Published:Updated:

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

கே.கணேசன்

காப்பி அடிக்கலாம் வாங்க !

ஹாய் சுட்டீஸ்! சென்ற இதழில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வீர்தவல் காடேயின் வாழ்க்கையைக் காப்பி அடித்தோம். இந்த முறை எந்த நாட்டில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தனது போராட்ட முறையாக அகிம்சையைக் கடைப்பிடிக்க ஆரம்பித் தாரோ அந்த நாட்டில் பிறந்து, அவரது வழியிலேயே தனது இன விடுதலைக்காகப் போராடிய மாமனிதரைக் காப்பி அடிக்கலாம் வாங்க!  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ல்,  தென் ஆப்பிரிக் காவின் வெக்டர் வெர்சஸ் சிறைச்சாலைக்கு முன்னே பெரும் கூட்டம். தங்கள் இனத்தின் விடிவெள்ளி, போராளியை வரவேற்கத்தான் அத்தனைக் கூட்டம். அவர் வெளியே வரும்போது அவரைப் பேட்டி எடுக்கக் காத்திருக்கும் வெளிநாட்டுப் பத்திரிகை யாளர்கள் பலரும் அங்கே கூடி இருந்தனர்.

சிறைக் கதவுகள் திறந்தன. நெல்சன் மண்டேலா எனும் கறுப்புச் சூரியன் விடுதலை ஆனார்.  இவருடைய விடுதலையை உலகமே கவனித்துக் கொண்டிருந்தது. இருள் சூழ்ந்த கறுப்பின மக்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த சூரியன் அவர். தனது வாழ்நாளின் மூன்றில் ஒரு பகுதியை சிறைச்சாலைகளில் கழித்த அவரை, தங்களது தலைவனைப் பெருமையுடன் வரவேற்றார்கள் மக்கள்.

##~##

தென் ஆப்பிரிக்கா 1600-ஆம் ஆண்டுகளில் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அதற்குப் பிறகு, நூறு ஆண்டுகள் கழித்து ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு வந்தது. இதற்கெல்லாம் காரணம் தென் ஆப்பிரிக் காவில் தங்கமும் வைரமும் ஏராளமாகக் கிடைத்ததுதான். அதுவரை அங்கு வாழ்ந்து வந்த கறுப்பினத்தவர்களுக்கு இவற்றின் மதிப்புத் தெரியவில்லை. ஆங்கிலேயர்கள் அங்கு வாழ்ந்து வந்த பழங்குடிகளை அடிமைப் படுத்தியதுடன் அவர்களை வைத்தே தங்க, வைரச் சுரங்கங்களை அமைத்து, அதில் இருந்து பெருமளவில் தங்க, வைரங் களைச் சூறையாடினர்.

இந்தச் சமயத்தில் 1918 ஜூலை 18-ஆம் நாள், தென் ஆப்ரிக்காவின் ட்ரான்ஸ்கீய் நகரில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் தங்கள் இனத்தையே அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கப் போகிறது என்று அப்போது யாருக்கும் தெரியாது. குழந்தைக்கு ரோலிலாலா எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஆரம்பத்தில் பழங்குடி களுக்கான பள்ளியில் படித்துவந்த ரோலிலாலா சற்று பெரியவன் ஆனதும் பெரிய பள்ளிக் கூடத்தில் சேர்க்கப்பட்டான். அங்குதான் அவனுக்கு நெல்சன் என்று பெயரிடப்பட்டது. அவனது தந்தை தனது முன்னோர் ஒருவரின் பெயரான மண்டேலா என்பதையும் சேர்த்து நெல்சன் மண்டேலா என அழைத்தார்.

மண்டேலா தம் இனத்தவர்  வெள்ளையர்களால் எப்படி அடக்கி ஒடுக்கப்படுகின்றனர் என்பதைக் கவனித்ததுடன், பல சமயங்களில் தானே அவற்றை அனுபவிக்கவும் செய்தார்.

மண்டேலா வளர்ந்து பெரியவனானதும் மேல் படிப்புக்காக ஹீல்டு டவுன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு, அவரது ஆசிரியர் 'மாலாசோலா’தான் அவருக்கு ஒரு ஆதர்ச நாயகனாகத் திகழ்ந்தார். ஆங்கிலேயரைத் தலைமை ஆசிரியராகக் கொண்ட கல்லூரி அது. இருந்தாலும்... அங்கு ஆசிரியராகப் பணியாற்றிய மாலாசோலா, ஒரு பொழுதும் தன்னைப் பற்றி இழிவாக எண்ணாமல், தான் பெற்ற கல்வி மூலம் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய கம்பீரத்துடன்  இருந்தார். இதைக் கண்ட மண்டேலா தனது ஆசிரியரைப் பின்பற்றி, அவரைப்போல நன்றாகப் படிக்கவேண்டும் என்று முடிவு செய்தார். வெள்ளையர்கள் ஆடம்பர வசதியுடன் வாழ்வதும், மண்ணின் மைந்தர்களான கறுப்பு இனத்தவர் கழிப்பிட வசதி கூட இல்லாமல் வாழ்ந்த அவலம் அவரை மேலும் மேலும் சிந்திக்கத் தூண்டியது.  

நாட்கள் பல சென்றன. கறுப்பினத்தவர்கள் தமக்குள் உள்ள இனப் பிரிவால் எப்போதும்  சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். அதனால், முதலில் தங்களுக்குள் ஒற்றுமை ஏற்படவேண்டும்.  அப்போதுதான் தங்களது பொது எதிரியான வெள்ளையர் ஆதிக்கத்தை அழிக்க முடியும் என்பதை அவர் உணர்ந்தார். அந்தச் சமயத்தில்தான் வால்டர் சிசுலு என்பவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் மூலம்  மண்டேலா 'ஆப்ரிக்கன் தேசிய காங்கிரஸ்’ எனும் அமைப்பில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார்.  

அந்த இயக்கத்தினை வெள்ளையர்களே வழிநடத்தியதால், தம் இனத்தவருக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்பதால், 'ஆப்ரிக்கன் தேசிய இளைஞர் காங்கிரஸ்’ எனும் கிளை அமைப்பினைத் தொடங்கினார். அவரது அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடையத் தொடங்கியது. 'ஆப்ரிக்கா ஆப்ரிக்கர் களுக்கே’ என்ற கோஷத்துடன் அவர் மிகவும் தீவிரமாக இயங்கினார்.  

தென் ஆப்பிரிக்காவின் இனவெறி அரசு, அங்கு வாழ்ந்துவந்த இந்தியர்களையும் கறுப்பினத்தவர் களைப் போலவே அடக்கி ஒடுக்கி வந்தது. நிறவெறி அரசுக்கு எதிராக முன்பு காந்தியடிகள் ஆரம்பித்து வைத்த அகிம்சை முறையிலான போராட்டத்தினைப் பின்பற்றி இந்தியர்கள் எழுச்சியுடன் போராடினர். காந்தியடிகளின் புதுமையான போராட்டத்தைப் பற்றி ஏற்கனவே அறிந்து இருந்த மண்டேலா, தானும் காந்திய வழியில் போராட முடிவு செய்தார்.

அந்தச் சமயத்தில் அரசு நிறவெறியைத் தூண்டும்  வகையில் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து  மக்கள் போராடத் தொடங்கினர். இந்நிலையில் மண்டேலா வெளியில் இருந்தால், அது அரசுக்கு பெரும் இடையூறாக இருக்கும் என நினைத்த  நிறவெறி அரசு, அவரை 1962-ல் கைது செய்து வழக்குத் தொடுத்தது. 1964-ல் அவருக்கு 27 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அளித்து சிறையில் அடைத்தது. நீண்ட பல போராட்டங்களுக்குப் பின், உலகத்தின் பார்வை தென் ஆப்பிரிக்க அரசுக்கு எதிராகத் திரும்பியது. உலக நாடுகளால் தென் ஆப்பிரிக்கா தனிமைப்படுத்தப்பட்டது. அதன்     பின்னர், அரசு தனது நிறவெறிக் கொள்கையைக் கைவிட முடிவு செய்தது. அதுநாள் வரையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மண்டேலாவையும் விடுதலை செய்தது.  தென் ஆப்பிரிக்காவில் அமைதி ஏற்படுத்தியதற்காக மண்டேலாவுக்கும், தென் ஆப்பிரிக்க அதிபர் எஃப்.டபிள்யு.டி.கிளார்க்-குக்கும் 1993-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்  பட்டது. 1994-மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார். 1999-ல் பதவி விலகிய அவர், அதில் இருந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்.

மிகவும் அடக்கு முறை, கொடுஞ் சிறையிலேயே வாழ்நாளின் பெரும் பகுதியை கழித்த நேர்ந்த போதிலும் தளராத போராட்டக் குணத்தாலும், காந்தியடிகளின் சாத்வீகமான போராட்டத்தைப் பின்பற்றியதாலும், மிகவும் ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த நெல்சன் மண்டேலா ஆப்ரிக்க தேசத்துக்கே அதிபர் ஆனார்.

நாம் நெல்சன் மண்டேலாவிடமிருந்து தன் மக்களுக்காக இடைவிடாமல் போராடிய போராட்டக் குணத்தைக் காப்பி அடிக்கலாம் வாங்க!