந்தனை அவசியம்.

மாணவர்களைப் பொறுத்தவரை உந்துசக்தி கீழ்க்கண்ட மூன்று விஷயங்களைச் சார்ந்து இருக்கிறது.

1.சிறப்பாக இருந்தாலும் சரி, சுமாராக இருந்தாலும் சரி.. பழைய வேலைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல்.

2.மற்றவர்களுக்கு முன்னால் வெற்றிகரமாகத் தோற்றம் அளிப்பது என்பதைவிட, எடுத்துக்கொண்ட குறிக்கோளில் கவனமாக இருப்பது.

3.பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் சுய தீர்மானம்.

(கற்போம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism