##~##

''கோபி ஒரு உணர்ச்சிப் பிழம்புடா.மதியம் லஞ்ச் ஆறிப்போய் இருந்தா கவலையேபட வேணாம். கோபி தலை மேலே வெச்சாப்போதும் சூடாயிடும்'' என்று அவினேஷ் சொல்ல, நண்பர்கள் எல்லோரும் சிரித்தார்கள்.

ஒவ்வொரு பள்ளியிலும் இப்படிப்பட்ட உணர்ச்சிப் பிழம்புகள் சிலர் இருப்பார்கள். உணர்ச்சியின் அளவைக் குறைத்து, அறிவின் அளவைக் கூட்டுவதற்குப் பெயர்தான், உணர்வெழுச்சி நுண்ணறிவு (எமோஷனல் இன்டெலிஜென்ஸ்). இதைக் கூட்டிக்கொள்ள சில சுலபமான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலத்தைத் தாண்டிப் பாருங்கள்:

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

ஒரு செயலைச் செய்யும்போது, நாம் நமது உணர்ச்சிகளால் அதிகாரம் செய்யப்படுகிறோம். உங்களுக்குக் கோபம் வரும் சந்தர்ப்பத்தில், உங்களுக்கு நீங்களே ஒன்றைச் சொல்லிக்கொள்ளுங்கள். 'இப்போது என்னுடைய தன்மையான குணத்தை இழந்துவிட்டால் நாளைக்கு எப்படி உணர்வேன்?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். நாளையோ, அடுத்த வாரமோ இந்தக் காரியத்தைப் பற்றி நினைக்கும்போது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். உங்கள் கோபம், பொங்கும் பாலில் தண்ணீர்விட்டதுபோல அடங்கிவிடும்.

உங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்:

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது என்பது, அந்த உணர்ச்சியே இல்லை என்று பாசாங்கு செய்வது ஆகாது. பொறாமையாக, கோபமாக, வருத்தமாக, கசப்பாக, பேராசையாக நீங்கள் உணரும்போது, அந்த உணர்ச்சியைத் தெளிவாக உணர்ந்துகொள்ளுங்கள். 'இது சரியில்லை.  நான் அவனைப் பார்த்துப் பொறாமைப்படுகிறேன்’ என்று நீங்கள் சொல்லிக்கொள்ளும்போது, உங்கள் தவறை நீங்கள் உணர்ந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். தவறை உணர்ந்துவிட்டாலே அதைச் சரி செய்துகொள்வது சுலபம்.

மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள்; வேறு ஏதேனும் வேலையைச் செய்யுங்கள்:

உணர்ச்சி என்பது புயல் மாதிரி... வந்தால், அடித்துவிட்டுத்தான் ஓயும் என்று நம்மில் பலரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இயற்கைப் புயலைத்தான் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. உணர்ச்சிப் புயலை அதிகம் சேதாரம் இல்லாத படிமாதிரியாக நம்மால் மடை திருப்ப முடியும். அப்படி உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவது ஆரோக்கியம், உணர்வெழுச்சி நுண்ணறிவு, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு வழிகோலும்.

உங்கள் மனநிலை கடுமையான உணர்வுகளுக்கு இலக்காகும்போது உடனடியாக வேறு ஒரு வேலையில் ஈடுபடுங்கள். கொஞ்ச தூரம் வாக்கிங் போய்ப்பாருங்கள். உங்கள் மனது மாறும்.

'எனக்கு இப்போது போர் அடிக்கிறது இதைப்போல ஏற்கெனவே நடந்து இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் சரியாகிவிட்டது. இப்போதும் என் மனநிலை மாறப்போகிறது’ என்று கண்ணை மூடிச் சொல்லுங்கள். இது கெட்ட 'மூடை’ சமநிலைப்படுத்தும். உற்சாகம் வரும்.

பிறர் தங்கள் உணர்ச்சிகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்று கவனியுங்கள்:

நம்மைச் சுற்றிச் சரியானவர்கள் இருந்தால், அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ள முடியும். 'இத்தனை மாணவர்கள் சத்தம் போட்டுக்கொண்டு இருக்கும்போது, உங்களால் எப்படிக் கோபப்படாமல் பொறுமையாக இருக்க முடிகிறது' என்று உங்களுக்குப் பிடித்த ஆசிரியரிடம் கேட்டு, அதை வாழ்வில் நடைமுறைப்படுத்தினால், உங்கள் மொத்த வாழ்க்கையும் மாறும் வாய்ப்பு இருக்கிறது.

உடல் செயல்பாட்டை மாற்றுங்கள்:

உணர்ச்சிகள் எல்லாம் தலையில் இருக்கிறது என்பது பெரும்பாலான வர்களின் கருத்து. உடலின் பிற பகுதிகளுக்கும் உணர்ச்சிகளுக்கும்கூடத் தொடர்பு உண்டு. கோபம் இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. அதிக அளவிலான வருத்தம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக்கூட அடக்கிவைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

எனவே, உடலியல் மாறுபாட்டைக் கையாளும் விதத்தாலும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைக்கலாம். நாம் விடும் மூச்சுக் காற்றாலேயே உடலியலில் சிறிய மாறுதல்களைக் கொண்டுவரலாம்.  கோபப்படும்போது, நாம் படபடப்புடன் மூச்சுவிடுவதை உணர முடியும். கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஐந்து விநாடிகளுக்கு மூச்சுவிடுவதை நிறுத்துங்கள். பிறகு நீண்ட மூச்சை உள்ளே இழுத்துவிடுங்கள். உங்கள் சுவாசம் நிதானமாக இருக்கட்டும். பிறகு உள்ளே இழுத்ததைவிடவும் மெதுவாக சுவாசத்தை வெளியேற்றுங்கள். அப்படி மூச்சை வெளியேற்றும்போது உங்கள் மனதில் நிம்மதி பரவுவதாகக் கற்பனை செய்யுங்கள்.

புத்தியைப் பயன்படுத்துவோம்:

உணர்ச்சி என்பது எவ்வளவு உறுதியானதோ, அதே அளவு முட்டாள்தனமானதும் ஆகும். சரியான நேரத்தில் சரியான உணர்ச்சி ஏற்பட்டால், அது நம்மை நல்ல விஷயங்களை நோக்கி வழிநடத்தும். நமக்கு உந்து சக்தியாக இருக்கும்.

அதே சமயம் தவறான நேரத்தில் தவறான உணர்ச்சிக்கு இடம் கொடுத்தோமானால், எந்த அளவுக்கு உணர்ச்சிவசப்படுகிறோமோ, அந்த அளவுக்குக் குளறுபடிகளைச் செய்வோம். உணர்ச்சிவசப்பட ஆரம்பிக்கும்போது உங்கள் மூளையின் சிந்திக்கும் பகுதியை வேலை செய்யவிட்டால், உணர்ச்சியின் வேகம் மந்தப்படும். இதைச் செய்ய ஒரு சுலபமான வழி, அந்த நேரத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஆளை அல்லது விஷயத்தை மனக்கண்ணில் கொண்டுவரலாம். அல்லது, ஒன்றில் இருந்து 100 வரைக்கும் எண்ணலாம்.

அமீபாவில் இருந்து நீலத் திமிங்கிலம் வரை எல்லா உயிர்களுக்கும் தேவைகள் இருக்கும். மனிதர்களாகிய நமக்கும் அப்படித்தான். அந்தத் தேவைகள் நிறைவேறாதபோது உணர்ச்சி வசப்படுகிறோம். சில அடிப்படைத் தேவைகள் உண்டு. உணவு, உறக்கம், தங்கும் இடம், தண்ணீர் போன்றவை அவற்றுள் சில. இந்தத் தேவைகள் நிறைவேறாமல்போனால் உணர்ச்சியின் பிடியில் நாம் சிக்கிக்கொள்ள நேரும்.

உணர்ச்சி அடிப்படையில் ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கீழ்க் கண்ட தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பாதுகாப்பாக உணர்வது, நட்புகள் உறவுகளோடு இருப்பது, ஒரு பெரிய சமூகத்தின் அங்கமாக நம்மை உணர்வது போன்றவையே அவை. எனவே, நண்பர்களோடு கிடைத்து இருக்கும் நட்பை அனுபவியுங்கள்.

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறாமல்போனால், வாழ்க்கையை அர்த்தம் இல்லாததாக உணர்வோம். எனவே, நமக்கென்று ஒரு நல்ல நிலை தேவை. அதற்கு அவசியமானது இப்போதைக்குப் படிப்பு. ஸோ, என்ஜாய் யுவர் ஸ்டடீஸ்!

                              (கற்போம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism