Published:Updated:

கிராமத்து விளையாட்டு !

இரா.முத்துநாகு, ச.மஞ்சுளா வீ.சக்தி அருணகிரி, கே.தீட்ஷித்

கிராமத்து விளையாட்டு !

இரா.முத்துநாகு, ச.மஞ்சுளா வீ.சக்தி அருணகிரி, கே.தீட்ஷித்

Published:Updated:
 ##~##

'ஓடி விளையாடு பாப்பா’ என்றார் பாரதியார். அப்படித் துறுதுறு என ஓடி விளையாடும்போது, அந்தக் குழந்தை நாள் ஒன்றுக்கு நான்கு அல்லது ஐந்து முறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடும். 'இப்படிச் சாப்பிடுவது உடலும் மூளையும் சரி விகிதத்தில் வளர்ச்சி அடைய உதவும்’ என மருத்துவ உலகம் சொல்கிறது. உடலும் மூளையும் ஏற்றுக்கொள்ளத்தக்க விளையாட்டுகளில் ஒன்றுதான் டப்பா டான்ஸ். சிறுவயதில் இருந்தே நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்றவற்றை ஜாலியாக சொல்லிக்கொடுப்பதே இந்த விளையாட்டின் நோக்கம்.

இந்த விளையாட்டை நான்கு பேராக விளையாடலாம். இருவர் ஓர் அணியாகவும், மற்ற இருவர் ஓர் அணியாகவும் பிரிவார்கள். ஓர் அணியில் உள்ள இருவரும் எதிர் எதிராகக் கால்களை நீட்டிப் பாதங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்ட அமர்வார்கள். அந்தக் கால்களை இன்னொரு அணியின் இருவரும் நொண்டி அடித்துத் தாண்ட வேண்டும். நீட்டிய கால்கள் மீது தாண்டுபவர்களின் உடலில் எந்தப் பாகமும் படக்கூடாது. சட்டை, டவுசர், பாவாடை என ஆடைகளும் படாமல் தாண்ட வேண்டும்.

வெற்றிகரமாகத் தாண்டிவிட்டால்... அடுத்து கீழே அமர்ந்து இருப்பவர்கள், கால்களை ஒன்றன் மீது ஒன்றாகவைத்து உயரத்தை அதிகரிப்பார்கள். அதையும் தாண்ட வேண்டும். இப்படியே இரண்டு கால்கள், கால்கள் மீது ஒரு கை, இரண்டு கை என உயரம் அதிகமாகிக்கொண்டே போகும். அதையும் தாண்டினால், கை விரல்களை ஜாண் போட்டு அளவிடுவதைப்போல் உயரமாக்குவார்கள். அதையும் தாண்டினால், அடுத்து சவால் ஆட்டம் துவங்கும்.

கிராமத்து விளையாட்டு !

எதிர் ஆட்டக்காரர்கள் ஒரு காலைப் பின்னால் மடக்கி, மடக்கிய கால் தானாக நீட்டிவிடாமல் இருக்கப் பெருவிரலைப் பிடித்து நிற்க, அதைத் தாண்ட வேண்டும். பிறகு, ஒரு காலை முன் பக்கமாக மடக்கிப் பெருவிரலைப் பிடித்து நிற்பது, கால்கள் மீது கால் என அத்தனை நிலைகளையும் தாண்ட வேண்டும். இந்த கண்டத்தையும் தாண்டிவிட்டால் பாதாள கண்டம்.

இதில் தாண்டுபவர்கள் ஒரு காலை முன் பக்கமாக மடக்கி, பெருவிரலைப் பிடித்து ஒரு கையை சாமி வரம் கொடுப்பதுபோல மார்புக்கு நேராகவைத்து நொண்டி அடித்துத் தாண்ட வேண்டும். தாண்டியவுடன் தடுமாறி விழுந்தாலும் ஆட்டம் இழந்துவிடுவார். இதிலும் ஜெயித்தால், சவால் ஆட்டம். இதில் ஆட்டத்தின் துவக்கத்தைப்போல அமர்ந்து கால்களை நீட்ட, அந்தக் கால்களுக்குள் கைகளைவிட்டுத் தவளைபோல் தாவிச் செல்ல வேண்டும். அதிலும் வெற்றி பெற்றால், குரங்கு ஆட்டம். இதில் உட்கார்ந்து இருப்பவர்கள் முகத்தைத் தொடாமல் குரங்கு, முகத்தைப் பிராண்டுவதுபோல 'குர்குர்’ எனச் சொல்லியவாறு தாண்ட வேண்டும். இதில் கவனக்குறைவாகக் கைகள் முகத்தில் பட்டால் ஆட்டம் போய்விடும். கடைசியாக கலக்கலான டப்பா டான்ஸ்.

கிராமத்து விளையாட்டு !

ஆட்டத்தின் துவக்கத்தில் உள்ளதுபோல் கால்களை மட்டும் நீட்டி உட்கார்ந்து இருப்பார்கள். ''டப்பா ஆட்டம் ஒண்ணு... ரெண்டு... பொண்ணு மாப்பிள்ளை'' எனப் பாடியவாறு (சில ஊர்களில் 'டப்பா டான்ஸ் டபுள் ட்ரிபிள் பொண்ணு மாப்ளை) தாண்டுபவர்கள் தங்கள் கால்களை மாற்றி மாற்றி வைத்து ஆடுவார்கள். கடிகாரச் சுற்று, எதிர்க் கடிகாரச் சுற்று என்று சொல்வார்களே... அதைப்போல ஆடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது கீழே அமர்ந்து இருப்பவர்களின் காலில்பட்டு ஆட்டத்தை இழந்துவிடுவார்கள். அவர்கள் கால்களை நீட்டி உட்கார, ஏற்கெனவே உட்கார்ந்து இருந்தவர்கள் தாண்டலுக்குத் தயாராவார்கள்.

'டப்பா டான்ஸ்’, சிரிப்பான விளையாட்டாக இருந்தாலும் அதில் பல உடல் பயிற்சிகள் அடங்கி இருக்கின்றன. கால்களை நீட்டி நிமிர்ந்து உட்காரும்போது தண்டுவடத்துக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. கால்கள் மீது கைகளை வைத்து நீண்ட நேரம் வளைந்து இருப்பதால் வயிற்றுத் தசைகளுடன் கை, கால், இடுப்புத் தசைகளின் செயல்பாடு அதிகரிக்கிறது. தாண்டுபவர்களுக்கும் தசைகள் சுருங்கி விரிகிறது. இதனால் தசைப் பிடிப்பு, மூட்டு வலி போன்றவை வருவது இல்லை.

என்ன நீங்களும் டப்பா டான்ஸ் ஆட ரெடி ஆகிட்டீங்களா?