Published:Updated:

முத்தான கையெழுத்து !

தூரிகை சின்னராஜ் தி.விஷய்

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

'ஒவ்வொரு பயணமும் ஒற்றை அடி எடுத்துவைத்துதான் துவங்குகின்றது. ஆனால், அடுத்தடுத்து எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியையும் யோசித்துப் பதித்தால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்.’ என்கிறது சீனத்து முதுமொழி.

தாஜ்மஹால்கூட ஒற்றைக் கல்லில் ஆரம்பித்ததுதான். அடுத்தடுத்த கற்கள் மிகவும் ரசித்து அழகியலுடன் கட்டப்பட்டவை. முதல் எழுத்து எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கடைசி எழுத்தும் முக்கியமானது. தேர்வு எழுதும்போது முதல் பக்கத்தில் அழகாய் ஆரம்பிக்கும் நாம், கடைசிப் பக்கத்தில் கிறுக்கிவிடுவோம். காரணம், நேரம் இல்லாமை.

மாணவர்களிடம் இன்னொரு வழக்கமும் இருக்கிறது. கையெழுத்துப் பயிற்சி நோட்டில் அழகாய் எழுதுவார்கள். மற்ற நோட்டுப் புத்தகங்களில் அப்படி எழுத அக்கறை எடுக்க மாட்டார்கள். கேட்டால், நேரம் போதவில்லை என்பார்கள்.

முத்தான கையெழுத்து !

நேர மேலாண்மை என்பது நம்மில் பலருக்கும் பெரிய விஷயமாகவே தோன்றுவது இல்லை. இரண்டு மணி நேரத் தேர்வை எழுத, நம் கையெழுத்தின் வேகம்கொண்டு திட்டமிடல் வேண்டும். மாதிரித் தேர்வுகள் எழுதும்போது இந்தக் குறைபாட்டைச் சரி செய்துகொண்டால், சிகரம் தொடுவது சுலபமே.

பொதுவாக ஆரம்பத்தில் வேகம் கூடாது. நமது இப்போதைய நோக்கம் அழகாய் எழுதுவது மட்டுமே.  அழகாய் எழுத முடியாமல் போவதற்குக் காரணங்கள் உண்டு. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போதும், தூங்காமல் அதிக நேரம் கண்விழித்து எழுதும்போதும் நிச்சயம் தெளிவாக எழுத இயலாது. பசியுடன் இருக்கும்போது  கையெழுத்து சிதைய வாய்ப்பு உள்ளது. மனதில் குழப்பம், பதட்டம், பயம் இருந்தாலும் கையெழுத்தில் தெளிவு இருக்காது.

தொடர்ச்சியாகப் பல மணி நேரம் எழுத நேரிட்டாலும் கையெழுத்து அழகாய் அமையாது. எனவே, தேர்வின்போது இடையில் ஒரு நிமிடம் ஓய்வு எடுங்கள். இந்த ஓய்வு நேரத்தில் வினாத்தாளைப் படிக்கலாம். அல்லது எழுதிய விடைகளின் தலைப்புகளுக்கு அடிக்கோடு இடலாம். தண்ணீர் குடிக்கலாம். இதனால், உற்சாகமும் புத்துணர்வும் பிறக்கும். தொடர்ந்து தெளிவாய் எழுத முடியும்.

முத்தான கையெழுத்து !

தொடர்ச்சியாக வீட்டுப் பாடம் எழுதும்போது உடல் சோர்வு அடைந்து, கையெழுத்தை மோசமாக்கும். அந்தச் சந்தர்ப்பங்களில், வேறு வேலைகளில் ஈடுபட்டு பிறகு எழுதலாம். வாசல் வரை ஒரு குட்டி நடை, மேஜை விரிப்புகளைச் சரிசெய்வது போன்றவை செய்யலாம். நினைவு இருக்கட்டும், இத்தகைய இடைவெளி ஓரிரு நிமிடங்களைத் தாண்டக் கூடாது.

அதிக இரைச்சல் உள்ள இடமும் அழகாய் எழுதுவதைப் பாதிக்கும். எனவே தொலைக்காட்சி, ரேடியோவின்  அதிக ஒலி இல்லாத இடத்தில் அமர்ந்து எழுதிப் பழகுங்கள். நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள இடத்தில் உட்கார்ந்து எழுதுவதும் முக்கியம். வலது கையால் எழுதுபவர்கள் இடது பக்கம் இருந்து வெளிச்சம் வருமாறும், இடது கையால் எழுதுபவர்கள் வலது பக்கம் இருந்து வெளிச்சம் வருமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முத்தான கையெழுத்து !

நாம் அமர்ந்து எழுதும் மேசை, நாற்காலியின் உயரமும் அவரவர் வயது மற்றும் உயரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும்.  பெரியவர்கள் அமரும் நாற்காலியில் அமர்ந்து பயிற்சி மேற்கொள்ளுதல் கூடாது. சிறுவர்களுக்காவே உயரத்தைக் கூட்டிக் குறைக்கும் ஸ்டடி டேபிள்கள் கிடைக்கின்றன. உங்கள் உயரத்துக்கு ஏற்றபடி அவற்றை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். மேசை, நாற்காலியில் அமர்ந்தாலும் சரி, தரையில் அமர நேரிட்டாலும் சரி, நம் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். படுத்துக்கொண்டு எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.

பள்ளியில் எழுதும்போது, நமக்கு இருபுறமும் இருக்கும் மாணவர்களுக்கும், நமக்கும் போதிய இடைவெளி இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும், நெருக்கிக்கொண்டும் எழுதாதீர்கள். நல்ல சூழலே நம் கையெழுத்தைச் செம்மைப்படுத்தும்.

எழுதத் தொடங்கும் முன் பதட்டம் இன்றி இருக்க சிறிய தியானம் செய்யலாம். அல்லது நம் மனதை ஒருமுகப்படுத்தும்  கடவுள் வாழ்த்து ஒன்றை மனதிற்குள் பாடலாம். இங்கே கொடுத்து இருக்கும் சிறு சிறு படங்களை வரைந்து பயிற்சி செய்யலாம். நிதானமும் நேர மேலாண்மையுமே நேர்த்தியான கையெழுத்துக்கு அடிப்படைத் தகுதிகள்.

                                                   (எழுதுவோம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு