Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

Published:Updated:
##~##
''ஜீபா எனக்கு ஒரு சந்தேகம்... நம் கைகளால் இரண்டு காதுகளையும் இறுக்கமாகப் பொத்திக்கொண்டாலும் யாராவது பேசினால் கேட்கிறதே எப்படி?''

-கி.ஹரிஹரன், பேரூர்

''நம் காது மடல்களுக்குப் பின்னால் இருக்கும் மண்டை ஓட்டில், 'மேஸ்டாய்ட்’ என்னும் ஓர் எலும்பு இருக்கிறது. இதற்கும் ஒலியைக் கடத்தும் தன்மை உண்டு. ஆனால், காது மடல் அளவுக்கு இல்லாமல், குறைந்த அளவு ஒலியை மண்டை ஓட்டின் வழியே உட்செவிக்குக் கடத்தும். நீ காதுகளை இறுக்கமாக மூடிக்கொண்டாலும் அருகில் வேறு சத்தங்கள் இல்லாதபோது ஒருவர் பேசுவது கேட்கிறது. அதே நேரம், இயர்போனில் பாடல் கேட்கும்போது அதிகமான டெஸிபல்களில் ஒலி காதுக்குள் இருக்கும். அப்போது, பேசுபவர்களின் ஒலி டெஸிபல் குறைவாக இருக்கும். அதை மேஸ்டாய்ட் எலும்பினால் நமக்கு உணர்த்த முடியாமல் போய்விடும்.''

''ஹாய் ஜீபா... வைட்டமின், இரும்புச் சத்து என்று சொல்கிறார்களே... இவை எல்லாம் மனிதர்களுக்கு மட்டும்தான் இருக்குமா?''

-ஆர்.உதயபாரதி, கரூர்

''சத்து என்ற ஒன்று இல்லாமல் எந்த உயிரினமும் இருக்க முடியாது உதயபாரதி. உயிரினங்களின் வகையைப் பொருத்து அவற்றில் சில வித்தியாசங்கள் இருக்கும். சில சத்துகள் எல்லாவற்றுக்கும் பொதுவாக இருக்கும். குறிப்பாக, இரும்புச்சத்து மனிதன் முதல் புழு வரை அனைத்துக்கும் உண்டு. சில தாவரங்கள்கூட இரும்புச் சத்து இல்லாவிட்டால் வாடி வதங்கிவிடும்.''

மை டியர் ஜீபா !

''ஜீபா... நத்தையில் ஆண், பெண் வித்தியாசம் கிடையாது என்கிறாள் தோழி. அது நிஜமா?''

-எஸ்.சிந்துஜா, போச்சாம்பள்ளி

''உன் தோழி சொல்வதில் பாதி நிஜம் சிந்துஜா. நத்தைகளில் கடல் நத்தை, நன்னீர் நத்தை, நிலவாழ் நத்தை என மூன்று பிரிவுகளும், அதில் பல உட்பிரிவு வகைகளும் உண்டு. இவற்றில் நிலவாழ் நத்தைகள் ஆண், பெண் வித்தியாசம் இல்லாத இருபாலிகள். மற்ற சில நத்தைகளில் ஆண், பெண் வேறுபாடு உண்டு.''                

''ஹலோ ஜீபா... டியூப் லைட் போன்ற விளக்குகளை ஏன் கண்ணாடியில் மட்டுமே செய்கிறார்கள்?''

     -சி.எஸ்.விக்னேஷ்குமார், கோவை

''டியூப் லைட்டில் இருப்பது புற ஊதாக் கதிர்கள். இந்தப் புற ஊதாக் கதிர்களால் சில பொருட்களை மட்டுமே ஒளிர்ந்து வெளிச்சம் கொடுக்கும்படி செய்ய இயலும். கண்ணாடிக்குப் புற ஊதாக் கதிர்களை ஒளிரவைக்கும் தன்மை அதிகம். அதனால்தான் டியூப் லைட் கண்ணாடியால் செய்யப்படுகிறது.''

மை டியர் ஜீபா !

''ஹாய் ஜீபா... மண்பானைத் தண்ணீர் எப்படி குளிர்ச்சியாக இருக்கிறது?''

-செ.சுர்ஜீத்குமார், செய்யாறு.

''மண் துகள்களுக்கு இடையே கண்களுக்குத் தெரியாத நுண் இடைவெளிகள் உண்டு. மண்ணைக்கொண்டு செய்த பானையில் ஊற்றுகிற நீரில் இருந்து சில துளிகள் அந்த இடைவெளியில் சென்று தங்கிவிடும். பிறகு வெப்பம் காரணமாக ஆவியாகி வெளியே வரும். அப்படி வரும் நீராவி, அங்கே உள்ள நீரின் மீது படிந்து குளிர்ச்சியாக மாற்றும். இந்தத் தொடர் நிகழ்வால் மண் பானையில் உள்ள நீர் குளிர்ச்சியாக மாறுகிறது.''

''ஹாய் ஜீபா... நம்ம பூமியைத் தோண்டிக்கொண்டே போனால் எவ்வளவு ஆழத்தில் முடியும்?''

    -சி.சக்திவேல், செவ்வாய்ப்பேட்டை.

''பூமியின் ஆழம் சராசரியாக 6,300 கிலோ மீட்டர்கள் இருக்கும் என்று விஞ்ஞானிகள் சொல் கிறார்கள் சக்திவேல். அவ்வளவு ஆழத்துக்கு மனிதனாலோ, மனிதன் உருவாக்கும் எந்தக் கருவியாலோ பள்ளத்தைத் தோண்ட முடியாது. அப்படி சென்றால் அங்கே என்ன இருக்கும் என்பது குறித்து நிறையக் கற்பனைகள் மட்டுமே இருக்கின்றன. பூமியைத் தோண்டி எண்ணெய் எடுப் பவர்கள் இதுவரை, அதிகபட்சம் 15 கிலோ மீட்டர் ஆழம் வரை சென்று இருக்கிறார்கள் அவ்வளவுதான்.''

''டியர் ஜீபா... ஒரு பொருளைப் பார்த்ததும் இது பச்சை நிறம், இது மஞ்சள் நிறம் என்று சொல்கிறோமே... நம் கண்கள் இதை எப்படி வித்தியாசப்படுத்துகிறது?''

    -ம.மகேஷ்பாபு, ஆர்.புதுப்பாளையம்.

''ஒரு நிறத்தை பச்சை, மஞ்சள் என்று நமக்கு உணர்த்துவது மூளைதான் மகேஷ். கண்கள் நாம் பார்க்கும் பொருளின் பிம்பத்தை மட்டுமே உள்வாங்கி மூளைக்கு அனுப்புகிறது. அதுதான் அதன் நிறம் பச்சையா அல்லது மஞ்சளா, அதன் வடிவம் செவ்வகமா அல்லது முக்கோணமா, அதற்குப் பெயர் ஐஸ்க்ரீமா அல்லது ஜாமென்ட்ரி பாக்ஸா என்பதை முடிவு செய்கிறது. இந்த முடிவு சிறு வயதில் இருந்து நம் பெற்றோர், ஆசிரியர்கள், மற்றவர்கள் சொல்லிக்கொடுத்தை மூளை பதியவைத்துக்கொண்டு நமக்கு திருப்பிச் சொல்கிறது.''