Published:Updated:

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

##~##

பவித்ரா, திருவாரூர்-விஜயபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி. தனது செயல்களால் ஆசிரியர்களின் உள்ளத்தைக் கவர்ந்தவள். இதோ, பவித்ரா பற்றி பேசும் ஆசிரியர்கள்...

முத்துலட்சுமி (தலைமை ஆசிரியை): ''தினமும் பள்ளிக்கு 8.45 மணிக்கு வந்து, தன்னால முடிஞ்ச வேலைகளைச் செய்வாள்.  வகுப்பறையில் காலநிலை அட்டவணை, தேதி, கிழமை, வருகைப் பதிவேடு எழுதுவது என எல்லாவற்றையும் அக்கறையோடு செய்வாள். சின்ன வயசுல இவ்வளவு அக்கறை உள்ள பிள்ளையப் பார்த்தா யாருக்குத்தான் பிடிக்காது?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேன்மொழி (உதவித் தலைமை ஆசிரியை): ''இந்தப் பள்ளியில் சேர்ந்த நான்கு வருடங்களில் ஒரு முறைகூட விடுமுறை எடுத்தது இல்லை. இதுக்காக ஒவ்வோர் ஆண்டு விழாவிலும் சிறப்புப் பரிசு பவித்ராவுக்குதான். பள்ளி விளையாட்டுப் பொருட்களைக் கவனமாகப் பயன்படுத்துவாள். மற்ற மாணவர்கள் பயன்படுத்தும்போதும் கவனமாகப் பார்த்துப்பாள்.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

ஏ.கவிதா (பயிற்சி ஆசிரியர்) : ''நடனம், ஓவியம், பாடல், படிப்பு என எல்லாவற்றிலும் சுட்டி. பெரியவர்களிடம் மரியாதையாகப் பழகுவாள். வகுப்புக்கு ஆசிரியர் செல்லத் தாமதமானால், அவளே வகுப்பை அமைதிப்படுத்தி அனைவரையும் எழுதப் படிக்கச் செய்வாள். அனைத்து மாணவர்களிடமும் நட்புடன் இருப்பாள். யாராவது உதவி கேட்டால், தன்னிடம் இல்லை என்றாலும் மற்றவர்களிடம் கேட்டு வாங்கித் தருவாள்.''

வெண்ணிலா (பயிற்சி ஆசிரியர்) : ''தன்னைவிட வயதில் சிறியவர்களிடமும் மரியாதையாக  நடந்துகொள்வாள். நாங்கள் கொடுக்கும் வீட்டுப் பாடங்களைப் பள்ளி நேரத்திலேயே நண்பர்களோடு சேர்ந்து முடித்துவிட்டு, கூடுதல் வீட்டுப் பாடம் கேட்கும் அளவுக்கு ஆர்வமாகச் செயல்படுவாள்.''

வி.கவிதா (இணைப்பு மைய ஆசிரியர்): ''சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, மாதாந்திர விழா எனப் பள்ளிப் பொது விழாக்களின்போது, எட்டாம் வகுப்பு மாணவிகள்கூட முன்வந்து ஏற்பாட்டு வேலைகளைச் செய்யத் தயங்குவார்கள். ஆனால், சின்னப் பெண்ணாக இருந்தாலும் ஆர்வத்தோடு எல்லா வேலைகளையும் பவித்ரா செய்வாள். நிகழ்ச்சிக்குத் தேவையான மலர்களைச் சேகரித்து வந்து, மேடையை அலங்கரிப்பதில் கெட்டிக்காரி. பவித்ரா தன் வயதையும் தாண்டிப் பொறுப்போடும் அக்கறையோடும் செயல்படுவதில் நம்பர் ஒன்.''

மா.நந்தினி படம்: ஜெ.ராம்குமார்

'கணக்கு என்றால் பிணக்கு’னு பலரும் சொல்வாங்க. ஆனா, சத்தியநாராயணன் சார் கிளாஸ் எடுத்தால், 'மேத்ஸ் நமக்கு தோஸ்த்’னுதான் சொல்லத் தோணும். இப்படி ரைமிங்காகப் புகழ்மாலை சூட்டுகிறார்கள், திருச்சி, சையது முர்தாசா அரசினர் மேல்நிலைப் பள்ளியின் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள்.

காயத்ரி: ''எனக்கு ஆரம்பத்தில் கணக்கு பிடிக்காது. சத்தியநாராயணன் சார் எல்லாக் கணக்குகளையும் நாங்களே போடுற மாதிரி சொல்லித்தருவார். எல்லாப் பசங்களுக்கும் புரிஞ்சதுக்கு அப்புறம்தான் அடுத்த கணக்குக்குப் போவார். அவர்கிட்ட படிச்ச எல்லாருமே பாஸ்தான்.''

ஹரிஹரன்: ''எனக்கு ஆங்கிலம் சரியா வராது. எப்பவுமே அந்தப் பாடத்துல தோல்விதான். ஒரு தடவை என்னோட மார்க் ஷீட்டைக் கவனிச்ச சார், என்னைக் கூப்பிட்டு நிறைய டிப்ஸ் சொன்னார். தினமும் ஆங்கிலச் செய்தித்தாளைப் படிக்கச் சொல்லி, டிக்ஷனரி எப்படிப் பயன்படுத்துறதுனு சொல்லித் தந்தார். நான் இங்கிலீஷ்ல நல்ல மார்க் வாங்க அவர்தான் காரணம்.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

மீனா: ''கிளாஸ் டெஸ்ட்ல நல்ல மார்க் எடுத்தாக்கூட  சாக்லேட் வாங்கித் தருவார். ஒரு முறை எங்க எல்லார்க்கிட்டயும் 'வருங்காலக் கனவு என்ன?’னு கேட்டார். 'நான் கலெக்டர் ஆவேன்’னு சொன்னேன். அதுக்குப் பொது அறிவு நிறைய வேணும்னு அறிவுரை சொன்னவர், எனக்குப் பொது அறிவுப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். நாட்டுநடப்பைப் பத்தி எனக்கு இப்ப நல்லாவே தெரியும்.''

சதாம் உசேன்: ''ஒரு தடவை பசங்களோட சண்டை போட்டதால எனக்கு அடிபட்டது. அவர்தான்  முதலுதவி செஞ்சு, ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனார். காயம் ஆறினதும் என்னைத் தனியாக் கூப்பிட்டு அறிவுரை சொன்னார். இப்ப நான் யார்கூடவும் சண்டைபோடுறது இல்லை.''

ஷர்மிளா: ''நாங்க யாராவது தப்பு செஞ்சா, உடனே கண்டிப்பார். ஆனா, திட்ட மாட்டார். நாம செஞ்சது ஏன் தப்புன்னு நிதானமா விளக்குவார். அதைக் கேட்டதுக்கு அப்புறம் யாரும் அந்தத் தப்பை மீண்டும் செய்ய மாட்டாங்க. இப்படி ஒரு சார் கிடைச்சதுக்குக் கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்.''

அஹமத்: '' காலையில நான் சாப்பிட மாட்டேன். மதியம் மட்டும்தான் சாப்பிடுவேன். ஒரு தடவை கிளாஸ்ல மயங்கி விழுந்துட்டேன். சார் என்னைப் பத்தி விசாரிச்சுட்டு, எனக்குத் தினமும் டிஃபன் வாங்கித் தந்தார். அப்புறம், நானே வீட்ல காலை உணவு சாப்பிட ஆரம்பிச்சுட்டேன். 'சாட்டை’ படத்துல வர்ற சமுத்திரக்கனி சார் மாதிரி எங்க சத்யநாராயணன் சார்.''

பி.விவேக் ஆனந்த்  படம்: தே.தீக்ஷித்