##~##

உங்கள் நண்பர்களில் யாருக்காவது தூங்குமூஞ்சி என்று பட்டப் பெயர் இருக்கிறதா? அவருக்கு ஏன் தூங்குமூஞ்சி என்று பெயர் வந்தது?

உங்கள் மாமாவோ, சித்தப்பாவோ 'தூங்காதே தம்பி தூங்காதே, நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே’ என்கிற பாட்டை முணுமுணுப்பதைக் கேட்டு இருப்பீர்கள். தூக்கம் மோசமானதா? தூங்காமலேயே இருக்கும் யாரையாவது பார்த்து இருக்கிறீர்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓய்வு என்பது உயிர்கள் அனைத்துக்கும் அவசியமான ஒன்று. உயிர்களுக்கு மட்டுமா? ஒரு புகைவண்டியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு முறை ஓடி இலக்கை அடைந்தால், அந்தப் புகைவண்டி குறிப்பிட்ட மணி நேரம் அந்த நிலையத்தில் நின்றுவிட்டுப் பிறகுதான் தன் ஓட்டத்தைத் தொடங்கும். அப்படி இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்தால் அந்தப் புகைவண்டி பழுதாகிவிடும்.

அதுபோல நமக்கும் ஓய்வு அவசியம் தேவை. ஓய்வுகளில் சிறந்தது தூக்கம். அப்படித் தூங்கும்போது நாம் நமது நினைவைப் பெரும் பகுதி இழக்கிறோம். அதனால் நமது நரம்பு மண்டலம், அதாவது மூளை அல்லது மனம் நன்றாக இளைப்பாறுகிறது. எப்போதும் நமது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் உடல் தசைகளும் நல்ல ஓய்வு பெறுகின்றன. நமது மூளை ஒழுங்காகச் செயல்படத் தூக்கம் அவசியம். தூக்கம் என்கிற இந்த ஓய்வு வேளையில் உடல் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் பணியில் ஈடுபடுகிறது. இந்த ஓய்வும் புதுப்பித்துக்கொள்ளலும் நமது படிப்பில், பிற அன்றாட நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறது.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

எனக்குத் தெரிந்த ஒரு பையன் பரீட்சைக்கு முதல் நாள் இரவு ரொம்ப நேரம் கண் விழித்துப் படித்தான். தூக்கம் வரும்போது எல்லாம் ஃப்ளாஸ்க்கில் இருந்து காபியை எடுத்துக் குடித்தும் முகம் கழுவியும் தூக்கத்தைத் துரத்திவிட்டுப் படித்தான். இதன் விளைவு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

கரெக்ட்! அவன் பரீட்சை ஹாலில் தூங்கிவழிந்தான். மதிப்பெண் குறைந்துவிட்டது. இதைத்தான்  'தூங்காதே தம்பி’ என்ற நாடோடி மன்னன் படப் பாடலில் 'நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தாமும் கெட்டார்’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி இருக்கிறார். மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டும் என்பதற்காக செயற்கையாக தூக்கத்தைத் தள்ளிப் போட்டவன், தனது நோக்கத்திலேயே சறுக்கிவிட்டான்.

எல்லாவற்றுக்குமே ஓர் அளவு இருக்கிறது. தூக்கத்துக்கும் அப்படித்தான். 13 வயதில் இருந்து 19 வயதுக்குள் இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு அல்லது ஒன்பது மணி நேரத் தூக்கம் தேவை. அதற்குக் குறைவாகவும் தூங்கக் கூடாது. அதிகமாகவும் தூங்கக் கூடாது.

சிலர் ஞாயிற்றுக்கிழமை இரவு கண் விழித்து டி.வி. பார்த்துவிட்டு, திங்கள்கிழமை வகுப்பில் தூங்கி வழிகிறார்கள். சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் விழிப்பதற்கு நாம்தான் நமது மூளையைப் பழக்கப்படுத்த வேண்டும்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

சாதாரணமான ஒரு செல்போனைத் தொடர்ந்து உபயோகித்தாலே, அதன் பேட்டரி தீர்ந்துபோகிறது. ரீசார்ஜ் செய்தால்தான் மறுபடியும் இயங்குகிறது. பேட்டரிக்கு ரீசார்ஜ்போல மனிதர்களான நமக்குத் தூக்கம். அந்தத் தூக்கத்தின் முழுப் பயனையும் பெற, நாம் சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். அவற்றைப் பார்ப்போம்...

செய்ய வேண்டியவை:

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கப்போக வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் எழுந்துவிட வேண்டும். அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும்!

தூங்கும் நேரத்தில் தளர்வான, மெல்லிய உடைகளை அணிய வேண்டும். சத்தம் இல்லாத, அதிக வெளிச்சம் இல்லாத, காற்றோட்டமான இடத்தில் படுக்க வேண்டும். தினமும் ஒரே இடத்தில் படுப்பது நல்லது.

தூங்குவதற்கு முன்னால் தியானம் செய்யலாம். சின்ன நடை ஒன்று நடந்துவிட்டு வரலாம். உடற்பயிற்சி செய்வதாக இருந்தால், இரவு உணவுக்கு முன்னதாகவே செய்து முடித்துவிட வேண்டும். தாமதமாகச் செய்தால் சுறுசுறுப்பு ஏற்பட்டு, அதுவே தூக்கத்தைப் பாதிக்கும்.

தூங்கும் முன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான பாலைக் குடிப்பதும் நல்லது.

தவிர்க்க வேண்டியவை:

ரவு நெருங்கும் நேரத்தில் காபி போன்ற பானங்களையோ, கார்பன் டை ஆக்ஸைடு வாயு நிரப்பப்பட்ட பெப்சி, கோக் போன்றவற்றையோ குடிக்கக் கூடாது.

டுக்கப்போகும்போது திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதோ, திகில் புத்தகங்களைப் படிப்பதோ கூடாது. வீடியோ கேம்ஸ் போன்றவையும் தூக்கத்தைத் தள்ளிப்போடும்.

டுப்பதற்கு முன்னால் நிறைய திரவ உணவுப் பொருட்களைக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்பட்டுத் தூக்கம் கலையும்.

ரைச்சலான இடத்தில் படுத்தல், வசதிக் குறைவாகப் படுத்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். படுக்கப்போகும்போது மனதை வருத்தப்படுத்தக்கூடிய பிரச்னைகளைப் பற்றி யோசிக்கக் கூடாது.

மொத்ததில் தூக்கம் என்ற முக்கியமான சங்கதியை ஆக்கபூர்வமான சக்தியாகப் பயன்படுத்துவது நம்மிடம்தான் இருக்கிறது. அப்படி பயன்படுத்தினால், அப்துல் கலாம் சொன்ன  நல்ல நல்ல கனவுகளைக் காணலாம். வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!

                     (கற்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism