Published:Updated:

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

நேர மேலாண்மை !கே.குணசீலன்,கோ.ரமேஷ்

##~##

'எல்லா வேலைகளையும் முடிச்சாச்சு. என்ன பண்ணலாம்? அஸ்வத் சொன்னது இது.

'நிறைய வேலை கிடக்கு. பொழுதே போதலை' இப்படிச் சொன்னது கிஷோர்.

அஸ்வத், கிஷோர் இருவருக்குமே ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். இரண்டு பேருக்குமே ஒரு வாரத்துக்கு ஏழு நாட்கள்தான். இதில் ஓர் ஆளுக்கு பொழுதுபோகாத அளவுக்கு நேரம் அதிகமாகவும் இன்னோர் ஆளுக்கு நேரம் குறைவாகவும் இருக்கிறதே எப்படி?

இங்கேதான் 'டைம் மேனேஜ்மென்ட்’ எனப்படும் நேர மேலாண்மை வருகிறது.

உலகில் இருக்கும் எல்லோருக்குமே நேரம் என்பது ஒரே அளவாகத்தான் இயங்குகிறது. அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் ஒவ்வொருவருக்கும் நேரம் கிடைப்பது வித்தியாசப்படுகிறது.

நேரம் என்பது மீண்டும் கிடைக்காத ஒரு விஷயம். மேலே சொன்ன வரியை நீங்கள் இரண்டு விநாடிகளுக்கு முன்னால் படித்தீர்கள். அந்த இரண்டு விநாடிகள் எதை விலையாகக் கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காது இல்லையா?

நேரம் அல்லது காலம் என்பது மிகவும் வித்தியாசமான விஷயம். நம் வீட்டுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் பால் போதவில்லை என்றால் அரை லிட்டர் கூடுதலாக வாங்கலாம். ஆனால், நேரம் போதவில்லை என்றால் அதிகரித்துக்கொள்ள முடியாது. நேரத்துக்கான நம் தேவை அதிகமாகலாம். நேரத்துக்கு என்று மாற்று எதுவும் கிடையாது. வேறு எதைவைத்தும் நேர இழப்பைச் சரிக்கட்ட முடியாது. நாளைக்குத் தேவை என்று பாலை ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பதுபோல நேரத்தை எடுத்துவைக்க முடியாது. அதேபோல மற்றவர்களிடம் இருந்து கடனாகவும் பெற முடியாது. எவருக்காகவும் நிற்காது. நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதுதான் எப்படி?

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

நம் நேரத்தைச் சரியாகத் திட்டமிடுவதன் மூலம்தான் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். நம் கையில் கிடைத்து இருக்கும் ஒரு தினத்தைத் திட்டமிட்டு அமைத்துக்கொள்ளும் எளிய உத்திதான் 'நேர மேலாண்மை’.

செய்ய வேண்டிய வேலைகள் என்று சில உள்ளன. நாம் செய்ய விரும்பும் வேலைகள் என்று வேறு சில உள்ளன. முதல் விஷயத்துக்கு உதாரணம் படிப்பு. அடுத்ததற்கு உதாரணங்கள், விளையாட்டும் பொழுதுபோக்கும். இவை அனைத்தையும் செய்துமுடிக்கத் தேவையான நேரத்தை உங்களுக்குக் கொடுக்க உதவிகரமாக இருப்பதே 'நேர மேலாண்மை’. வீட்டு வேலைகள், ஓய்வு, விளையாட்டு, சாப்பிடுவது, குளிப்பது போன்ற நம்மைக் கவனித்துக்கொள்ளும் வேலைகள், பொழுதுபோக்கு, தூக்கம், இன்னும் இவை போன்றவற்றை 24 மணி நேர வரையறைக்குள் செய்துமுடிக்க நாம் நேர மேலாண்மையைப் பின்பற்றுவதுதான் சிறந்தது.

நம் நேரம் எந்தெந்த வழிகளில் எல்லாம் செலவாகிறது என்று ஒவ்வொருவரும் தெரிந்துவைத்து இருப்பது அவசியம். எந்தெந்த விஷயங்களில், செயல்பாடுகளில் நேரம் செலவாகிறது என்று தெரிந்துகொண்டால், அதற்கு ஏற்ப நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வசதியாக இருக்கும்.

நம் நேரத்தைச் சரியாக உபயோகப்படுத்திக் கொள்வதை நாம் ஒரு பழக்கமாகவே ஆக்கிக்கொள்ள வேண்டும்.

நேரத்தை நம் கட்டுப்பாட்டுக்குள்வைத்து இருக்கப் பல்வேறு வாழ்க்கைத் திறன்கள் நமக்குத் தேவைப்படும். எப்போதும் பிஸியாகவே இருக்கிறோம் என்றால் அதில் கொஞ்சம் நேரத்தை மிச்சப்படுத்த, மிச்சப்படுத்திய நேரத்தை இன்னும் பயனுள்ள வழிகளில் பயன்படுத்திக்கொள்ள, தன்னை அறிதல் (Self Awareness) என்கிற வாழ்க்கைத் திறன் உதவும். படைப்பூக்கம் மிகுந்த சிந்தனை, பிரச்னைகளை எதிர்கொண்டு தீர்த்தல், சரியான முடிவுகளை எடுத்தல், கச்சிதமான தகவல் தொடர்பு, நிர்ப்பந்தங் களைக் கையாளுதல் போன்றவை நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்க நமக்குத் தேவை.

உங்களில் பலரும் பள்ளியின் வாயிலாக நேர மேலாண்மையைப் பற்றி அறிந்து இருப்பீர்கள். சிலர் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு இருப்பீர்கள். வேறு சிலர் சுறுசுறுப்பாகத் திட்டமிடுதலில் இறங்குவார்கள். ஆனால், அதை நடைமுறையில் கடைப்பிடிக்கமாட்டார்கள்.

வெற்றிகரமான நேர மேலாண்மை எதையெல்லாம் உள்ளடக்கியது?

திட்டமிடுதல், போட்ட திட்டத்தின்படி செயல்படுதல்.

திட்டமிட்ட செயல்பாடுகள் எவ்வளவு தூரம் பயனளித்து இருக்கிறது என்று சீர்தூக்கிப் பார்த்தல்.

அவ்வப்போது திட்டத்தில் தேவையான மாறுதல்களைச் செய்தல்.

நாம் ஒவ்வொரு நாளுக்கும், வாரத்துக்கும், மாதத்துக்கும் என்று நம் நேரத்தைத் திட்டமிட வேண்டும். பள்ளி, படிப்பு தொடர்பான செயல்பாடுகள் மாணவர்களுக்கு முக்கியம்தான். அத்துடன் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தேவையான பிற செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பள்ளிக்குப் போவது, வீட்டுப் பாடம் செய்வது, படிப்பது, சாப்பிடுவது, தூங்குவது என்று திரும்பத் திரும்ப ஒரே விதமான வேலைகளைச் செய்யும் அலுப்பூட்டும் நியதிகளில் இருந்து நம்மை விடுவிப்பது மேலே சொன்ன மற்ற வேலைகள்தான்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

ஆகவே, நமக்குக் கிடைக்கும் நேரத்தை எப்படி பயனுள்ளதாக செலவழிப்பது எனத் திட்டமிடல் வேண்டும். இதில் புத்தகம் படித்தல், பயனுள்ள செய்திகளை அறிந்துகொள்ள வானொலி கேட்டல், தொலைக்காட்சியை பார்த்தல் ஆகியவற்றையும் முறைபடுத்திக் கொள்ளவேண்டும். அதேபோல குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமும் செலவிட வேண்டிய நேரத்தையும் திட்டமிட்டுக் கொள்ளம்வேண்டும்.

உங்கள் நேரத் திட்டமிடலில் நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்...

முன்னுரிமை: உங்கள் வேலைகள் எல்லாவற்றையும் ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதுங்கள். முதல், இரண்டாம், மூன்றாம்  முக்கியத்துவம் உள்ளவையாக அவற்றைப் பிரியுங்கள். முதல் முக்கியத்துவ விஷயங்களுக்குத் திட்டத்தில் முன்னுரிமை கொடுங்கள்.

வேலை நேரம்: குறிப்பிட்ட முதல் முக்கியத்துவ வேலையைச் செய்ய எவ்வளவு நேரம் பிடிக்கும், எவ்வளவு சக்தி தேவைப்படும் என்று முடிவு செய்யுங்கள்.

இளைப்பாறுதல்: ஓய்வுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். இது உங்கள் தேவையைப் பொறுத்து 10 நிமிடங்களில் இருந்து ஒரு நாள் வரைகூட இருக்கலாம். இது உங்களுக்கான போனஸ் நேரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி: படிப்பில் சிறப்பாகச் செயல்பட உடற்பயிற்சி அவசியம். உங்கள் உடல் களைத்து இருந்தால் மூளை முழுத்திறனோடு வேலை செய்யாது. மன அழுத்தம் நம் செயல்திறனைக் குறைக்கும். எனவே உடற்பயிற்சியை வழக்கமாக்குங்கள்.

நெகிழ்ச்சித்தன்மை: எதிர்பார்க்காத தடைகள் வரலாம். அவற்றுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள். திடீர்ச் சங்கடங்களால் உங்கள் திட்டம் திசைமாறி விடாதபடி இதன் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.

ஒரு நேரத்தில் சில வேலைகள்: பாட்டுக் கேட்பதையும் ஓய்வு எடுப்பதையும் ஒரே நேரத்தில் செய்யலாம்.

நேரத்தை நிர்வகிக்கப் பெற்றோர், ஆசிரியரிடம் அறிவுரை கேட்கலாம். திட்டமிடுவதன் மூலம் நாம் உருவாக்கும் நேரம் நம் சொத்தாக மாறும்.

பல்வேறு வேலைகளைச் செய்வதற்கான உதாரண நேரத் திட்டம் எப்படி இருக்கும் என்று பார்ப்போமா?

தூக்கம் 7 மணி நேரம்

துவைத்தல்/குளியல்/சாப்பாடு 1 மணி நேரம்   

பள்ளி 7 மணி நேரம்

கை, கால் கழுவுதல் லு மணி நேரம்

மதிய உணவு லு மணி நேரம்

மதியக் குட்டித் தூக்கம் 1 மணி நேரம்

விளையாட்டு 1 மணி நேரம்

ஓய்வு, பொழுதுபோக்கு 1 மணி நேரம்

ஹாபி, தியானம் 1 மணி நேரம்

படிப்பு 2 மணி நேரம்

சாப்பாடு 1 1/2  மணி நேரம்

மிச்சம் இருக்கும் நேரம் 1 மணி நேரம்

மொத்தம் 24 மணி நேரம் மேலே உள்ள நேரத் திட்ட அட்டவணை ஓர் உதாரணத்துக்குத்தான். நன்றாகத் தூங்கவும் போதுமான அளவு படிக்கவும் தினசரி விளையாடவும்கூட நேரம் ஒதுக்க முடியும் என்பதைக் கவனித்தீர்களா? அதுவும் போக ஷாப்பிங்போகவும் வீட்டில் பெற்றோருக்கு உதவவும்  நேரம் இருக்கும்.

அட, இப்போது சும்மா நின்றுகொண்டு ஜன்னலுக்கு வெளியே தெரியும் காட்சிகளை ரசிக்கவும் கூட நேரம் மிச்சம் இருக்கும் பாருங்களேன்!

(கற்போம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு