Published:Updated:

அவதார் - மருத்துவமனையில் மழலைப் பட்டாளம் !

கே.ஆர்.ராஜமாணிக்கம்படங்கள் : க. தனசேகரன் ,ஒருங்கிணைப்பு: ப. பிரகாஷ்

##~##

தேசத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகளாக வேஷம் அணிந்து, அவர்களின் நினைவுகளை நம் நெஞ்சில் நிறைத்த மாணவ, மாணவிகள்... இந்த இதழ் முதல் தொழில் சார்ந்த நிபுணர்களாக புதிய அவதாரம் எடுக்கிறார்கள்...

''வெல்கம் டாக்டர்ஸ்'' என்று புன்னகைப் பூக்கள் தூவி வரவேற்றார்கள்... திருச்செங்கோடு, எளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மெடிக்கல் கேர் ஹாஸ்பிட்டலின் தலைமை மருத்துவர்களான அர்த்தநாரீஸ்வரன் மற்றும் ராகநிதி அர்த்தநாரீஸ்வரன் ஆகியோர்.

'தேங்க் யூ சார்...’ உடன் வரிசை கட்டிய 50 லிட்டில் டாக்டர்களைக் கண்ட மருத்துவமனையின் டியூட்டி டாக்டர்களும் நர்ஸ்களும் ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டு, அவர்களுக்குள் கமென்ட் அடித்துக்கொண்டு நகர்ந்தனர். பேஷன்ட்டுகள் முகங்களிலும் சந்தோஷம் குடிகொண்டது.

''நீங்க எல்லாம் யாரு?'' என்று டாக்டர் கேட்டதற்கு, ''நீங்க எல்லாம் படிச்சுப் பட்டம் வாங்கி, டாக்டர் ஆனவங்க. நாங்க, படிக்காமலே டாக்டர் ஆனவங்க'' என்றான் ஆறாம் வகுப்பு டாக்டர் சரண்யன். ''அப்போ, போலி டாக்டர்களா..?'' என்றதற்கு, ''இல்லை சார், ஆக்டிங் டாக்டர்ஸ்'' என்றான். ''ஓ.கே. சொன்ன டாக்டர் எஸ்.கே.ராஜ்குமார், அனைவரையும் ஒரு ஹாலில் அமரவைத்தார். குட்டி டாக்டர்களுக்கு களைப்பு தீர ஹெல்த் டிரிங்ஸ் கொடுக்கப்பட்டது.

''ஆமா, இந்த ஸ்டெதஸ்கோப் யாரு வாங்கிக் கொடுத்தது?''

''பேரன்ட்ஸ்'' என்றார்கள் கோரஸாக.

அவதார் - மருத்துவமனையில் மழலைப் பட்டாளம் !

''இதோட யூஸ் என்னன்னு தெரியுமா?''

''இத நெஞ்சுல வெச்சுப்பார்த்தா, 'டப் டப்’னு கேக்கும் சார்'' என்றார் நான்காம் வகுப்பு டாக்டர் ப்ரீத்திஸ்ரீ. ''சார், இவனுக்கு பாட்டு கேக்குமாம் சார்'' என்று ஒரு மூன்றாம் வகுப்பு டாக்டர், நான்காம் வகுப்பு டாக்டரை வம்புக்கு இழுக்க, அந்த இடமே சிரிப்பால் அதிர்ந்தது.

''இதயத்தில் இருந்து வரும் ஒலிதான் 'லப்-டப்’. ஒரு நிமிடத்துக்கு 72 முதல் 100 வரை இதயம் துடிக்கும். அந்த ஒலியைக் கேட்கலாம்'' என்றார் டாக்டர்.

அவதார் - மருத்துவமனையில் மழலைப் பட்டாளம் !

''நம்ம உடம்பில் முக்கியமானது மூளையா, இதயமா சார்?''- ஆறாம் வகுப்பு டாக்டர் பரத் கேட்க,  ''மூளை, இதயம், ரெண்டும் முக்கியமானதுதான். இவை மட்டும் இல்லாமல் ஈரல், கணையம், போன்ற பல உறுப்புகள் இருக்கின்றன. மூளைதான் நம்ம உடலின் கேப்டன். அதுதான் எந்த இடத்தில் என்ன பிரச்னை என்றாலும் அதைச் சரிசெய்வதற்கான உடனடி நடவடிக்கையை மற்ற உறுப்புகளுக்குக் கட்டளையாக இடும்'' என்றார் பெரிய டாக்டர்.

அவதார் - மருத்துவமனையில் மழலைப் பட்டாளம் !

''நோய் எதனால் வருது சார்?''  ''உடம்பு சரி இல்லேன்னா ப்ளட் டெஸ்ட் எடுக்கிறாங்களே ஏன் சார்?'என்று கேள்விக்கணைகளை அடுத்தடுத்துத் தொடுத்தார் ஆறாம் வகுப்பு டாக்டர் ப்ரணவ்.

''சுகாதாரம் இன்மையால் நோய் வரலாம். பாக்டீரியாவால் பரவலாம். எதிர்ப்பு சக்தி குறைவினால் வரலாம். சில நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கும் சில, பரம்பரையாகவும் வரலாம். நமது ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன், தாதுக்கள், பொட்டாசியம் போன்றவை சரியான விகிதத்தில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.  சர்க்கரை, உப்பு இதெல்லாம் முக்கியமாக் கணக்கிடணும்'' என்று விளக்கியவரிடம், ''சர்க்கரை, உப்பு எல்லாம் இருக்கிற மாதிரி புளி, காரம் எல்லாம் இருக்குமா சார்?'' என்றான் ஜாலியாக. ''ஆமாம். புளிப்பு, காரம், துவர்ப்பு எல்லாம் உண்டு'' என்றார் டாக்டர்.

''நம்ம மூளையின் உணவு என்ன தெரியுமா?'' என்று டாக்டர் கேட்டதற்கு, 'தெரியலை சார்’ என்று எல்லோரும் கைகளை விரிக்க, ''ஆக்ஸிஜன்'' என்று சொல்லிவிட்டு, நாம் சாப்பிடும் உணவு குளுக்கோஸாக மாற்றப்பட்டு, பிறகு அந்த குளுக்கோஸ் சக்தியாக மாற்றப்படும்'' என்றார் டாக்டர் நடராஜ்.

அவதார் - மருத்துவமனையில் மழலைப் பட்டாளம் !

''இட்லி சாப்பிட்டா என்ன கிடைக்கும்?'' என்ற டாக்டரின் கேள்விக்கு, ''ஐஸ்க்ரீம் கிடைக்கும் சார்'' என்றான், ஆறாம் வகுப்பு டாக்டர் முகேஷ்வரன்.

எல்லோரும் புரியாமல் யோசிக்கவே... ''எங்க வீட்ல இட்லி திங்கச் சொல்லி கட்டாயப்படுத்துவாங்க. நான் இட்லி தின்னேன்னா எனக்கு ஐஸ்கிரீம் கிடைக்கும் சார்!'' என்றதும் எல்லோரும் 'ஓ...’ என்று குரல் எழுப்பினர்.

அவதார் - மருத்துவமனையில் மழலைப் பட்டாளம் !

அப்போது பல் மருத்துவர் நிவேதிகா வர, அவரிடம் பல் ஏன் வெள்ளையா இருக்கு என்ற கேள்விக்கு, ஒரே நேரத்தில் இரண்டு பதில்கள் வந்தன. டாக்டர் 'நேச்சர்’ என்றார். 6-ம் வகுப்பு ஹரிணிஸ்ரீ டாக்டரோ... ''பல்லை விளக்கினா, வெள்ளையா இருக்கும்'' என்றதும் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.

''ஒரு நாளைக்கு எத்தனை சாக்லேட் சாப்பிடலாம் டாக்டர்?'' என்ற சரண்யனுக்கு, ''சாக்லேட் போன்ற ஒட்டும் இனிப்புகளை எவ்வளவு குறைச்சுக்கிறோமோ, அவ்வளவு நல்லது'' என்றார்.

''சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மாரடைப்பு வந்தால், வலி தெரியாதாமே சார்?'' என்ற கேள்விக்கு, ''ஆமாம்'' என்ற டாக்டர் ராஜ்குமார், ''இந்தக் கேள்வி கேட்ட லிட்டில் டாக்டரை கைதட்டிப் பாராட்டுங்க, சூப்பர் கேள்வி'' என்றவர், ''பாடச் சுமையில் இருந்து விடுபட்டு மாலையில் விளையாட வேண்டும். உடல் ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் வருவதைத் தவிர்க்க முடியாது'' என்று அட்வைஸ் கொடுத்தார்.  

''நம்ம மூச்சு விடலைனா என்ன ஆகும் சார்?''

''கொஞ்ச நேரம் மூச்சை விடாம இருந்துபாரு தெரியும். விடலைனா... மேல போயிருவோம்'' என்றதும் அனைவரும் சிரித்தனர்.

''நாங்க டாக்டர் ஆகணும்னா, எவ்வளோ படிக்கணும் சார்?'' என்றார் மூன்றாம் வகுப்பு டாக்டர் கவி பிரியங்கா.

''பத்து, பனிரெண்டு கிலோ படிக்கணும். அதாவது ஹையர் கிளாஸ், முடிச்சு அப்புறம் சயின்ஸ் சப்ஜெக்ட் எடுத்துப் படிக்கணும். அப்புறம், நீங்க விரும்பும் டாக்டர் படிப்பைப் படிக்கணும்'' என்றார் டாக்டர் நடராஜ்.

''எத்தனை பேர் டாக்டர் ஆகப்போறீங்க?'' என்றதும், எல்லோரும் கை உயர்த்தினார்கள்.

''சார், நாங்க இப்பவே பாதி டாக்டர் ஆகிட்டோம்'' என்றார் நான்காம் வகுப்பு டாக்டர் கௌதமன். அதற்கு, ''பாதி டாக்டர் எலிஜிபிள் இல்லை. அதனால், நல்லாப் படிச்சு முழு டாக்டராக எங்களோட வாழ்த்துகள்'' என்றனர் டாக்டர்கள் இன்முகத்துடன்.

'டாக்டர் ஆவோம்’ என்ற கனவுடன் அவதாரம் எடுத்து இருந்த திருச்செங்கோடு, சக்கராம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ வித்யபாரதி பள்ளி மாணவ, மாணவிகள், டாக்டர்களுக்கு நன்றி கூறிப் புறப்பட்டனர் மகிழ்ச்சியுடன்.

நாமக்கல் மாவட்டம், சக்கராம்பாளையத்தில் உள்ள ஸ்ரீவித்யபாரதி இன்டர்நேஷனல் பள்ளி, தலைவர் அரிமா வி.சுப்பிரமணியம் மற்றும் தாளாளர் சுதா ராஜேந்திரன் ஆகியோரால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. சான்றாக 2011-ல் பொதுத்தேர்வில், மாநில அளவில் நான்காம் இடமும் மாவட்ட அளவில் மூன்றாம் இடமும் வந்தது. ''கல்வியோடு ஒழுக்கமும் குழுத் திறன், மேடைப்பேச்சு, நன்னடத்தையும் மிக்கவர்களாக உருவாக்குவதே எங்களின் நோக்கம்' என்கிறார், இப்பள்ளியின் முதல்வர் சு.வ.ஷீபாசுந்தர்.