Published:Updated:

அவதார் - சிந்திக்க வைத்த சின்ன அம்பேத்கர்கள் !

கே.ஆர்.ராஜமாணிக்கம் எஸ்.தேவராஜன்

##~##

தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை அரக்கன்களைக் கல்வி எனும் ஆயுதத்தால் தகர்த்து எறிந்த சரித்திர நாயகன் அம்பேத்கர். அவர் இன்று நேரில் வந்தால்...

கடலூர் கடற்கரைச் சாலையில் பயணித்தவர்களின் கண்கள் பள்ளிக் குழந்தைகளையே மொய்த்ததால்... போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட, மோதல்கள் ஏற்படாதபடி காவல் துறையினர் சமாளித்தனர்.

''என்னப்பா, இது எந்த ஸ்கூல் யூனிபார்ம்? பிள்ளைங்க எல்லாரும் கோட்டு சூட்டுல போவுதுங்க...'' என்று ஒருவர் கேட்க, ''சி.கே. ஸ்கூல் பசங்கதாண்ணே... ஏதோ ஸ்கூல் விசேஷம்போல இருக்கு'' என்று ஒருவர் பதில் சொல்ல, ''ஏப்பா உனக்கும் இதப் பத்தித் தெரியாதா?'' என்று முடிக்கும் முன், ''இன்னைக்குப் பசங்க எல்லாம் அம்பேத்கர் வேஷம் போடுறாங்க'' என்று சிரித்துக்கொண்டே சொன்னவரின் ஸ்கூட்டரிலும் ஒரு அம்பேத்கர்.

பெற்றோர்களின் வாகனங்களில் வந்து இறங்கிய அம்பேத்கர்கள் கூட்டமாய்ச் சென்றபோது, நீதிமன்றம்போலவே காட்சி அளித்தது பள்ளி வளாகம். வழக்கம்போல் யூனிபார்மில் வந்து இருந்த பெரிய வகுப்பு மாணவ-மாணவிகள் அவர்களைக் கரவொலி எழுப்பி உற்சாகமாய் வரவேற்றனர்.

சின்னஞ்சிறு அம்பேத்கர்கள், பெரிய பெரிய சட்டப் புத்தகங்களைத் தூக்க முடியாமல் தூக்கிவந்ததும், அவர்களில் ஒருவர் புத்தகத்தைத் தலையிலேயே தூக்கிக்கொண்டு வந்ததும் பெரும் சிரிப்பைக் கொளுத்திப் போட்டது.

அவதார் - சிந்திக்க வைத்த சின்ன அம்பேத்கர்கள் !

மறுபுறம் ஆசிரியைகளும் பெற்றோர்களும்  குழந்தைகளுக்கு கோட் சூட் அணிவித்துத் தலைமுடியைப் படிய வாரி, டை கட்டி, கண்ணாடியையும் மாட்டிவிட்டபோது... கம்பீரமாய் அம்பேத்கர் தெரிந்தார். சில அம்மாக்கள் அன்பு மிகுதியால் லிப்ஸ்டிக் பூசிவிட, அது தேவை இல்லை என ஒரு டீச்சர் அதைச் சரிசெய்துவிட்டார்.

சில அம்பேத்கர்கள் வட்டமாய் அமர்ந்து விவாதம் செய்து கொண்டு இருந்ததும், புத்தகத்தைத் திறந்து, அதில் ஒரு சட்டம் குறித்து எடுத்துச் சொல்வதுமாக இருந்த காட்சிகளும், சில அம்பேத்கர்கள் 'எப்போ நம்மை விடுவார்கள்’ என்று கவலையோடு உட்கார்ந்து இருந்த காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருந்தன.  

அவதார் - சிந்திக்க வைத்த சின்ன அம்பேத்கர்கள் !

குட்டி அம்பேத்கர்கள் பலருக்குப் புது டிரெஸ் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆனாலும் 'புது டிரெஸ்ஸைப் போட்டு ஸ்கூலுக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்களே’ என்ற கோபமும் உள்ளுக்குள் பொங்கிக்கொண்டு இருந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு அம்பேத்கர் சத்தம்போட்டு அழ, ஒன்று இரண்டாகி, பத்துப் பதினைந்து அம்பேத்கர்கள் அழுகையில் சுரம் மீட்டினர். அவர்களுக்குப் பிடித்த தின்பண்டங்கள், தண்ணீர் போன்றவற்றைக் கொடுத்து ஆறுதல்படுத்துவதற்குள் அம்மாக்களே களைத்துவிட்டனர். அந்த நேரத்தில், ''எல்லா அம்பேத்கர்களும் வாங்க, போட்டோவுக்கு போஸ் கொடுங்க'' என்று ஓர் ஆசிரியை அழைத்ததும் அழுகை நின்றது.   இத்தனையும் கடலூரில் உள்ள சி.கே. ஸ்கூல் ஆஃப் பிராக்டிகல் நாலெட்ஜ் மெட்ரிக் பள்ளியில் நடந்த அம்பேத்கர் அவதார் காட்சிகள்.

அவதார் - சிந்திக்க வைத்த சின்ன அம்பேத்கர்கள் !

அரசியல், சமூகம், சட்டம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வணிகம், கல்வி, சமயம் ஆகிய பல துறைகளிலும் அசாத்தியமான அறிவாற்றலும் எழுத்து வன்மையும் கொண்டிருந்த ஆளுமை, அம்பேத்கர். இவர் இல்லாமல் இந்திய அரசியலின் வரலாறு இருக்க முடியாது. நம் தகவல் சேகரிப்பில் இவர் முதல் இடத்தில் இருக்கட்டும்!

அம்பேத்கர்...

அவதார் - சிந்திக்க வைத்த சின்ன அம்பேத்கர்கள் !

1947-ல் இந்திய நாடளுமன்றம் ஒருவருடைய வருகைக்காக எதிர்பார்த்துக் காத்திருந்தது. அவர்தான் அண்ணல் அம்பேத்கர். இந்தியாவின் அரசியல் சாசன சட்ட வரைவை உருவாக்கியவர். அவரது இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி. மராட்டிய மாநிலம், கொங்கன் மாவட்டத்தில் அம்பவாடே என்னும் ஊரில் 1891 ஏப்ரல் 14-ல் பிறந்தார். இவர் தந்தை பெயர், ராம்ஜி சக்பால். தாயார், பீமாபாய் அம்பேத்கர். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர்.

அரசியல், சட்டம், சமூகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வணிகம், கல்வி, சமயம் எனப் பல்துறை அறிஞராகத் திகழ்ந்தார். 1947-ல் இந்தியாவின் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவரது தலைமையிலான குழுவே இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவம் என்று ஜனநாயகத்துக்கு அரியதொரு விளக்கம் தந்தவர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் வழிகாட்டி,  மனிதநேயர். இவரால் 1946-ல் தொடங்கப்பட்ட மக்கள் கல்விக் கழகம், சித்தார்த்தா உயர் கல்வி நிலையம் என்ற பெயரில் மும்பையில் இயங்கி வருகிறது. அண்ணல் அம்பேத்கர், 1956 டிசம்பர் 6-ல் மறைந்தார். 1990-ஆம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

கடலூரில் உள்ள 'சி.கே.ஸ்கூல் ஆஃப் பிராக்டிக்கல் நாலெட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி’ 1973-ஆம் ஆண்டு பாபா பள்ளி எனத் தொடங்கப்பட்டு, 2007-2008 கல்வி ஆண்டில் கவின்கேர் நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, சி.கே.ரங்கநாதன் நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு தேர்ச்சி சதவிகிதத்துக்கான கல்வி முறை, வாழ்வியல் சார்ந்த, தொழில் சார்ந்த தொலைநோக்குக் கல்வி முறை, உடற்கல்வியின் உன்னதம் மற்றும் சாதனைகள், வெற்றி காணலின் கூறுகள் என ஐந்து விதமான கல்வி முறை உள்ளன. 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுவரும் எங்கள் மாணவர்களை, இளம் வயதிலேயே தலைமைப் பண்பு மற்றும் தொழில் சார் ஆர்வம் பெற்றவர்களாக உருவாக்குவதே சி.கே., கல்வி முறையின் நோக்கம்'' என்கிறார்கள் இயக்குனர் டி.சந்திரசேகரன் மற்றும் முதல்வர் ஜெ.தார்ஷியஸ் ஆகியோர்.