##~##

''அந்தப் பையனோட கையெழுத்தைக் கண்ணுல ஒத்திக்கலாம் சார். முத்து முத்தா இருக்கும்.''

''பொண்ணுங்கதான் ஒவ்வொரு வருடமும் பப்ளிக் எக்ஸாம்ல அதிகமான மார்க் வாங்குறாங்க. அதுக்கு அவங்க அச்சடிச்ச மாதிரி அழகா எழுதுறதும் ஒரு காரணம்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுபோன்ற பேச்சுக்களை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். 100 ஆண்கள், 100 பெண்கள் என்று கணக்கெடுத்து, அவர்களின் கையெழுத்தை ஆராய்ந்தால், அதில் அதிக அளவில் பெண்களே அழகாக எழுதுவது தெரியும். பெண்களால் மட்டும் எப்படி அழகாக எழுதமுடிகிறது?

பெண்கள் ஊசியில் நூல் கோர்ப்பது முதல் தூசி துடைப்பது வரை எந்த வேலையையும் பொறுமையுடனும், ரசனையுடனும் செய்வார்கள். அதனால் எழுதுவதிலும் அதேதன்மை வருகிறது. அதேசமயம் ஆண்களில் பலர் பொறுமையைக் கடைப்பிடித்து கையெழுத்தில் அசத்துபவர்களும் உண்டு. அப்படி ஒரு சிலரால் முடிகிற விஷயம், எல்லோராலும் முடியாதா என்ன? கொஞ்சம் கவனம், கொஞ்சம் ஆர்வம் அத்துடன் முயற்சியும் பயிற்சியும் இருந்தால், நீங்களும் அழகாக எழுதி அசத்தலாம்.

முத்தான கையெழுத்து

'இப்போதான் எல்லாமே கம்ப்யூட்டர்னு ஆகிப்போச்சே, கையெழுத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணுமா என்ன?’ என்று நினைக்கலாம். வருங்காலத்தில் பேனாவுக்கே வேலை இல்லாமல் போகலாம் என்றும் நினைக்கத் தோன்றும். ஆனால், நம்மைப் பல வகையில் உயர்த்த மற்றவர்களிடம் பெருமைப்படுத்தும் விஷயங்களில் ஒன்றாக நம் கையெழுத்து இருக்கும். மேலும், பள்ளியில் உங்கள் கையெழுத்து வெறும் மதிப்பெண் கொடுப்பது மட்டும் அல்ல. நம் வாழ்வோடும் அது சம்பந்தப்படுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்கையில் படிவத்தைச் சொந்த கையெழுத்தில் பூர்த்தி செய்யவும் எனப் பல்வேறு நிறுவனங்கள் கேட்கின்றன. ஆக, நம் ஆளுமையை வெளிப்படுத்தும் விஷயமாகவும் கையெழுத்து இருக்கும்.  

என்னிடம் பயின்ற மாணவன் சரணும் அவன் அப்பாவும் கடந்த மாதம் என் வீட்டுக்கு வந்தார்கள். ''சார், எட்டு மார்க் வாங்கின என் பையன் சரண் இன்னைக்கு 80 மார்க் வாங்குறான்னா, அது உங்களாலதான். அதான் நன்றி சொல்லிட்டுப் போகலாம்னு வந்தோம்'' என்றார்கள்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், சரண் கையெழுத்து அவ்வளவு மோசமாக இருந்தது. அதனால், யாரிடமும் சரியாகப் பேசாமல் ஒதுங்கியே இருப்பான். அவனுக்கு தினமும் ஒரு மணி நேரம் கையெழுத்துப் பயிற்சி கொடுத்தேன். இன்று நல்ல கையெழுத்துடன் முதல் மதிப்பெண் வாங்கி இருக்கிறான். அவனது பேச்சிலும் நிமிர்ந்து நின்ற விதத்திலும் தன்னம்பிக்கை மின்னியதைப் பார்க்க முடிந்தது.

சரணைப் போல் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிலர் இருக்கலாம். அவர்கள் எல்லாம் இன்றைய தன்னம்பிக்கை மிக்க புதிய சரண்களாக மாறலாம். உங்களை தன்னம்பிக்கைச் சரண்களாக மாற்ற நாங்கள் தயார். நீங்கள் தயாரா?

   (அடுத்த இதழ் முதல் அசத்துவோம்...)  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism