Published:Updated:

கிராமத்து விளையாட்டு !

இரா.முத்துநாகு வீ.சக்தி அருணகிரி

பிரீமியம் ஸ்டோரி
##~##

சில விளையாட்டுகளைச் சிறுவயதில் மட்டுமே விளையாட முடியும். பெரியவர்களாக ஆனதும் அந்த விளையாட்டை ஆட ஆசை இருந்தாலும் கூச்சம் தடுக்கும். ஆனால், சில விளையாட்டுகளை எப்போதும் ஆடலாம். அப்படி வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாக் காலத்திலும் விளையாட ஏற்ற விளையாட்டு... தாயம் எனப்படும் சோழி உருட்டு விளையாட்டு.

இருவர் முதல் நான்கு பேர் வரை ஆண், பெண் என இரு பாலரும் விளையாடலாம். தற்போது 12 பேர் விளையாடும் அளவுக்கு இந்த விளையாட்டு வளர்ந்து உள்ளது. வளரும் தலைமுறைக்கு ஏற்றவாறு பல வண்ணத்தில் அச்சிடப்பட்ட அட்டைகளில் பாம்பு, ராஜா, கடவுள் போன்றவை கட்டங்களில் வரையப்பட்டு, அதில் காய்களை நகர்த்தி விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டுக்குத் தேவையானது கடற்கரையில் கிடைக்கும் சோழிகள்.

சிலர் புளியங்கொட்டைகளை ஒரு பக்கம் உரசிப் வெள்ளை ஆக்கிப் பயன்படுத்துவார்கள். தற்போது இரும்புத் துண்டில் சிறு தழும்புகளை ஏற்படுத்தி, அதைச் சோழியாக உருட்டி விளையாடுகிறார்கள். காய்களுக்கு சிறு கூழாங்கற்களைப் பயன்படுத்துகிறார்கள். மூன்று முதல் ஆறு காய்கள் வரை விளையாடலாம். சிறியவர்கள் மூன்று காய்களைவைத்தே விளையாடுவார்கள். எதிர் விளையாட்டுக்காரர் என்ன வண்ணத்தில் கல் பயன்படுத்துகிறாரோ, அதற்கு மாறாக உள்ள வண்ணக் கற்களைப் அடுத்தவர் பயன்படுத்துவார். இந்த விளையாட்டை முன்பு எப்படி விளையாடினார்கள் எனப் பார்ப்போம்...

மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் என எட்டுக் கோடுகளைக் கிழிக்கும்போது ஏழு, ஏழு கட்டங்கள் என மொத்தம் 49 கட்டங்கள் அமையும். மேலே உள்ள கட்டத்தில் நேர்க் கோட்டில் காய், கசம், பழம் எனச் சொல்லி, பழம் என வரும் கட்டத்தில் பெருக்கல் போன்ற கோட்டினைக் கிழிக்க வேண்டும்.

கிராமத்து விளையாட்டு !

இதேபோல் நான்கு பக்கங்களிலும் கிழிக்க வேண்டும். இந்தப் பழம் கட்டத்தின் நேர் குறுக்காக உள்ள கட்டத்திலும் பழத்துக்கான கோடு கிழிக்கப்படும். இந்தப் பழம் கட்டத்தில் காய்கள் இருக்கும்போது எதிர் ஆட்டக்காரர் வெட்ட முடியாது. விளையாட்டைத் துவக்கும்போது, கையில் சோழியைக் குலுக்கி தாயம் (ஒன்று) எனச் சொல்லிப் போடும்போதே ஆட்டம் சூடு பிடிக்கும். ஆறு சோழிகளில் ஒன்று மட்டும் வாய்ப் பகுதி தெரிந்தபடியும் மற்றவை குப்புற (முதுகு) விழுந்தால் அது தாயம். தாயம் விழுந்தால் மட்டுமே ஆட்டத்தைத் தொடங்க முடியும்.

இதனால் தாயம் விழுந்திட வேண்டும் எனச் சாமியைக் கும்பிட்டுச் சோழியை உருட்டுவார்கள். தாயம் விழுந்தால் பழத்துக்கான கட்டத்தில் காயைவைத்த பின்பு, அடுத்து ஒரு முறை சோழியை உருட்ட அனுமதி உண்டு. அப்படி உருட்டும்போது தாயம், ஐந்து, ஆறு, பன்னிரெண்டு (அனைத்து சோழிகளும் குப்புற விழுந்தால் ஆறினை இரண்டாகப் பெருக்கி பன்னிரெண்டாகக் கணக்கிடப்படும்) என விழுந்தால், திரும்பத் திரும்ப சோழி உருட்ட உரிமை உண்டு.

கிராமத்து விளையாட்டு !

இரண்டு, மூன்று, நான்கு என விழுந்தால், அந்த எண்களுக்கு மட்டும் காயினை நகர்த்திவிட்டு, சோழியை எதிர் ஆட்டக்காரர்களிடம் கொடுக்க வேண்டும். காய்கள் வலப்புறத்தில் இருந்து இடதுபுறமாக கட்டங்களில் நகர்த்தி வர வேண்டும். பழத்தில் காய் இல்லாதபோது எதிர் ஆட்டக்காரர் காய் நகர்த்திவந்தால் வெட்டு விழுந்துவிடும். வெட்டு விழுந்த காய்களை மீண்டும் தாயம்போட்டுப் பதிவுசெய்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். இப்படியாக வலதுபுறமாக ஏழு கட்டங்கள் வழியாகக் காய்களை நகர்த்தி, நடுவில் உள்ள பழத்தில் காயைக் கொண்டுவந்தால் மட்டுமே முழுப் பழம்.

இப்படிக் காய்கள் அனைத்தையும் எதிர் ஆட்டக்காரரிடம் வெட்டுப்படாமல் யார் கொண்டு வருகிறார்களோ... அவர்களே வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார்கள்.

இந்த விளையாட்டுக்குச் சதுரங்கம், தாயம் என வேறு பெயர்களும் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு