Published:Updated:

நீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா ?

டயட்டீஜியன் டாக்டர் தாரிணி கிருஷ்ணன் படங்கள் : வி.சிவக்குமார்

##~##

சுட்டிகளின் வயது ஏற ஏற, அவர்களுக்கான ஊட்டச் சத்துத் தேவையும் அதிகரிக்கும். பொதுவாக, 10 முதல் 15 வயது வரையிலான பருவத்தில்தான் உடல் வளர்ச்சி வேகமாக இருக்கும். இன்றைய சூழலில், சிறுமிகளிடம் 10 முதல் 13 வயது வரையிலும், சிறுவர்களிடம் 12 முதல் 15 வயது வரையிலும் உடல் மற்றும் மன அளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்தக் காலகட்டத்தில் புரதம், இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் நிறைந்த சமச்சீரான உணவு மிகவும் அவசியம்.

நீங்கள் இந்தப் பருவத்தைச் சேர்ந்த சுட்டிகள் எனில், உங்களுக்கு ஐம்பெரும் உணவுக் குழுக்களில் இருந்து நல்ல உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.

ஐம்பெரும் காப்பியங்கள் தெரியும். அது என்ன ஐம்பெரும் உணவுக் குழுக்கள்?

தானியங்கள்
பழங்கள்
காய்கறிகள்
பருப்பு, பயறுகள் மற்றும் இறைச்சி
பால் மற்றும் தயிர்
இவைதான் அந்த ஐம்பெரும் உணவுக் குழுக்கள்.

நீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா ?

சரி, இப்போது 10 முதல் 15 வயது வரையிலான சுட்டிகளுக்கு புரதம், இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துகளின் முக்கியத்துவத்தைத் தனித்தனியாகப் பார்ப்போம்.

புரதச் சத்து

உடல் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிகிறது.
தசைகளின் உறுதிக்கு உதவுகிறது.
தசைகள் இயங்குவதற்கு வலு சேர்க்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.

நம் உடலில் புரதச் சத்து குறைவாக இருந்தால், தசைகள் வலு இழந்துவிடும். ஊட்டமும் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும். உடல் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், உடல் எடையும் குறையும்.  நமது பண்புகளிலும் மாற்றங்கள் உண்டாகும்.

புரதம் மிகுந்தவை: பச்சைப் பருப்பு, துவரம் பருப்பு முதலான பருப்பு வகைகள்; கொண்டைக் கடலை, மொச்சை, பட்டாணி, சுண்டல் முதலானவை; பால் மற்றும் பாலில் இருந்து கிடைக்கும் உணவு வகைகள்; முட்டை மற்றும் அசைவ உணவுகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சி, மீன் மற்றும் இதர கடல் உணவுகளில் புரதச் சத்துகள் மிகுந்து உள்ளன.

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள்

எலும்புகளும் பற்களும் உறுதியடையச் செய்கின்றன.  
தசைகளை வலுப்பெற வைக்கிறது.
நரம்புகளின் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
எலும்புகளின் அடர்த்தியைக் கூட்டுகிறது.
வளர்சிதை மாற்றத்தில் பங்குவகிக்கிறது.

நீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா ?

நம் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் குறைபாடு இருந்தால், நம்முடைய எலும்புகள் உறுதியானவையாக இருக்காது. பற்கள் பலவீனமாக இருக்கும். நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளும் வெகுவாகப் பாதிக்கும்.

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் மிகுந்தவை: பால் பொருட்கள், பனீர், கேழ்வரகு, தானிய வகைகள் மற்றும் கீரை வகைகளில் இந்தச் சத்துகள் மிகுந்து உள்ளன.

இரும்புச் சத்து

ரத்தத்தில் ஆக்ஸிஜன் பயணிப்பதற்குத் துணைபுரிகிறது.
மூளை வளர்ச்சியில் முக்கியப் பங்குவகிக்கிறது.
ரத்தத்தில் ஊட்டச் சத்துகள் பயணிப்பதற்கு உதவுகிறது.

வளர் இளம் பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள சிறுமிகளுக்கு இரும்புச் சத்து குறைவாக இருந்தால், உடலில் சோர்வும் பலவீனமும் உண்டாகும். தோலில் பாதிப்பு ஏற்படும். இதயத் துடிப்பு வழக்கத்தைவிட அதிகரிக்கும். சரியாகப் பசி எடுக்காது.

இரும்புச் சத்து மிகுந்தவை: அரிசித் தவிடு, மொச்சை, கீரை வகைகள், உடைத்த கடலை, பேரீச்சை, திராட்சை போன்ற உலர் பழங்கள் மற்றும் இறைச்சி.  

இந்தச் சத்துகள் மிகுந்த சமச்சீரான உணவு முறையைக் கடைப்பிடித்து வந்தால், உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் மேம்படுவது உறுதி. 

அடுத்த கட்டுரைக்கு