##~##

'நம்ம மிதுனுக்குக் கோபமே வராதுடா. அவன் ஒரு முனிவர் மாதிரி.'

'முனிவர்களுக்குக் கோபம் வராதுன்னா, ஏன் சாபம் குடுக்குறாங்க?'- இது இரண்டு பேர் போகிறபோக்கில் பேசிக்கொண்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோபமே இல்லாத மனிதர் என்று யாரும் இருக்க முடியாது. ஆனால், ஏன் எல்லோரும் 'கோபப்படுவது தப்பு’ என்று நினைக்கிறோம்?

கோபத்தால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை என்பதோடு, கோபப்படும்போது நஷ்டத்தைச் சந்திக்கிறோம் என்பது மாறாத உண்மை. ஒரு சம்பவம் நடக்கும்போது நாம் கோபப்பட்டு நஷ்டப்படுகிறோமா அல்லது ஆக்கபூர்வமான வழியில் நம் உணர்வை வெளிப்படுத்தி சாதிக்கிறோமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆணி பிடுங்கும் கதை !

ஜாஸ்மினுக்கு ஃப்ரெண்ட்ஸே கிடையாது. காரணம், எல்லாருடனும் சண்டை. ஜாஸ்மினின் அம்மா ஜாஸ்மினுக்கு ஒரு அட்டை போர்டு கொடுத்தார். கூடவே ஒரு பாக்கெட் நிறையக் குட்டி ஆணிகளையும் கொடுத்தார். 'உனக்குக் கோபம் வரும்போது ஒரு ஆணியை இந்த போர்டுல குத்தி வை' என்றார்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

அன்று இரவு அந்த போர்டை எடுத்து வரச் சொன்னார் அம்மா. போர்டு பூராவும் ஆணி குத்தி இருந்தது.

'அச்சச்சோ போர்டு வீணாப் போச்சே!' என்று அம்மா சொல்ல, 'அந்த ஆணியை எல்லாம் பிடுங்கிடுறேம்மா' என்று ஆணிகளை அகற்றினாள் ஜாஸ்மின்.

இப்போது போர்டு முழுக்க ஓட்டைகளாக இருந்தது. 'இந்த அடையாளங்கள் மாதிரிதான் நீ முதலில் கோபப்பட்டுத் திட்டிட்டு, அப்புறமாப் போய் மன்னிப்புக் கேட்டாலும் அவங்க காயம் ஆறாது' என்றார் அம்மா. ஜாஸ்மினுக்குப் புரிந்தது.

உங்களுக்கு அடிக்கடி கோபம் வருமா? எந்த சந்தர்ப்பங்களில் கோபம் வரும்?

ஒரு காரியத்தைச் செய்ய அப்பா, அம்மா அனுமதிக்காவிட்டால், தேவை இல்லாமல் யாராவது திட்டினால், விரும்பியது கிடைக்காவிட்டால்.. இப்படித்தானே இருக்கும் உங்கள் பதில்கள்?

கோபம் வரும்போது நமக்கு வேண்டியவர்களிடம்தான் அதைக் காட்டுகிறோம். அந்த உறவு கெட்டுப்போகிறது. பொது இடத்தில் நம்மால் கத்தி கலாட்டா பண்ண முடியுமா? நம் உணர்ச்சிகளைக் கையாள நமக்குத் தெரிய வேண்டாமா? நம்மை மாற்றிக்கொள்வது சரியா... நம் விருப்பத்துக்கு ஏற்ப மற்றவர்கள் மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பது சரியா?

ஒரு கற்பனை செய்யுங்கள்... நீங்கள் கோபப்படும்போது ஒரு கேமரா உங்களைப் படம் எடுக்கிறது. அதை யூடியூப் வலைத்தளத்தில் போட்டு எல்லாரும் பார்க்கப்போகிறார்கள். இப்போது உங்கள் நடத்தை மாறுவதை நீங்களே உணர்வீர்கள்.

சிலர் தங்கள் கோபத்தை நல்ல விதமாக மாற்றத் தெரிந்தவர்கள். மதிப்பெண் குறைந்துவிட்டதே என்று பெற்றோர் திட்டும்போது வரும் கோபத்தை, கவனமாகப் படிப்பதில் காட்டுவார்கள்.

கோபத்தைக் காட்டுவது சுலபம். ஆனால், சரியான ஆளிடம், சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான காரணத்துக்காகக் காட்டுவது கடினம்.

கோபமே தப்புதானே? இதில் சரியான காரணத்துக்காகக் கோபிப்பது என்றால் என்ன? கோபத்தைப் புரிந்துகொண்டால் நம்மையே புரிந்து கொண்டது மாதிரி!

கோபம் என்பது சின்ன எரிச்சல் என்பதில் இருந்து பெரிய டென்ஷன் வரைக்கும் வித்தியாசப்படும். கோபத்தோடு கூடவே உடலியல், உயிரியல் மாற்றங்களும் கைகோத்து வரும். இது நம் ஆரோக்கியத்துக்குக் கேடு. இதயத் துடிப்பு அதிகரிப்பது, உள்ளங்கையில் வியர்ப்பது, ரத்த அழுத்தம் கூடுவது, அட்ரினலின் போன்ற உணர்ச்சிச் சுரப்பிகள் அதிகமாகச் சுரப்பது... இவை எல்லாம் கோபத்தின்போது நடக்கும்.

பிடிச்சது கிடைக்கலை என்றாலும் கோபம் வரும்... கிடைச்சது பிடிக்கலை என்றாலும் கோபம் வரும். அதாவது, உங்களைச் சுற்றி இருக்கிற விஷயம் மாறினால், உங்கள் கோபமும் மாறி சந்தோஷம் ஆகிவிடுவீர்கள்.

கோபத்தைக் கையாளப் பல வழிகள் உண்டு. உடற்பயிற்சியும் அதில் ஒன்று. ஆரோக்கியமாக இருப்பவர்கள் அதிகம் கோபப்படுவத் இல்லை என்று ஓர் ஆராய்ச்சி சொல்கிறது.

நமக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலையில் இருந்து வெளியேறிவிடுவது ஓர் உபாயம்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

நம் உணர்ச்சிகளையும் செயல்பாட்டையும் சேரவிடவே கூடாது. அதாவது கோபம் வரலாம்... ஆனால் அந்தக் கோபத்தை, நம்மைச் சுற்றி இருப்பவர்களை அடிப்பது, திட்டுவது என்று செயலாக மாற்றக் கூடாது.

சாதுவாகவே இருந்தாலும் அவரும் மிரண்டு கோபம்கொள்ளும் சந்தர்ப்பம் வரத்தான் செய்யும். ஒரு முன்கோபிக்கும் சாதுவுக்கும் உள்ள வேறுபாடே, அவர்களின் பொறுமையின் அளவும் கோபத்தை வெளிப்படுத்தும் விதமும்தான்.

கோபத்தை சமாளிப்பதற்கு மூன்று முக்கியமான அணுகுமுறைகளைச் சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். கோபத்தை வெளிப்படுத்தி விடுவது, அடக்கிக்கொள்வது, நம்மை உள்ளுக்குள்ளே அமைதிப்படுத்திக் கொள்வது என்பதே அவை.

கோபத்தை புத்திசாலித்தனமான வழியில் வெளிப்படுத்துவது ஆரோக்கியமானது. இதற்கு, நமக்கு என்ன தேவை? அதைப் பிறரைப் புண்படுத்தாமல் அடைவது எப்படி என்பதை அறியும் திறன் வேண்டும்.

அடக்கிக்கொள்ளும்போது, கோபத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக் குமுறுகிறீர்கள். கோபத்தின் காரணத்தைப் பற்றி சிந்திப்பதை நிறுத்துகிறீர்கள். வேறு விஷயத்தில் மனசைத் திருப்பி ஆக்கபூர்வமாக யோசிக்க முயற்சிக்கிறீர்கள்.

அமைதிப்படுத்திக்கொள்வது என்பது என்ன? அது நமது செயல்பாட்டைக் கட்டுப்படுத்திக் கொள்வது மட்டும் அல்ல, உள்ளே குமுறும் உணர்ச்சியையும் சாந்தப்படுத்துவது. இதயத் துடிப்பின் வேகத்தைக் குறைக்க முயற்சி செய்வது, சந்தோஷமாக இருப்பது இப்படி, கோபத்தின் வேரையே அறுக்கும் செயல்முறை அது.

சரி, உச்சக்கட்ட கோபம் உங்களுக்கு வந்துவிட்டது. இப்போது என்ன செய்யலாம்?

ஆழமாக மூச்சுவிடுங்கள். அடி வயிறு வரை சுவாசம் போய்த் திரும்ப வேண்டும்.

ரிலாக்ஸ் என்கிற வார்த்தையையோ, உங்களுக்குப் பிடித்த கடவுளின் பெயரையோ மனதுக்குள் திரும்பத் திரும்ப உச்சரியுங்கள். அப்படியே ஆழமாக மூச்சுவிடுங்கள்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

கைண்ணை மூடிக்கொண்டு நீங்கள் சென்ற ஓர் இயற்கை அழகோடு கூடிய இடத்தை மனக்கண் முன்கொண்டு வாருங்கள்.

யோகா போன்ற உடற்பயிற்சிகள் தசைகளைத் தளர்த்தி அமைதி ஆக்கும்.

மேலே சொன்ன விஷயங்களை தினசரி சிறிது நேரம் ஒதுக்கிப் பயிற்சி செய்தால், கோபம் வரும் போது இதைச் செய்யச் சுலபமாக இருக்கும். பிறகு?

யோசனை கட்டுக்கு மீறிப் பாய்வதைத் தடுக்க,  'ஓகே இதெல்லாம் சகஜமப்பா, இதோட எல்லாம் முடிஞ்சுபோயிடாது, சரிபண்ணிடலாம்’ என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளலாம்.

வைந்த பிரச்னையை உடனடியாகத் தீர்க்க முடியாவிட்டாலும், அதை நேருக்கு நேராக எதிர்கொண்டு புரிந்துகொள்ள முயற்சிப்பது பாதிப் பிரச்னையைத் தீர்த்துவிடும்.

உங்களை யாராவது குறை சொன்னால், கோபம் வரும்தான். அதற்காக அவர்களுடன் சண்டை போடாதீர்கள். அவர் சொன்னதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று யோசியுங்கள்.

கோபமான நேரங்களில் மொக்கை ஜோக்குகளை சொல்வது பல வழிகளில் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும்.

அப்புறம் என்ன? கோபத்தை வென்று, அன்பால் நிறைய நண்பர்களை சம்பாதியுங்கள்.

(கற்போம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism