ரா.ராபின் மார்லர்
##~## |
நகைச்சுவையில் சார்லி சாப்ளினுக்கு அடுத்து சுட்டிகள் மனதில் இடம்பிடித்து இருப்பவர் மிஸ்டர் பீன். இங்கிலாந்தில் ஜனவரி 6,1955-ல் பிறந்த இவரது இயற்பெயர் ரோவன் செபாஸ்டியன் அட்கின்சன் (Rowan Sebastian Atkinson). உலகின் சிறந்த நகைச்சுவை நடிகர்களின் டாப் 50 வரிசையில் இவரும் ஒருவர். ஜேம்ஸ்பாண்ட் பாணி துப்பறியும் படங்கள் எப்பொழுதும் சீரியஸாக இருக்கும். அதைத் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் 'ஜானி இங்கிலிஷ்’ என்று அளித்த சூரர்.
இவருடைய மனைவி சுநேத்ரா சாஸ்த்ரியின் அப்பா இந்தியர், அம்மா பிரிட்டிஷ்காரர். சுநேத்ரா ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்டும்கூட. மிஸ்டர் பீன் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையை ரசிக்கத் தன் நண்பர் மற்றும் குடும்பத்துடன் இந்தியாவுக்கு ஒரு முறை வந்திருக்கிறார்.
கல்லூரியில் மின்னணுவியல் பொறியியல் துறை படிக்கும்போது ரிச்சர்ட் கர்டிஸ் (Richard Curtis) என்ற திரைக்கதை எழுத்தாளரின் தொடர்பினால் நடிக்க வந்தார். அத்துடன், காமெடி கேரக்டர்களை உருவாக்கவும் ஆரம்பித்தார். அமெச்சூர் தியேட்டர் கம்பெனியிலும் இணைந்தார்.
மிஸ்டர் பீன் பல ஆண்டுகளாகத் திக்கு வாய்ப் பிரச்னையில் துன்பப்பட்டவர். அதனால்தான் பேட்டிகள்கூட அதிகம் தர மாட்டார். இவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள்கூட அதிகமாகப் பேசாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.மாணவராக இருந்த காலத்திலேயே இவருடைய நகைச்சுவை நாடகங்கள் 1976-ல் எடின்பர்க் விழாவின்போது நகர வீதிகளில் நடத்தபட்டு, பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
1979-ல் படிப்பை முடித்த பிறகு, பிரிட்டிஷ் டிவியில் 'நாட் தி நைன் 'ஓ’ கிளாக் நியூஸ்’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்தார். அதில் இணை எழுத்தாளராகவும் இருந்தார். அந்த நிகழ்ச்சிக்காக பிரிட்டிஷ் அகாடமி விருதினைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து மிஸ்டர் பீன் உள்பட பல சீரியல்களிலும் படங்களிலும் நடித்தார். மிஸ்டர் பீன் தொடரைப் போலவே இவர் நடத்திய 'பிளாகட்டர்’ (Blackadder) என்ற சீரியலும் பிரபலமானது. இந்த சீரியலின் நான்கு பாகங்களிலும் நடித்த ஒரே நடிகரும் இவர்தான்.

பீன் தி அல்டிமேட் டிஸையஸ்டர்’ என்ற திரைப்படம் 22 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கபட்டது. உலகம் முழுவதிலும் 250 மில்லியன் டாலர் வசூலைக் குவித்தது. இளவரசர் சார்லஸின் திருமணத்துக்கு முக்கியமான விருந்தாளிகளில் ஒருவராக அழைக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் ரோமியோவாக நடித்துப் புகழ் பெற்ற லாரன்ஸ் ஆலிவரின் பெயரால் வழங்கப்படும் சிறந்த காமெடியனுக்கான விருதினை 1982-ல் பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முதுகலைப் படிப்பின்போதே மிஸ்டர் பீன் என்ற கேரக்டரை கற்பனை செய்யத் தொடங்கிவிட்டார். 30 வயதுள்ள ஆணுக்கு 10 வயதான சிறுவனின் செயல்பாடுகள் இருப்பதாக மிஸ்டர் பீனை உருவாக்கினார். தன்னை மட்டுமே நினைக்கும் சுயநலவாதி, யாரிடமும் அதிகம் பேசாத கோமாளி, பல பிரச்னைகளுக்கு நகைச்சுவை கலந்த விசித்திரமான தீர்வைக் கண்டுபிடிக்கும் கேரக்டர். இவையும் மிஸ்டர் பீனின் குணாதிசயங்கள். பெரும்பாலும் முகபாவனைகளிலே நடிப்பை விளக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
1990-ல் மிஸ்டர் பீன் வெளியிடப்பட்ட ஒரு வருடத்திலேயே 18.74 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது. 245 நாடுகளில் திரையிடபட்ட இவருடைய படங்களுக்கும் கார்ட்டூன்களுக்கும் உலக அளவில் பல விருதுகள் கிடைத்தன. இதில் மிகப் பெரிய விருது, இங்கிலாந்து தொலைக்காட்சி உலகில் உயரிய விருதாக கருதப்படும் 'கோல்டன் ரோஸ்’.
மிஸ்டர் பீன் கதைகளில் வரும் பழுப்பு நிற டெடி பியர் அனைத்துத் தரப்பினரையும் மிகவும் கவர்ந்தது. தன் கையால் சொடுக்கியவுடன் தூங்கிவிடும் என்று நம்பும் மிஸ்டர் பீன், அந்த டெடி பியர் உயிருடன் இருப்பதாகவே கதைகளில் நினைப்பார். கதைகளில் அவ்வப்போது அவரின் 'ப்ப்பீ’ என்ற சத்தமும் மிகவும் பிரபலம்.
அண்மையில் நடந்து முடிந்த லண்டன் ஒலிம்பிக்கிஸ் கலை நிகழ்ச்சிகளில் சிறப்புக் கலைஞராகப் பங்கேற்றார். லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து தனது நகைச்சுவைப் பாணியில் பியானோ வாசித்துக் கலக்கினார். 'அமைதியான இடத்தில் சிறந்த கலை உருவாகும்’ என்பது இவருடைய கருத்து.