Published:Updated:

ஸ்கூல் ஸ்டார் !

வே.கிருஷ்ணவேணி படம்: வீ.நாகமணி

ஸ்கூல் ஸ்டார் !

வே.கிருஷ்ணவேணி படம்: வீ.நாகமணி

Published:Updated:
##~##

பழங்காலத்து ராஜாக்கள் வீரத்தைக் காட்ட எதிரிகளுடன் நடத்திய கத்திச்சண்டை மற்றும் வாள்வீச்சு சண்டைகள் இப்போது விளையாட்டுகளாக மாறி இருக்கின்றன. இவற்றில், ஃபென்சிங் எனப்படும் வாள்வீச்சு விளையாட்டில் சாதனையின் உயரத்தை எட்டி இருக்கிறார், சென்னை அடையார் கேந்திரிய வித்யாலயாவில் 7-ம் வகுப்பு மாணவி பிரியங்கா.

எட்டு வயதில் இந்த விளையாட்டைத் தேர்ந்து எடுத்த பிரியங்கா, 12 வயதுக்குள் வென்ற பதக்கங்கள் 15.

ஒரு மாலை வேளையில் நம்மை வாளுடன் வரவேற்றார் பிரியங்கா.

''எனக்குச் சின்ன வயசுல இருந்தே விளையாட்டுகள் மேல தனிப் பிரியம். இதுவரைக்கும் 10-க்கும் மேற்பட்ட மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று இருக்கேன். அப்பாதான் என்னோட மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். 'எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டோடு செய்’னு சொல்வார். அப்படி வந்ததுதான் இந்த வாள் வீச்சு விளையாட்டின் மீதான ஆர்வம்'' என்கிறார்.

ஐந்து வயதில் இருந்து தடகளப் போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு அப்பாவுடன் பிரியங்கா செல்வாராம்.

ஸ்கூல் ஸ்டார் !

''ஒரு முறை வித்தியாசமான டிரெஸ் போட்டுட்டு சிலர் பிராக்டீஸில் இருந்தாங்க. அவர்களுக்கு கோச்சிங் கொடுத்துட்டு இருந்த கோச்சர் முனி நாதன் சார்கிட்ட போய் 'எனக்கும் இந்த விளையாட்டைக் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு, சொல்லித் தர்றீங்களா அங்கிள்?’னு கேட்டேன். 'சரி நாளையில இருந்து பிராக்டீஸ். வந்திடு’னு சொல்லி அனுப்பினார். நான் வாள்வீச்சு விளையாட்டுல சேர்த்திருக்கேனு கேள்விப்பட்டு,  'இந்த விளையாட்டு ரொம்ப டேஞ்சரானது. சேர்க்க வேண்டாம்’னு நிறையப் பேர் அப்பாக்கிட்ட சொன்னாங்க. அவர் அதைப் பொருட்படுத்தாமல் என்னை ரொம்பவே ஊக்குவிச்சார்'' என்கிறார்.

2008-ல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கினார் பிரியங்கா. பிறகு மாநில அளவில் நிறையப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வசப்படுத்தி இருக்கிறார்.

''சமீபத்தில் மத்தியப் பிரதேசம் குவாலியரில் நடைபெற்ற தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில், தமிழக அணி சார்பில் சப் ஜூனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றேன். சண்டிகரில் நடைபெற இருக்கும் நேஷனல் லெவல் போட்டியில் கலந்துகொள்ளப்போகிறேன்'' என்றார்.

ஸ்கூல் ஸ்டார் !

''இந்த விளையாட்டால நிறைய ஆபத்து ஏற்படலாம். வேற எவ்வளவோ விளையாட்டுகள் இருக்கேனு பலரும் சொன்னாங்க. நான் பயப்படலை. நமக்கு என்ன பிடிக்கும்ங்கறதைவிடவும், நம்ம குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும்னு யோசிச்சு செய்றவங்கதான் சிறந்த பெற்றோர். இப்போ எங்க வீட்டு ஷோக்கேஸ் முழுக்க பிரியங்கா வாங்கிய மெடல்கள்தான் நிரம்பி இருக்கு'' என்கிறார் அப்பா ஊமைத்துரை பெருமையுடன்.

இதுவரை பல போட்டிகளில் பங்கேற்று இருக்கும் பிரியங்காவுக்கு ஒரு சின்னக் காயம்கூட ஏற்பட்டது கிடையாதாம்.

''மூன்று நிமிடங்களில் விளையாடி மெடல் வாங்க முடியும் என்றால் அது நிச்சயமாக இந்த வாள்வீச்சுப் போட்டியாகத்தான் இருக்க முடியும். வாளோட முனையில் இருக்கும் டிப், இரண்டு பேரில் யார் ஒருவர் மீது தலையில் இருந்து கால் வரை எந்தப் பகுதியில் படுகிறதோ, அதற்கு ஏற்றபடி பாயின்ட் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல், உடல் முழுவதும் பாதுகாப்புக் கவசம் இருப்பதால் எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதனால் பிரியங்கா மாதிரி இன்னும் நிறையப் பேர் இந்த விளையாட்டில் வரணும். சாதனைகள் செய்யணும். அதுதான் என் ஆசை'' என்கிறார் ஊமைத்துரை.

தினமும் மாலை பள்ளி விட்டதும் நேரு விளையாட்டு மைதானத்தில் இரண்டு மணி நேரம் வாள் பயிற்சி செய்கிறார். அதன் பின் வீட்டுக்கு வந்து ஹோம் ஒர்க்கைப் பார்க்க ஆரம்பிக்கும் பிரியங்காவுக்கு, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது கனவு.

''ஆபத்து இல்லாத விளையாட்டு எதுவும் கிடையாது. ஒரு விளையாட்டின் சரியான விதிமுறைகளையும் நுணுக்கத்தையும் தெரிஞ்சுக்கிட்டு விளையாடினால் நமக்கு செல்லப் பிராணிபோல ஆபத்தும் அடிபடிஞ்சுடும்'' என்று கூறிப் புன்னகைக்கிறார் பிரியங்கா.

ஸ்கூல் ஸ்டார் !