துறுதுறு இளவரசி தீபிகா !

##~##

மன்னார்குடி, கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் நட்சத்திரமாக வலம் வருபவர், எட்டாம் வகுப்பு மாணவி தீபிகா. ஆசிரியர்களையும் சக மாணவிகளையும் தன்வசப்படுத்தி இருப்பவர். தீபிகாவிடம் அப்படி என்னதான் ஸ்பெஷல்?  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுஷ்யா (சமூக அறிவியல் ஆசிரியை): ''சில நேரங்களில் மாணவர்களையே வகுப்பு எடுக்கச் சொல்வோம். அப்போது முதல் ஆளாக வந்து நிற்பது தீபிகாதான். ரொம்ப அழகாகவும் எளிதாகப் புரிகிற மாதிரியும் சொல்லித்தருவாள். பொம்மலாட்டம், வில்லுப் பாட்டுனு நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமாகப் பங்கெடுப்பாள்.''

பாரதி (கணித ஆசிரியை): ''படிப்பைப்போலவே எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிகளிலும் தீபிகா திறமைசாலி. போட்டிகளில் ஜெயிக்கிறோமோ இல்லையோ, கலந்துகொள்வது ரொம்ப முக்கியம் என்பது இவளது கொள்கை. பல முறை முதல் பரிசையும் பெற்று இருக்கிறாள். எல்லாருக்கும் முன் உதாரணமான மாணவி.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

ரேணுகா (அறிவியல் ஆசிரியை): ''சயின்ஸ் புராஜெக்ட்டை ரொம்ப ஆர்வமாகச் செய்வாள். ஒரு முறை இவளோட சயின்ஸ் புராஜெக்ட்டைப் பார்த்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ''நீ இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை. புனேவில் இருக்கிற சயின்ஸ் டெக்னாலஜி சென்டர்ல இருக்க வேண்டிய ஆளு''னு சொல்லிப் பாராட்டினார். எந்த ஒரு விஷயத்தையும் ஈடுபாட்டோட செய்யணும்னு தெளிவாக இருப்பாள்.''

நீலாவதி (தமிழ் ஆசிரியை): ''சுறுசுறுப்புதான் தீபிகாவின் அடையாளம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய கண்காட்சியில் இரண்டு முறை பரிசு வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து இருக்கிறாள். பாராட்டுக்கு மயங்காமல், தன் அடுத்த வேலையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடுவாள்.''

பானுமதி (தையல் ஆசிரியை): ''பிள்ளைகளுக்குத் தையல், கூடை பின்னுவதற்குச் சொல்லிக்கொடுப்பேன். என்கிட்ட ஆர்வத்தோட கத்துக்கிற மாணவிகளில் தீபிகாவும் ஒருத்தி. தான் கத்துக்கிட்டதை சின்ன வகுப்புப் பசங்களுக்குச் சொல்லித்தருவாள். தாம் செய்கிற வேலை மேல் அக்கறையோடு இருப்பாள்.''

தேவி (தலைமை ஆசிரியை): ''எல்லாரிடமும் அன்பாகப் பேசிப் பழகுவாள். ஆசிரியைகளுக்கு உதவி செய்றது, பள்ளியைச் சுத்தமா வெச்சுக்கிறதுனு எந்த நேரமும் தன்னை பிஸியாவே வெச்சுப்பா. அடுத்த வருஷம் ஒன்பதாவது படிக்க வேறு பள்ளிக்குப் போயிருவாள். இருந்தாலும் தீபிகா எப்பவும் எங்க பிரியத்துக்கு உரிய மாணவிதான்.''

- து.யோகேஷ்வரி
படங்கள்: செ.சிவபாலன்

கனிவான கனகலட்சுமி டீச்சர் ! 

 சென்னை - எழும்பூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களின் அன்புக்கு உரியவர் கனகலட்சுமி டீச்சர். ஆங்கிலத்தையும் கணிதத்தையும் சுவாரசியமான செயல்பாடுகள் மூலம் கற்பிக்கும் இவரைப் பற்றி மாணவர்கள் சொல்கிறார்கள்...    

எம்.முனீஸ்ராஜ்: ''நான் முன்னாடி எல்லாம் அதிக நாள் லீவு எடுப்பேன். 'ஒரு மாதம் முழுக்க லீவு எடுக்காம வர்றவங்களுக்கு 10 ரூபாய் தருவேன். அதை உண்டியல்ல சேமிக்கணும்’னு கனகலட்சுமி டீச்சர் சொன்னாங்க. நான் ரெண்டு மாதமா ஒரு நாள்கூட லீவு எடுக்காம 20 ரூபாய் வாங்கினேன். இந்த சேமிப்புப் பழக்கத்தைத் தூண்டினதே கனகலட்சுமி டீச்சர்தான்.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

ஏ.சரத்குமார்: ''எங்க டீச்சர் எங்களுக்குக் கடவுள் பாட்டும், பத்மாசனமும் சொல்லித் தருவாங்க. தினமும் காலையில ஸ்கூலுக்கு வந்ததும் இந்த ரெண்டையும் செஞ்சிட்டுதான் படிக்க ஆரம்பிப்போம். ஸ்கூலுக்கு வர்றதுக்கே ஜாலியா இருக்குன்னா அதுக்கு கனகலட்சுமி டீச்சர் முக்கியமான காரணம். இங்கிலீஷ்ல நாங்க பின்னி எடுக்கிறதுக்குக் காரணமும் இவங்கதான்.''

ஆர்.சுந்தரி: ''கனகலட்சுமி டீச்சர் பாடம் நடத்தும்போது செய்முறையோடு புரியவைப்பாங்க. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காம சொல்லித்தருவாங்க. போன வாரம் 'உணவு’ பாடத்துக்காக அவங்க வீட்ல இருந்து காய்கறி எடுத்துவந்து சமையல் செஞ்சு காட்டினாங்க. யாராவது சாப்பிடாம வந்தா பிஸ்கட் வாங்கித் தருவாங்க.''

ஆர்.செல்வக்குமார்: ''எனக்கு ஞாபகசக்தி ரொம்பக் கம்மி. அஞ்சு நிமிஷத்துக்கு மேல எதையும் ஞாபகம் வெச்சுக்க முடியாது. பரீட்சை எழுதுறதே கஷ்டமா இருக்கும். அதனால ஒரு வருஷமா ஸ்கூலுக்கு வரல. கனகலட்சுமி டீச்சர் தந்ற ஊக்கத்துலதான் இப்ப தினமும் ஸ்கூலுக்கு வர்றேன். எனக்கு ஓவியம் வரையிறதுல ஆர்வம். நான் வரைஞ்ச ஓவியத்தை அவங்களே பத்திரிகைக்கு அனுப்பி  அது பிரசுரமும் ஆனப்ப சந்தோஷமா இருந்துச்சு.''

ஜெ.ராமு, சாமு: ''நாங்க ட்வின்ஸ். வீட்ல கஷ்டம். ரொம்ப நாளா கிழிஞ்ச சட்டை போட்டுட்டு வந்தோம். இதைப் பார்த்த கனகலட்சுமி டீச்சர் நாங்க கேட்காமலேயே புது யூனிஃபார்ம் எடுத்துத் தந்தாங்க. புது நோட்டுகூட வாங்கிக் கொடுத்தாங்க.''

 - அ.ஸ்ரீவித்யா
படங்கள்: செ.நாகராஜன்