Published:Updated:

எங்கே அம்பு எய்வது ?

கோ.ரமேஷ், படங்கள் : கே.குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

கஷ்டப்பட்டுப் படித்து சுமாரான மதிப்பெண் வாங்குவார்கள் சிலர். '24 மணி நேரமும் படிப்பது கிடையாது. டி.வி. பார்ப்பேன், விளையாடுவேன்' என்று சொல்லி, மாநில அளவில் மதிப்பெண் எடுப்பார்கள் சிலர். அது எப்படி?

இங்கேதான் குறிக்கோளை நிர்ணயித்துக்கொள்ளும் விஷயம் வருகிறது. நாம் எதைச் சாதிக்க விரும்புகிறோம் என்று முடிவுசெய்ததும், அதைச் சாதிக்க எதில் கவனத்தைக் கூர்மைப்படுத்த வேண்டும், எந்தத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் யோசிக்கிறோம். இதனால், சாதிக்க வேண்டும் என்கிற உந்துசக்தி, தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கிறது.

இந்தக் குறிக்கோள் நிர்ணயம் என்பது பள்ளிக் காலம் முழுக்கத் தொடரப்பட வேண்டிய ஒன்று. இது எப்போதும் நேர்மறையாகவே இருக்க வேண்டும். 'அதிகமான எழுத்துப் பிழைகள் விடக் கூடாது’ என்று இலக்கை வகுத்துக்கொள்வதை விட்டுவிட்டு, 'செம்மையாக எழுதுவேன்’ என்று தீர்மானம் எடுக்க வேண்டும். 'பக்காவாக இருக்க வேண்டும். இந்தத் தேதியில், இந்த நேரத்துக்குள், இந்த வழியில் இதை முடிப்பேன்’ என்று தீர்மானித்தால், அந்தத் தேதிகளில் அவற்றை முடிக்க வேண்டும்.

எங்கே அம்பு எய்வது ?

நமக்கு நிறைய இலக்குகள் இருக்கலாம். அவற்றில் எதற்கு முன்னுரிமை என்று பார்க்க வேண்டும். இதனால், எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என்று புரியும். இலக்குகளை ஒரு தாளிலோ, டைரியிலோ எழுதிவைத்துக்கொண்டால், கண்ணில் படும்போது எல்லாம் உத்வேகம் பிறக்கும். உடனடி இலக்குகள் சிறியவையாக இருக்கட்டும். நம்மால் எட்ட முடிந்த இலக்குகளையே நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நிர்ணயித்துக்கொண்ட இலக்கை அடைவதில் தொடர்ந்து தோல்வி ஏற்பட்டால், இலக்கைக் கொஞ்சம் சுருக்கிக்கொள்ளலாம். அல்லது தோல்விக்கான காரணத்தை அலசி ஆராய்ந்து தேவையான நடவடிக்கையை எடுக்கலாம்.

இலக்கை நிர்ணயித்துக்கொள்வது உங்கள் அறிவுத் திறனில் கவனத்தைச் செலுத்தி, உங்கள் நேரத்தையும் பலத்தையும் ஒழுங்கமைத்துக்கொள்ள உதவுகிறது. படிப்பு, மதிப்பெண் என்று மட்டும் இல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் எதைச் சாதிக்க நினைக்கிறீர்கள் என்று மனதுக்குள் ஒரு பெரிய படத்தை உருவாக்க வேண்டும்.

பிறகு அந்தப் பெரிய படத்தை, அதாவது கனவை... சிறிய, மிகச் சிறிய இலக்குகளாக உடையுங்கள். இந்தச் சின்னச் சின்ன இலக்குகளை எட்டிவிட்டால், குறித்துக்கொண்ட காலத்துக்குள் பெரிய கனவு நிறைவேறி இருக்கும்.

எங்கே அம்பு எய்வது ?

இப்போது நீங்கள் மாணவர்கள். உங்கள் கனவு முழுக்க 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வுகளில் எப்படி அதிக மதிப்பெண் வாங்குவது, கல்லூரியில் சிரமம் இல்லாமல் இடம் பிடிப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் இருக்கும். குறிக்கோள் நிர்ணயம் என்பதை சிறப்பாகச் செய்தால், வாழ்நாள் முழுக்கவே பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும். படிப்பைத் தவிர, வேறு என்னென்ன குறிக்கோள்களை நிர்ணயம் செய்யலாம்?

வேலைவாய்ப்பு: என்னவாக ஆகப்போகிறீர்கள் என்கிற குறிக்கோள். அதாவது, எந்தத் துறையில் பணியாற்ற விரும்புகிறீர்கள், அல்லது என்ன தொழில் செய்யப்போகிறீர்கள் போன்ற திட்டங்கள்.

பொருளாதாரம்: எந்த வயதில் எவ்வளவு ரூபாய் சம்பாதித்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அதை எப்படி சாதிக்கப்போகிறீர்கள்? இதற்கும் உங்கள் வேலைவாய்ப்புக் குறிக்கோளுக்கும் என்ன தொடர்பு?

எங்கே அம்பு எய்வது ?

கல்வி: ஏதாவது குறிப்பிட்ட துறையில் அறிவு பெற விரும்புகிறீர்களா? அதற்கான படிப்பு என்ன? பள்ளிக் கல்வி தவிர வெளியில் ஏதேனும் படிக்க வேண்டுமா?

கலைத்துறை: நீங்கள் பாடல், ஓவியம், நடனம், தற்காப்புக் கலை போன்ற துறைகளில் ஏதேனும் சாதிக்க விரும்புகிறீர்களா?

மனப்பாங்கு: உங்கள் இலக்குகளை அடையும் முயற்சியில் உங்களது மனப்பாங்கும் செயல்பாடுகளும் தடையாக இருக்கிறதா என்பதையும் அவ்வப்போது கவனிக்க வேண்டும். உதாரணத்துக்கு, நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக இருந்தால், நினைத்தபடி செயல்பட முடியாது. இன்றைய தேதிக்கு இந்த அளவு படிக்க வேண்டும் என்று தீர்மானித்து இருப்பீர்கள். ஏதோ காரணத்துக்காக உங்களுக்குக் கோபமோ, வருத்தமோ வந்துவிட்டால், படிப்பது தடைப்படும். அப்படி நடந்தால், உங்கள் மனோபாவத்தைச் சீரமைத்துக்கொள்ள வேண்டும்.

உடலியல் ரீதியாக: ஏதேனும் குறிப்பிட்ட விளையாட்டில் பெரிய அளவில் சாதிக்க விரும்புகிறீர்களா? அல்லது வயதான காலத்திலும் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் அந்த இலக்கை எட்டுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

பொதுநலம்: நாம் வாழும் இந்த உலகத்தை இன்னும் சிறப்பாக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்றும் நமக்குத் தோன்றும். வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் எல்லாம் இப்படி சிந்தித்தவர்கள்தான். நாமும் அப்படி வாழ்வதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

இதுபோன்ற விஷயங்களை சிந்திக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு மேலே சொன்னவற்றில் உங்களுக்குப் பொருத்தமான ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறிக்கோள்களை  நிர்ணயியுங்கள்.

முக்கியமான விஷயம், உங்களுக்குப் பிடித்த விஷயத்தைத்தான் குறிக்கோளாக நிர்ணயிக்க வேண்டும். பெற்றோர் சொன்னார்கள் என்றோ, நண்பன் சொன்னான் என்றோ, உங்களுக்குப் பொருத்தம் இல்லாத குறிக்கோளை நிர்ணயிக்கக் கூடாது. உங்களுக்கு நீங்களே உண்மையாக இருப்பதே சிறந்தது.

அப்புறம் என்ன? இலக்கை நோக்கி அம்பை விடுங்கள்!

                   (கற்போம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு