Published:Updated:

அவதார் - பச்சைச் சேலையில் பாயும் புலிகள் !

கே.ஆர்.ராஜமாணிக்கம் கா.முரளி

அவதார் - பச்சைச் சேலையில் பாயும் புலிகள் !

கே.ஆர்.ராஜமாணிக்கம் கா.முரளி

Published:Updated:
##~##

'வெற்றிவேல் வீரவேல்’ என விண் அதிர முழங்கி, வெள்ளையரை வீழ்த்திய சிவகங்கைச் சீமையின் வீரமங்கை. 18-ஆம் நூற்றாண்டில் இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி, வேலு நாச்சியார். அவர் இன்று நேரில் வந்தால்...

பச்சை அம்மன்களாய்ப் பள்ளி வேனுக்குள் இருந்து தலைகாட்டிய மாணவிகளைப் பார்த்ததும் ஒருகணம் திகைத்த வாட்ச்மேன், ''மேடம் இவங்க எல்லாம் யாரு?'' என்று டீச்சரைப் பார்த்து சந்தேகத்துடன் கேட்க, அவங்க பதில் சொல்வதற்குள், ''வாட்ச்மேன் அங்கிள்... எங்களைத் தெரியலையா? நான்தான் ரஞ்சி, நான்தான் பிரபா, மோனி... ஹி...ஹி. இன்னிக்கு நாங்க வேலு நாச்சியாரா மாறிட்டோம். இங்கே பாருங்க கத்தி வெச்சிருக்கோம்'' என்றதும், ''சரிங்க ராணியம்மா'' என்று தலையாட்டிக்கொண்டே கதவைத் திறந்துவிட, 'ஓ...’ என்று அனைவரும் கூச்சல் இட்டனர். இது ஒரு படை என்றால், இன்னும் ஒரு படை மேக்-அப் அறையில் தயாராகிக்கொண்டு இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டீச்சர்கள், வேலு நாச்சியார்களுக்கு சேலை கட்டிக் களைத்துப்போக, தம் பெண்களை வேலு நாச்சியாராகக் காணப் பேராவலுடன் வந்து இருந்த பெற்றோர்கள், போட்டிபோட்டுக்கொண்டு பிள்ளைகளைத் தயார்ப்படுத்தினர்.

அவதார் - பச்சைச் சேலையில் பாயும் புலிகள் !

பெண்களுக்குத் தேவையான வளையல், வங்கி, நெக்லஸ், ஒட்டியாணம் என அனைத்தும் இருந்ததால்  எல்லாம் ஓகே'' என்று ஓவிய ஆசிரியர் சொல்ல, அந்த நேரம் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்தது ஒரு குட்டிப் பெண்ணின் அழுகை. காரணம் கேட்டபோது, ''லிப்ஸ்டிக் போட்டாத்தான் வருவாளாம் சார், இல்லேன்னா எல்லாத்தையும் கலைச்சுப்போட்டுருவேன்னு அழறா'' என்றார் ஒரு டீச்சர்.

'ஆகா, வந்திருச்சுடா ஒரு குறை’ என நினைத்த ஓவிய ஆசிரியர், ''வாங்கி வரச் சொல்லி இருக்கேன்'' என்றார். அப்போது ஒரு நாச்சியாரின் அம்மா லிப்ஸ்டிக் எடுத்துப் போட்டுவிட, எல்லோரும் சிரித்தனர். அந்தக் குழந்தையும் சிரித்தாள்.  

அவதார் - பச்சைச் சேலையில் பாயும் புலிகள் !

காலையில் தொடங்கிய ஒப்பனை, மதியத்தைத் தாண்டியது. ''பின்னே, சாதாரண பொண்ணுன்னாலே எம்மா நேரம் ஆவுது... ராணியாச்சே சும்மாவா?'' என்றார் ஒரு நாச்சியாரின் அம்மா. பட்டு உடுத்த அம்மா என்றால், பொட்டு வைக்க அப்பா என்று அமர்க்களப்பட்டது பள்ளி மைதானம். இந்த விஷயம் கேள்விப்பட்டு, திருவிழாபோல் திரண்டனர் ஊர் மக்கள்.

இதுபோன்ற ஒரு திருவிழாக் கூட்டம்தான் அன்று வீர மங்கையான வேலு நாச்சியாரை வெற்றிமங்கை ஆக்கியது. அரண்மனையில் நடைபெற்ற அந்த நவராத்திரி விழாவில் பெண்கள் ஏராளமாய்க் கலந்துகொண்ட சமயத்தில், நாச்சியாரின் பெண்கள் படை புயலாய்ச் சீறி, ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை அழித்தது. வெற்றியும் கிடைத்தது. இங்கே, தலைக் கிரீடமும் காதில் தொங்கட்டானும் அணிந்து, கைகளில் வாள் பிடித்தபோது... பெற்றோர்களின் உள்ளம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

வேலு நாச்சியார்

அவதார் - பச்சைச் சேலையில் பாயும் புலிகள் !

இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி, சக்கந்தி முத்தாள் நாச்சியார் தம்பதியருக்கு 1730-ல் பிறந்தவர், வேலு நாச்சியார். ஒரே வாரிசான இவரை ஆண் பிள்ளையைப்போல் வளர்த்தனர். பல மொழிகள் கற்றவர். ஆயுதப் பயிற்சி பெற்றவர். தனது 16-ம் வயதில் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மணம் முடிக்கப்பட்டார். தன் கணவரின் இறப்புக்குப் பின், நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் பொருட்டு, எதிரிகள் கண்ணில் படாமல், இடங்களை மாற்றி மாற்றி வாழ்க்கை நடத்தினார். ஹைதர் அலியைச் சந்தித்தார். உருது மொழியில் பேசி, அந்நியர்களிடம் இருந்து மக்களைக் காக்கப் போராட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். ஹைதர் அலி கொடுத்த 5,000 போர் வீரர்கள் மற்றும் 5,000 குதிரை வீரர்கள், பீரங்கிப் படை ஆகியவற்றோடு சிவகங்கை சென்றார். நவராத்திரி விழாவின்போது, மாறுவேடத்தில் புகுந்த பெண்கள் படை எதிரிகளை வீழ்த்தியது. பெரிய மருதுவைத் தளபதியாகவும் சின்னமருதுவை அமைச்சராகவும்கொண்டு ஆட்சி நடத்தினார். 1790-ல் மகளின் இறப்பும் பின்னர், பேத்தியின் இறப்பும் நிலைகுலையச் செய்தது. 1796 டிசம்பர் 25-ல் நாச்சியாரும் மரணம் அடைந்தார்.

வேலூர், திருவண்ணாமலை நெடுஞ்சாலையில்... புதுப்பேட்டையில் உள்ள வேல்ஸ் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி, 1997-ம் ஆண்டு துவக்கப்பட்டது. டாக்டர். பிரகாசம் வைரம்மாள் அறக்கட்டளையின் கீழ், 2007-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கணினி வழிக் கல்வி, இந்தி, அபாகஸ், கராத்தே ஆகியன கற்றுத்தருவதோடு, மாணவர்கள் செஸ் விளையாட்டில் சிறந்து விளங்க,வேல்ஸ் இன்டர்நேஷனல் செஸ் அகாடமி மூலம் பயிற்றுவித்து, சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. 'சிறந்த கல்வி, ஒழுக்கம், உயர்வு ஆகியவையே எங்கள் குறிக்கோள்’ என்கிறார், பள்ளியின் தாளாளர் ஆதவன் பிரகாஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism