Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.யுவராஜன் ஹரன்

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.யுவராஜன் ஹரன்

Published:Updated:
##~##

அது ஒரு கடிகாரக் கண்காட்சி. ஒரு பெரிய ஹாலில் திரும்பிய திசை எல்லாம் கடிகாரங்கள். பழங்காலத்தின் மணல் கடிகாரம், நீர்க் கடிகார மாதிரிகள். தவிர, 100 வருடங்களுக்கு முந்தைய கடிகாரத்தில் தொடங்கி, புதிதாக சந்தைக்கு வந்த மாடல்கள் வரை அத்தனையும் இருந்தன.

''அடேங்கப்பா... ஒரே நேரத்தில் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலத்தில் இருக்கிற ஃபீலிங்'' என்றான் பரத்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நேரம் போறதே தெரியாமல் நேரக் கருவிகளைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம்'' என்றான் பிரசாந்த்.

''ரெண்டு பேரும் டைமிங்காப் பேசறாங்களாம்!'' என்று தீபாவிடம் சுரேகா கிசுகிசுக்க, ''எல்லாம் நேரம்தான்'' என்று சிரித்தாள் தீபா.

''உஷ்... பேசாம பாருங்க'' என்று அதட்டினார் மாயா டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''அது எப்படி? இப்ப எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நீங்கதானே தீர்க்கணும்'' என்றான் பரத்.

''உங்க சந்தேகம் அடுத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாது. இப்போ எல்லாத்தையும் அமைதியாப் பார்த்துக்கிட்டே வாங்க. வெளியே போன பிறகு உங்க சந்தேகங்களைக் கேட்கலாம்'' என்றார் டீச்சர்.

அதன் பிறகு அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சுவரில் தொங்கும் வால் கிளாக்குகள், கண்ணாடிப் பெட்டிகளில் இருந்த அலாரம் வகைக் கடிகாரங்கள், கைக் கடிகாரங்கள் என அனைத்தையும் பார்த்தார்கள். பிறகு அந்தக் கட்டடத்தின் பின் பக்கம் இருந்த பூங்கா போன்ற இடத்துக்கு வந்தார்கள். மந்திரக் கம்பளத்தைக் கீழே போட்டு அமர்ந்துகொண்டார்கள். கொண்டுவந்த பிஸ்கெட் பாக்கெட்டைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

''இப்பக் கேளுங்க'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''முதன் முதலில் சூரியனின் நிழலைப் பார்த்து நேரத்தைக் கணிச்சது, மணல் கடிகாரம்... இப்படிக் கடிகாரம் பற்றிய அடிப்படைச் செய்திகள் எங்களுக்கே தெரியும் டீச்சர். அலாரம் வகைக் கடிகாரம் முதலில் எப்போ வந்தது?'' என்று கேட்டான் பிரசாந்த்.

''இதற்கான அடித்தளம் கிரேக்கத் தத்துவஞானி பிளாட்டோ காலத்தில் ஆரம்பிச்சது. ஆனால், அது ஒலி எழுப்பாத நீர் அலாரம். அவர் மக்களிடையே பிரசாரம் செய்யும்போது குறிப்பிட்ட நேரத்தை அறிவதற்கு ஒரு யுக்தியைக் கையாண்டார்.''

இப்படி மாயா டீச்சர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவர்களுக்கு எதிரே அவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும் ஒரு வெண் திரை தோன்றியது. அதில் காட்சிகள் விரிந்தன.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''ஆகா... மந்திரக் கம்பளத்தைக் கீழே போட்டு உட்காரும்போதே நினைச்சேன், இப்படி ஏதாவது நடக்கும்னு...'' என்றாள் சுரேகா.

வெண் திரையில்... மேடை போன்ற அமைப்பின் எதிரே பிளாட்டோ வந்து நின்றார். மாயா டீச்சர் தொடர்ந்தார். ''இந்த மேடையின் அடிப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருக்கும். மேல் பகுதியில் வரிசையாக இருக்கும் சிறு சிறு குழாய்களைக் கவனியுங்க. பல் சக்கரம் ஒன்றின் இயக்கம் மூலம் ஓர் உருளை, தண்ணீரைத் தொட்டு அழுத்தும்போது, தண்ணீர் மேல் நோக்கிக் குழாய்கள் வழியே பீய்ச்சி அடிக்கும். இந்த சமிக்ஞை மூலம் தன் சொற்பொழிவின் நேரத்தைத் தெரிந்துகொள்வார் பிளாட்டோ'' என்றார் டீச்சர்.

''அடடா... மைக் கிடைச்சா பேசிக்கிட்டே இருக்கிற ஆட்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருத்தரா?'' என்றாள் தீபா.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சர் தொடர்ந்தார். ''அந்தக் காலத்தில் சீனாவில் புத்த மதத் துறவிகள் குறிப்பிட்ட நேரத்துக்குக் கண் விழிக்க, தங்கள் கால் விரல்களுக்கு இடையே மெழுகுவர்த்தியை வைத்துக்கொண்டு உறங்கியதாகவும் சொல்லப்படுகிறது. எரிந்துகொண்டே வரும் மெழுகுவர்த்தி விரலைச் சுடும்போது விழித்து கொள்வார்களாம். இப்படி வெவ்வேறு செயல்கள் மூலம் அலார கடிகாரத்துக்கான மனிதனின் தேடல் நடந்தது'' என்றார்.

இப்போது வெண் திரையில் பிளாட்டோவின் காட்சி மறைந்து ஓர் ஆங்கிலேயர் வந்தார். ''இவர் அமெரிக்காவின் நியூ ஹாம்ஷயர் மாகாணத்தைச் சேர்ந்த லெவி ஹட்சின்ஸ். இவர் தனது பணியின் காரணமாகத் தினமும் காலையில் 4 மணிக்குக் கண் விழிக்க நினைத்தார். 1787-ம் ஆண்டில் ஒரு மரப்பெட்டிக்குள் பெரிய பித்தளைக் கடிகாரத்தின் உள் பாகங்களைவைத்துக் கடிகாரத்தை உருவாக்கினார். அந்தக் கடிகாரத்தின் முள், நான்கு மணியைத் தொடும்போது பல்சக்கரம் அதை இடறும் வகையில் அமைத்தார். அப்போது பெரும் சப்தம் எழுந்தது. இதுதான் முதல் அலாரம். ஆனால், இதற்கு அவர் காப்பிரைட் உரிமைப் பெறவில்லை. பிறகு வந்தவர்கள் அதை இன்னும் மேம்படுத்தி, அலார வகைக் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார்கள்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

வெண் திரையில் அந்தக் காட்சிகள் மறைந்தும் ''டீச்சர், உள்ளே ரேடியம் வாட்ச் ஒண்ணைப் பார்த்தோம். ஆனா, நான் பல முறை கடைகளுக்குப் போய் இருக்கேன். அந்த மாதிரி கடிகாரத்தைப் பார்த்ததே இல்லையே'' என்றாள் சுரேகா.

''பார்க்க முடியாது சுரேகா. ஏன்னா, அந்த வகைக் கடிகாரத்தைத் தயாரிக்கக் கூடாதுனு உலகம் முழுக்கத் தடை விதிச்சுப் பல வருடங்கள் ஆச்சு. இரவிலும் ஒளிரும் ரேடியம் கடிகாரத்துக்கு 1920-ம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்காவில் ரொம்பவே மவுசு. அதைக் கையில் கட்டிக்கிறதையே பெருமையா நினைச்சாங்க. இந்த வகைக் கடிகாரத்தில் முள்ளின் மீது ரேடியம் கலந்த பொருளை பிரஷ் மூலம் பூசுவார்கள். அது தீங்கான கதிர்வீச்சை வெளிப்படுத்தியது. கடிகாரம் செய்யும் பணியில் ஈடுபட்ட பலருக்கும் இதனால் எலும்புப் புற்றுநோய் உள்பட பல நோய்கள் ஏற்பட்டன. அதனால் ரேடியம் வாட்ச், ரேடியம் சுவர்க் கடிகாரம் அனைத்துக்கும் தடை வந்தது. அதன் பிறகு, ஒரு சிலர் மட்டும் பழைய ரேடியம் கடிகாரங்களை வெச்சு இருந்தாங்க. இப்பவும் சில ஒளிரும் கடிகாரங்கள் சந்தையில் இருக்கு. ஆனால், அவை பிராமிதியம் என்ற வேதிப்பொருள் மூலம் செய்யப்படுகிறது'' என்றார் டீச்சர்.

''ஏன் டீச்சர், இந்த முறை மந்திரக் கம்பளம் இப்படியே ஃபிலிம் காட்டிட்டு இருக்கப் போகுதா? நேரில் எங்கேயும் கூட்டிட்டுப் போகலையா?'' என்று ஏக்கத்துடன் கேட்டான் பிரசாந்த்.

''நேரில்தானே? அப்படின்னா விக்கிரமாதித்தனின் வேதாளம் மாதிரி நான் கேட்கிற கேள்விக்கு சரியான பதில் சொல்லுங்க. உலகின் பொது நேரமான ஜி.எம்.டி. என்பதன் விரிவாக்கம் என்ன?'' என்று கேட்டார் மாயா டீச்சர்.

''எனக்குத் தெரியும். "Greenwich Mean Time" என்றான் பரத்.

அடுத்த நொடி, 'விஷ்க்’ என வேதாளம் மாதிரி மந்திரக் கம்பளம் மேலே எழும்பிப் பறந்தது. ''கரெக்ட் பரத். ஆனால், அதை கிரீன்விச் என்று உச்சரிக்கக் கூடாது. அங்கே டபிள்யூ சைலன்ட். அதனால் கிரீனிச் என்று சொல்ல வேண்டும். இந்த கிரீனிச் என்பது லண்டனில் இருக்கும் ஒரு பகுதி. 100 வருடங்களுக்கு முன்பு உலகின் பெரும் ராஜ்ஜியமாக பிரிட்டன் இருந்தது. அப்போது பல்வேறு நாடுகளில் இருந்து கிரீனிச் துறைமுகத்துக்கு வரும் மாலுமிகள் இங்கே உள்ள நேரத்தைத் தங்கள் கடிகாரத்தில் வைத்துக்கொள்வார்கள். காரணம், இந்த கிரீனிச் வழியேதான் பூமியின் பூஜ்ய டிகிரி தீர்க்க ரேகை எனப்படும் கற்பனைக்கோடு செல்வதாகச் சொல்லப்படுகிறது. எனவே, உலகின் நேரம் இங்கே தொடங்குவதாகக் கணக்கிட்டு, 1928-ல் அதைப் பொது நேரம் ஆக்கினார்கள். மற்ற நாடுகளும் அதை ஏற்றுக்கொண்டன.'' என்றார் டீச்சர்.

சற்று நேரத்தில் அவர்கள் லண்டனின் கிரீனிச் நகரின் ஒரு பகுதியில் இருந்தார்கள். அங்கே ஏராளமான சுற்றுலாப் பயணிகள், தரையில் பதிக்கப்பட்டு இருந்த நீண்ட செப்புப் பட்டை அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

''இங்கேதான் பூஜ்ய டிகிரி என்ற கற்பனைக் கோடு தொடங்குகிறது. இந்தக் கோடு, மற்ற நாடுகளில் செல்வதாக சொல்லப்படும் விதத்தைப் பொருத்து கிரீனிச் நேரத்துடன் கூட்டியோ, குறைத்தோ பொது நேரம் உருவாக்கப்படுகிறது'' என்றார் டீச்சர்.

''அப்படின்னா UTC என்று சொல்றாங்களே... அது என்ன?'' என்று கேட்டான் பிரசாந்த்.

''இந்த ஜி.எம்.டி. நேரத்துக்குதான் 1986-ல் யு.டி.சி. என்று புதிய பெயரை வைத்தார்கள். இதை Under The Counter என்றும் Coordinated Universal Time என்றும் சொல்வார்கள். அதாவது ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துலக நேரம் என்று அர்த்தம்'' என்றார் டீச்சர்.

அந்த கிரீனிச் பகுதியில் அவர்களும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

'போதுமா’ என்பதுபோல் மந்திரக் கம்பளம் அவர்களைச் சுமந்து கொண்டு மேலே எழுந்து பறந்தது.