Published:Updated:

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

எஸ்.ராஷாசெல்லம், ச.பா.முத்துக்குமார் வி.ராஷேஷ், செ.சிவபாலன்

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

எஸ்.ராஷாசெல்லம், ச.பா.முத்துக்குமார் வி.ராஷேஷ், செ.சிவபாலன்

Published:Updated:
##~##

''ங்களை அன்போடு வழிநடத்தும் விதத்தாலும், கலை வடிவில் பாடங்களைச் சொல்லித்தருவதாலும் தலைமை ஆசிரியரும், தமிழ் ஆசிரியருமான மைதிலி டீச்சரை மிகவும் பிடிக்கும்'' என்கிறார்கள் தர்மபுரி - பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி அரசு நடுநிலைப் பள்ளிச் சுட்டிகள்.

சிந்து: ''ஒரு காலத்தில் தெருக்கூத்துக் கலையில் சிறந்து விளங்கியதால், எங்கள் ஊருக்குக் கூத்தப்பாடி என்று பெயர். அந்த கூத்துக்கலை வடிவிலேயே மைதிலி டீச்சர் எங்களுக்குப் பாடங்களைக் கற்பிக்கிறார். செய்யுளைப் பாட்டாகவும், உரைநடையை நாடக வடிவிலும் நடத்துவதால் அப்படியே மனதில் பதிந்துவிடுகிறது.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவபெருமாள்: ''மைதிலி டீச்சர் கொடுத்த ஊக்கத்தால், நாங்கள் புது நபர்களிடம் கூச்சம் இல்லாமல் பேசுகிறோம். கிடைக்கும் எந்த மேடையையும் விட்டுவைக்காமல் பங்கேற்றுப் பரிசுகளை வாங்கிவருகிறோம்.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

பூவிழி: ''எங்களுக்குள் இருக்கிற திறமைகளைக் கண்டுபிடிச்சு, அதை மேம்படுத்தி ஊக்கம் தருவாங்க. தலைமை ஆசிரியரா இருந்தாலும்கூட அவங்க கோபப்படவே மாட்டாங்க. எல்லாரையும் அன்பாலேயே வழிநடத்துவாங்க.''

சூர்யா: ''எனக்குத் தமிழ் இலக்கணம் என்றால் கொஞ்சம் பயம். ஆனா, டீச்சர் சொல்லிக்கொடுத்த விதம், எனக்கு இலக்கணத்தின் மீது அதிகப் பிரியத்தை ஏற்படுத்தியது. இப்போது, கவிதை எழுதும் அளவுக்கு முன்னேறி இருக்கிறேன்.''

சத்யா: ''குழந்தைகளுக்குக் கதை என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், மைதிலி டீச்சர் பாடங்களை எல்லாம் கதையாகவே சொல்லித் தர்றாங்க. அதோடு, அந்தக் கதையின் முடிவில் ஏதாவது ஒரு நீதியையும் சொல்லி மனதில் பதிய வைப்பாங்க.''

விருதுநகர் மாவட்டம், பாலவந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி, மாரிச்செல்வி. அனைத்து ஆசிரியர்களின் விருப்பத்துக்கு உரியவர்.

ஐ.ரவிச்சந்திரன் (அறிவியல் ஆசிரியர்): ''மாரிச்செல்வியிடம் தலைமைப் பண்புகள் நிறையவே இருக்கு. ஆசிரியர் வரலைன்னாலும் வகுப்பைக் கட்டுப்படுத்தி அமைதியாக வைத்து இருப்பாள். எப்பவுமே சுறுசுறுப்பாக இருப்பாள். ஆசிரியர்களிடம் மரியாதையுடன் பழகுவாள்.'

மு.சிவகாமி (தமிழ் ஆசிரியை): ''கலை ஆர்வம் மிக்கவள். அவளே எழுதி நடித்த நாடகத்துக்காக மாவட்ட அளவில் பரிசு கிடைச்சிருக்கு. கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டின்னு எது நடந்தாலும், அதில் கலந்துகொண்டு பரிசு பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்ப்பாள்.'

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

ம.சாந்தி (ஆங்கில ஆசிரியை): 'எந்த வேலை கொடுத்தாலும் சொன்ன நேரத்தில் செய்துவிடுவாள்.  நேரத்தை எப்படிப் பயன்படுத்தணும்னு அவளிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லா மாணவர்களுக்கும் பிடித்த மாணவி. 'நாங்க மாரிச்செல்விகிட்ட படிச்சுக்கிறோம் டீச்சர்’னு அவங்களே சொல்லும் அளவுக்கு பொறுமையாகச் சொல்லித் தருவாள்.'

மு.பழனிக்குமார் (ஜே.ஆர்.சி. ஆசிரியர்): ''பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பில் மூன்று ஆண்டுகளாகச் செயல்படுகிறாள். அவள் தலைமையில் மூன்று விழிப்பு உணர்வுப் பேரணிகள் நடந்து இருக்கின்றன. இரண்டு முறை மாவட்ட அளவில் கேம்ப் போயிட்டு வந்திருக்கா. பள்ளியில் எந்த விழா நடந்தாலும், மாரிச்செல்வி தலைமையில்தான்  ஏற்பாடுகள் நடக்கும்.''

க.மல்லிகா (நெசவு ஆசிரியை): 'நெசவு வகுப்புக்கு ஒரு நாள்கூட வராம இருந்தது இல்லை. எதையாவது புதுசாக் கத்துக்கணும் என்கிற ஆர்வம் அவகிட்ட இருக்கு. 'அது எப்படி வந்தது, இது எப்படி சுத்துது?’னு ஆர்வமாக் கேள்வி கேட்பாள். எல்லா விஷயத்திலும் பொறுப்பாக இருப்பாள். பள்ளியையும் தன் வகுப்பையும் சுத்தமாக வைத்து இருப்பாள்.'

தி.சிவக்குமார் (தலைமை ஆசிரியர்): 'அவள் கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். சக மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பாள். எப்பவும் தன்னை ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக்கொண்டே இருப்பாள். அடுத்த வருடம் பத்தாம் வகுப்பில் மாரிச்செல்வி ஸ்டேட் ரேங்க் எடுப்பாள் என்று  எதிர்பார்க்கிறோம்.'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism