பிரீமியம் ஸ்டோரி
##~##

கர்நாடகத்தின் ஹோசனகாரந்த் பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி நாகராஜா கவுடா. இவரது மகன் கிரிஷாவுக்கு போலியோ பாதிப்பால் இடது காலில் ஊனம். ஏழ்மை நிலையையும் பொருட்படுத்தாமல், தன் மகனின் படிப்புக்காகப் பாடுபட்டார் தந்தை.

படிப்பில் நாட்டம் இருந்தாலும் பள்ளியில் தனித்துவம் காட்டுவதற்காக விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவது என முடிவுசெய்தான் சிறுவன் கிரிஷா. ஒற்றைக் கால் பலத்தை வைத்துக்கொண்டு உச்சத்தைத் தொட நினைத்தவன், உயரம் தாண்டுதல் போட்டியைத் தேர்வுசெய்தான். தனது 10-வது வயதில் இருந்து தான் படிக்கும் பள்ளியில் உயரம் தாண்டுதல் போட்டிக்கான பிரதிநிதியாக வலம் வந்தான். அவனது தன்னம்பிக்கையைக் கண்டு அனைவரும் வியந்து பாராட்டினர்.

கிரிஷா எனும் நாயகன் !

பள்ளியில் தொடங்கிய பதக்க வேட்டை, கல்லூரிக் காலத்திலும் நீடித்தது. தான் ஒரு மாற்றுத் திறனாளியாக இருந்தபோதிலும் முழு உடல் தகுதி உடைய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளிலேயே கலந்துகொண்டு வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினான்.

கிரிஷாவுக்கு 18 வயது ஆனது. பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் அசத்தத் தொடங்கினார். அப்போதுதான் மாற்றுத் திறனாளிகளுக்கு என்றே தனிப் பிரிவுகளில் தடகளப் போட்டிகள் நடக்கின்றன என்ற விஷயம் கிரிஷாவுக்குத் தெரிய வந்தது.

பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் பயிற்சி பெறுவதற்கு 2006-ல் தேர்வுசெய்யப்பட்டார். முறையான பயிற்சி கிடைத்த அதே வேளையில் ஆறு மாதம் தனிமையில் இருந்தார். உடன் இருந்து ஊக்கம் அளிக்கும் பொருளாதார சக்தி கிரிஷாவின் குடும்பத்துக்கு இல்லை.

தேசிய அளவில் பதக்கங்களைக் குவிக்கத் தொடங்கினார். சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக வெற்றிகளைச் சேர்த்தார். அப்போதுதான் அவருக்கு பெங்களூருவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் 'சமர்தானம்’ என்ற தன்னார்வ நிறுவனத்தின் உதவி கிடைத்தது.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் இலக்கில் மட்டுமே குறியாக இருந்த கிரிஷா, தன் திறமையால் லண்டன் பாராலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றார். அதனால் உரிய பயிற்சிகள் பெறுவதற்கு அரசின்  உதவியும் கிடைத்தது.

லண்டனில் தாயகத்துக்குப் பெருமை சேர்க்கும் தருணத்துக்காகக் காத்திருந்த கிரிஷா, முழுப் பலத்தையும் ஒன்று திரட்டினார். 80 ஆயிரம் பார்வையாளர்கள் திரண்டு இருந்த மைதானத்தில் இதுவரை தான் எட்டாத உயரத்தைத் தாண்டினார். வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். பதக்க மேடையில் மூவர்ணக் கொடி கம்பீரமாகப் பறந்தது.

கிரிஷா எனும் நாயகன் !

ஆம்... 2012 பாராலிம்பிக்ஸ் ஆடவர் உயரம் தாண்டுதலில் 1.74 மீட்டர் உயரத்தைத் தாண்டி தாய்நாட்டின் பெயரைப் பதக்கப் பட்டியலில் இடம்பெறச் செய்தார் கிரிஷா.

''என் கனவு மெய்ப்பட்டது. தாய்நாட்டுக்கு கௌரவம் சேர்த்ததில் பெருமிதம் கொள்கிறேன். ரியோவில் 2016-ம் ஆண்டு நடக்கும் பாராலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே என் லட்சியம்'' என்று அடுத்த உச்சத்தை நோக்கி கம்பீரமாக நடக்கத் தொடங்கி இருக்கிறார் இந்த 24 வயது நாயகன்!

கிரிஷா எனும் நாயகன் !
கிரிஷா எனும் நாயகன் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு