ரா.மூகாம்பிகை சா.வடிவரசு
##~## |
'குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய கூடும்’ என்று சொல்லும் ரமணன் அங்கிளை எல்லாருமே டிவியில் பார்த்து இருப்போம். 'இப்படி மழை வரும்னு முன்னாடியே எப்படிக் கண்டுபிடிக்கிறாங்க?
இதைத் தெரிஞ்சுக்க சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு, சென்னை சூளைமேட்டில் இருக்கும் டி.டி.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் ஒரு விசிட் அடித்தோம்.
'வாங்க பசங்களா... இந்த வானிலை ஆய்வு மையத்தில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வந்து இருக்கிற உங்க எல்லோருக்கும் வணக்கம்' என்று வரவேற்று, கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றார், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன்.
'இந்த மானிட்டரில் என்ன தெரியுதுன்னு பார்த்துச் சொல்லுங்க'' என்றார். எல்லோரும் அவரைச் சூழ்ந்தனர். ''அதுவா அங்கிள்... வானத்துல மேகங்கள் மூவ் பண்றது தெரியுது'' என்று சுட்டிகள் கோரஸாகச் சொல்ல, ''வெரிகுட்!'' என்று மானிட்டரில் இருக்கும் உலக வரைபடத்தைக் காட்டினார்.
''இது கையால் வரைந்த படம் கிடையாது. சாட்டிலைட் மூலமாக எடுத்த படம்'' என்றார். ''அங்கிள், சாட்டிலைட்பத்தி விவரமாச் சொல்லுங்க' என்று பிரபாகரன் கேட்டான்.
'சாட்டிலைட்னா செயற்கைக்கோள். வானத்தில் இருந்து நமக்குத் தேவையானவற்றை எல்லாம் புகைப்படங்களாக எடுத்துத் தருவதற்காக இங்கே நாங்க செயற்கைக்கோளைப் பயன்படுத்துகிறோம்'' என்று விளக்கம் தந்தார் ரமணன்.

பிறகு, பூமியின் மேற்பரப்பில் எத்தனை டிகிரி வெப்பத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று உலக வரைபடத்தைக் காட்டி விளக்கினார்.
'மழை வரப்போகுதுன்னு எப்படி நீங்க முன்னாடியே சொல்றீங்க?' என்று முக்கியக் கேள்வியைக் கேட்டான் ஜெயராமன்.
'இதோ இந்த வரைபடத்தைப் பாருங்க... குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை இப்போ ஜப்பான் அருகில் இருக்கு. இதனால் ஜப்பான், வடகொரியா மற்றும் தென் கொரியாவில் மழை பெய்யும். இது ஒரே இடத்தில் இருக்காது. காற்று மற்றும் வெப்பச் சலனத்துக்கு ஏற்ப மாறிட்டே இருக்கும். இது வேறு திசைகளுக்கு நகர்வதால் மழை வாய்ப்பும் வேறு இடங்களுக்கு மாறும். இப்படிதான் மழை வருமா? வராதான்னு சொல்வோம்'' என்று விளக்கம் தந்தார்.
''வரும்... ஆனா வராதா அங்கிள்?'' என்று கலாய்த்த பிரபாகரிடம்...
''இப்ப எல்லாம் நாம் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். அதனால், வரும்ன்னா வரும்தான்'' என்று அழுத்தமாகச் சொன்னார் ரமணன்.
'அங்கிள்... எனக்கு ஒரு டவுட். அது எப்படி பூகம்பம் வருதுன்னு முன்னாடியே சொல்றீங்க?' என்று கேட்டாள் ஷரிணி.
'சூழ்நிலை மாற்றத்தை உடனே சாட்டிலைட் மூலமாகக் கண்டறியலாம். இப்போ இருக்கிற டெக்னாலஜிபடி பூகம்பத்தை முன்கூட்டியே தெரிஞ்சுக்க முடியும். இதனால், பூகம்பம் வரபோகுதுங்கிற அறிவிப்பை நாங்க முன்கூட்டியே வெப்சைட் மற்றும் செய்தி மையங்களுக்குச் சொல்லிடுவோம். அதனால், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் சம்மந்தப்பட்டவர்கள் செய்வாங்க. இதுனால பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்'' என்றார்.
'புயல்களுக்கு விதவிதமாப் பெயர்கள் வைக்கிறாங்களே இந்தப் பெயர்களைத் தேர்வு செய்யறது யாரு?' என்று கேட்டாள் பவித்ரா.
'சார்க் கூட்டமைப்பில் இப்போ ஏழு நாடுகள் இருக்குது. சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் அடுத்து உருவாகும் புயலுக்குப் பெயர் வைக்க வேண்டும். அதன்படிதான் பெயரும் வைப்பாங்க' என்றார்.
பிறகு, கடலூர், புதுச்சேரியை உலுக்கிய 'தானே’ புயல் வரைபடத்தைக் காட்டினார்.
'அங்கிள், இந்தப் படத்தில் ஒண்ணுமே புரியலையே. எப்படிக் கண்டுபிடிக்கறீங்க?' என்று சரபேஷ் கேட்டான். 'இதோ பாருங்க இந்தப் புயலோட வரைபடத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ரொம்பவே பலமாக கடலூருக்கு 10 கி.மீ. தொலைவில் இருக்கு. அதனாலதான் கடலூரைச் சுற்றிப் புயல் பலமாக வீசியது' என்று விளக்கினார் ரமணன் அங்கிள்.

பிறகு, துறை உதவியாளர்கள் நான்கு பேர் தனித்தனியாக சுட்டிகளை வழிநடத்தினர். ஒரு வரைபடத்தைக் காட்டி விளக்கிய உதவியாளர் ராஜேந்திரன், 'இதில் சிவப்பு நிறத்தில் இருக்கிற இடங்களில் ரொம்ப அதிகமான அளவில் மழை பெய்தது. நீல நிறத்தில் இருக்கும் இடத்தில் குறைவான அளவில் மழை பெய்திருக்கு' என்றார்.
அதைத் தொடர்ந்து, சுனாமி எப்படி வருகிறது என்று சொன்னார் உதவியாளர் கார்த்திகேயன். 'கடலுக்கு அடியில் நிலநடுக்கம், மண் சரிவு மற்றும் எரிமலை வெடிப்புகளால் ஏற்படக்கூடிய ஆழிப் பேரலையைத்தான் சுனாமி என்கிறோம். இது வருவதை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை விடுக்க முடியும். ஆனால், சுனாமியைத் தடுத்து நிறுத்த முடியாது. இதை மிகப் பெரிய இயற்கைப் பேரிடர் என்றுகூட சொல்லலாம்'' என்றவர் 2004-ல் வந்த சுனாமியின் வரைபடத்தைக் காட்டினார்.
பின்னர், சுட்டிகளை குகன் அங்கிள் நான்காவது மாடியில் இருந்த 'வின்ட்வே’ அருகில் அழைத்துச் சென்றார். அதைப்பற்றி அவர் விளக்கும்போது, ''ழி,ணி,கீ,ஷி என நான்கு திசைகளை அறிவதற்கான திசைக்காட்டிகள் மூலம் 16 திசைகளாகவும் பிரித்துத் தெரிந்துகொள்ளலாம். காற்று வீசும் திசைக்கு ஏற்ப வின்ட்வே அசையும். அதனால் எந்தத் திசையில் இருந்து காற்று வீசுகிறது என்று சுலபமாகக் கண்டறியலாம். இங்கே இருக்கிற 'கப் கவுண்டர் அனிமேட்டர்’ மூலமாகக் காற்று எவ்வளவு வேகமாக வீசுதுன்னு சுலபமாகத் தெரிந்துகொள்ளலாம்'' என்றார்.
அவரைத் தொடர்ந்து, சுட்டிகளை வழிநடத்திய உதவியாளர் மூஸா, 'டிரான்சிஸ்டர் செட்டப்’ இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். ''இங்கே இருக்கிற டிஜிட்டல் மற்றும் அனலாக் சிக்னலைப் பார்த்து வானிலையில் நிலவும் ஒவ்வொரு நிகழ்வையும் சம்மந்தப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்போம். உதாரணமாக, ஏதாவது ஒரு மாவட்டத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பெரிய பாதிப்பு ஏற்படப்போகுதுன்னு வெச்சுப்போம். நாங்க இந்தத் தகவலை, அந்த மாவட்ட ஆட்சியரிடம் முதலில் சொல்வோம். அவர் மற்றவர்களுக்கு தகவலைத் தெரிவித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்வார். இதனால், இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே தவிர்க்க முடியும்'' என்று விளக்கினார்.
''ரொம்ப நன்றி அங்கிள். மழை வந்தால் இன்னிக்கி ஸ்கூல் லீவு விடுவாங்களான்னு மட்டுமே யோசிப்போம். இனிமே மழை வரும்போது எல்லாம் நினைச்சுப் பார்க்க நிறைய விஷயங்களைச் சொல்லிட்டீங்க.'' என்று சொல்லி, எல்லோரும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.