குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்
##~## |
''எங்களோட ஆல் டைம் ஃபேவரைட், மலர்க்கொடி டீச்சர்தான்'' என்று கொண்டாடுகிறார்கள், விருதுநகர் - எந்தபுலி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சுட்டிகள்...
அனுஷியா: 'எங்க மலர்க்கொடி டீச்சர், வகுப்புல பாடம் நடத்தும்போது, பாடத்தைத் தாண்டி நிறையப் பொதுவான தகவல்கள் சொல்லுவாங்க. சரியா ஹோம் வொர்க் செய்து வர்றவங்களுக்கு சாக்லேட் தருவாங்க. அதனாலயே நான் எப்படியாவது வீட்டுப் பாடத்தைப் பண்ணிட்டு வந்துருவேன்.'
சூர்யா: 'தினமும் தொடங்கும் நாள், நல்ல முறையில் முடியணும்னு கடவுள் பாடலை எங்க டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்க. காலையில அவங்க வகுப்புக்கு வந்ததும் அந்தப் பாடலைத்தான் பாடுவோம். தொடர்ந்து ஒரு மாதம் லீவ் போடாம வந்தா, பேனா, பென்சில்னு ஏதாவது பரிசு தந்து அசத்துவாங்க. அப்படி பத்து மாதத்துக்கு நான் டீச்சர்கிட்ட இருந்து பரிசு வாங்கி இருக்கேன்.'

அருண்: 'மலர்க்கொடி டீச்சர் எனக்கு நல்ல ஃப்ரெண்டு. முன்னாடி எல்லாம் எனக்கு கணக்குப் பாடம்தான் சரியா வராது. இவங்க ஊக்கம் கொடுத்ததனால, இப்ப நல்லா கணக்குப் போடுறேன். பாடத்துல என்ன சந்தேகம் கேட்டாலும் உடனே சொல்லித்தருவாங்க. எங்க வீடு குக்கிராமத்துல இருக்கு. வீட்டுக்குப் போனா ஹோம் வொர்க் செய்ய முடியாதுனு கிளாஸ்லயே முடிக்கச் சொல்லிருவாங்க.'
அனு ப்ரியா: 'எனக்கு மலர்க்கொடி டீச்சர்னா ரொம்பப் பிடிக்கும். என்னோட ஸ்கூல் யூனிஃபார்ம் ரொம்பக் கிழிஞ்சு இருந்தப்போ, அதைப் பார்த்துட்டு எனக்கு புது யூனிஃபார்ம் எடுத்துக் கொடுத்தாங்க. பாடம் நடத்தும்போது ரொம்ப ஜாலியா நடத்துவாங்க. எத்தனை முறை சந்தேகம் இருந்தாலும் சலிக்காம சொல்லித் தருவாங்க. செடியில இருந்து பூக்களைப் பறிச்சா, டீச்சருக்குப் பிடிக்காது. 'பூ செடியிலே சிரிக்கட்டுமே’னு சொல்வாங்க.'
ஹரிஹரன்: 'எனக்கு ஒரு காது கேட்காது. டீச்சர்தான் எனக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. நான் நல்ல டிராயிங் பண்ணுவேன். டீச்சர் எனக்கு நிறைய வரையச் சொல்லி ஊக்கப்படுத்தினாங்க. கிளாஸ்ல எல்லாரையும் தினமும் அம்மா கொடுக்கும் காசுல கொஞ்சம் சேமிக்க சொல்வாங்க. அப்படி சேமிச்சு நான் நிறைய வெச்சுருக்கேன்.'
- ச.பா.முத்துகுமார் படங்கள்: செ.சிவபாலன்
காரைக்கால் - நெடுங்காட்டில் இருக்கிறது, ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி. இதில், எல்லா மாணவர்களுக்கும் நண்பன், அனைத்து ஆசிரியர்களுக்கும் செல்லப் பிள்ளை... மதன். இந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனிடம் அப்படி என்ன ஸ்பெஷல்?
நிர்மலா (தமிழ் ஆசிரியை): ''பள்ளியில் நாடகம், பாட்டு என எந்தப் போட்டியாக இருந்தாலும் முதலில் பெயர் கொடுக்கும் மாணவன் மதன்தான். வில்லுப் பாட்டுப் பாடுவதில் வல்லவன். ஒரு முறை நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பெண் குரலில் பாடியதைக் கேட்டு வியந்துட்டேன்.''
முருகன் (ஆங்கில ஆசிரியர்): ''என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., எனப் பொது விஷயங்களில் அதிக ஈடுபாடுகொண்டவன். நண்பர்கள் வட்டத்தில் யாருக்குப் பிறந்த நாள் என்றாலும், அவங்களுக்கு மரக்கன்று கொடுப்பது மதனின் ஸ்பெஷல். இதை இப்போது மற்ற மாணவர்களும் பின்பற்றுகிறார்கள். வகுப்பில் மாணவர்களை ஒன்றுசேர்த்து ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி பெறும் சூழலையும் மதன் உருவாக்கி இருக்கான்.''

அல்லி (துணைத் தலைமை ஆசிரியை): ''குடியரசு தினம், சுதந்திர தினம் எனப் பள்ளியின் அனைத்து விழாக்களிலும் மதனின் ஈடுபாடும், ஆர்வமும் ஒரு வாரத்துக்கு முன்பே ஆரம்பம் ஆகிவிடும். நிகழ்ச்சியிகளைத் திட்டமிட்டுச் செய்வதில் கெட்டிக்காரன். மொத்தத்தில், பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் நல்ல மாணவன்.''
தியாகராஜன் (அறிவியல் ஆசிரியர்): ''வகுப்பில் பாடம் நடத்தும்போது, ஏன்... எதற்கு... எப்படி? என்று கேட்டுப் புரிந்து படிப்பான். அறிவியல் செயல்முறை வகுப்பில் ரொம்ப ஆர்வமாகச் செயல்படுவான். சமீபத்தில், 'டெங்கு’ விழிப்பு உணர்வுப் பேரணியில் மதன் செயல்பாடுகளைக் கவனித்த மருத்துவர்களே 'சமூக அக்கறை உடைய மாணவன்’ என்று அவனைப் பாராட்டினார்கள்.''
சம்பந்தம் (சமூக அறிவியல் ஆசிரியர்): ''மதன் அமைதியான அருமையான மாணவன். சமுதாய அக்கறை உடையவன். எல்லா மாணவர்களுக்கும் கொடுத்து உதவும் பண்பு கொண்டவன். அவனுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. எப்போதுமே ஆக்டிவா இருப்பான். மற்ற மாணவர்களுக்கு எதும் பிரச்னை என்றால் தன் பிரச்னை போல் எடுத்துக்கொண்டு உதவுவான்.''
- மா.நந்தினி படங்கள்: செ.சிவபாலன்